செய்திகள்

வான்வெளி விபத்துகள்: இதுவரை உயரிழந்த 15 க்கும் மேலான சர்வதேசத் தலைவர்கள்

Makkal Kural Official

சென்னை, மே 20–

ஈரான் பிரதமர் இப்ராகிம் ரைசிக்கு முன்னதாக, ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்தில் உயிரிழந்துள்ள பல சர்வதேச தலைவர்கள் பற்றி பார்ப்போம்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்வதேச தலைவர்கள் கூட விபத்தில் உயிரிழந்த விபத்துகள் அரங்கேறியுள்ளன.

சர்வதேச தலைவர்கள் பட்டியல்

1940 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ந்தேதி அட்லாஸ் பகுதியில் விமான விபத்தில் சிக்கி, பராகுவேவின் அதிபராக இருந்த ஜோஸ் ஃபெலிக்ஸ் எஸ்டீகேரிபியா உயிரிழந்தார். பிலிப்பைன்ஸின் அதிபராக இருந்த ரமோன் மகசேசே, 1957 ஆம் ஆண்டு மார்ச் 17 ந்தேதி செபு பகுதியில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 1958ம் ஆண்டு ஜுன் 16ம் தேதி பிரேசில் அதிபராக இருந்த நேரு ரமோஸ், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அதேபோல், ஈராக் அதிபராக இருந்த அப்துல் சலாம் அரிஃப், 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ந்தேதி பாக்தாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 1967 ஆம் ஆண்டு ஜுலை 17ம் தேதி, பிரேசில் அதிபராக இருந்த ஹம்பெர்டோ டெ அலென்சர் கேஸ்டிலோ பிரான்கோ, ஃபோர்டலெஜா பகுதியில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பொலிவியா அதிபராக இருந்த ரெனே பேரின்டோஸ், 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி ஆர்க் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பாகிஸ்தான் அதிபர் பலி

யூகோஸ்லோவியாவின் பிரதமராக இருந்த டிஜெமல் பிஜெடிக், 1977ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். போர்ச்சுகல் பிரதமராக இருந்த பிரான்சிஸ்கோ டி சா கார்னிரோ, 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ந்தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். பாகிஸ்தான் அதிபராக இருந்த முகம்மது ஜியா-உல்-ஹக், 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ந்தேதி பஹவல்பூரில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 1987 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி லெபனான் பிரதமராக இருந்த ரஷீத் கராமி, உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த, டாக் ஹம்மர்ஸ்க் ஜோல்ட் 1961 ஆம் ஆண்டு எண்டோலா பகுதியில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று மடகாஸ்கர், போலந்து, சிலி போன்ற பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், விமான விபத்தில் உயிரிழந்த சம்பவமும் வரலாற்றில் அரங்கேறியுள்ளன. இதில் சில எதிர்பாராத விபத்துகளாகவும், சில திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்ற குற்றச்சாட்டுகளும் இன்றளவும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *