சிறுகதை

வான்கோழியும் ஒருநாள் மயிலாகும் – ஆர்.வசந்தா

அரவிந்தனுக்கு பெண் பார்த்தார்கள்.

ஆனால் அவனது ஆதர்ஷ பெண் நடிகை ஷிவானிதான். அவளை மாதிரி புத்திசாலித்தனமும் அழகும் வேறு யாருக்கும் இல்லை என்பது அவனுடைய நினைப்பு. அவளை மாதிரி பெண்பார்த்துச் சொல்லுங்கள் என்று அவனின் அப்பா, அம்மாவிடம் கறாராகச் சொல்லி விட்டான். அவனுக்கு ஏற்றார் போல் இரண்டு மூன்று பெண்கள் கிடைத்தார்கள். அந்தப் பெண்கள் விஷ்ணுவை நிராகரித்துவிட்டனர். அவர்கள் கூறிய காரணங்கள் வேடிக்கையாக இருந்தது. விஷ்ணுவும் மனம் தளராமல்தான் இருந்தான்.

கடைசியாக கஸ்தூரி என்ற பெண் வீட்டில் ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது. மாப்பிள்ளையை பார்க்க வரச் சொன்னார்கள்.

பெண் கொஞ்சம் கிராமியத்தனமாகவே இருந்தாள். அழகும் சற்று கம்மிதான் .படிப்பும் அந்த ஊரில் இருந்த ஹைஸ்கூல் மட்டுமே படித்திருந்தாள். அரவிந்தன் தலைவிதி அவளை மணக்க சம்மதித்தான்.

திருமணம் முடிந்ததும் சென்னைக்கு வந்துவிட்டனர். தனிக்குடித்தனமும் ஆரம்பித்து விட்டனர். தனக்குத் தெரிந்த அத்தனை சுவையான சிற்றுண்டிகளையும் செய்தாள் கஸ்தூரி. எல்லாவற்றையும் சளைக்காமல் தின்பான். ஆனால் எந்தவிதமான விமர்சனங்களையும் சொல்லமாட்டான். தட்டில் வைத்தால் வைத்த அனைத்தையும் காலி செய்து விடுவான்.

காலையில் எழுந்ததும் கூட்டிப் பெருக்கி அழகாக கோலமிடுவாள். அதை ரசிக்கவே மாட்டான். எதையும் ரசனையுடன் பார்க்கவே மாட்டான். ஆனால் அவளுடைய உடைகளை மட்டும் குறை சொல்லுவான். என்னுடைய கனவுக் கன்னி ஷிவானி மாதிரி வருமா என்று கஸ்தூரியை குத்திக் காட்டுவான். ஷிவானியின் போட்டோ வேறு சுவரில் மாட்டி இருப்பான். எந்நேரமும் ஷிவானி புகழ்தான். அழகு நிலையம்சென்று அவள் ஏர் ஸ்டைலை மாற்றினாள் கஸ்தூரி. அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை அரவிந்தன்.

ஒருநாள் தன்னை ஏதாவது சினிமாவுக்கு அழைத்து செல்லும்படி ஆசையுடன் கேட்டாள். தனக்கு நேரமில்லை என்று கூறிவிட்டான். எதிர்வீட்டுப் பெண்ணுடன் போகலாமா என்று அனுமதி கேட்டாள். உடனே சரி என்றும் கூறிவிட்டான். அவளும் அந்த எதிர்வீட்டுப் பெண்ணுடன் போய் பார்த்துவிட்டு வந்தாள். படம் கதாநாயகி ஷிவானி கதாநாயகன் சுகந்தன் நடித்தது.

அரவிந்தனும் அந்த படத்தை வேறு ஒரு தியேட்டரில் பார்த்து விட்டான்.

அவளின் அழகையும் நளினமாக உடையையும் புகழ்ந்தான்.

கஸ்தூரியும் கதாநாயகன் சுகந்தனை அப்படியே அவனுடைய அழகையும் நடையுடை பாவனைகளையும் புகழ்ந்து தள்ளினாள்.

சிலநாட்களில் கதாநாயகன் போட்டோவையும் ஷிவானிக்குப் பக்கத்திலேயே மாட்டியிருந்தாள். அவன் ஷிவானியைப் பாராட்டினால் கஸ்தூரியும் அவளுடன் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் அவனின் நடிப்பைப் புகழ்ந்தாள்.

அரவிந்தனுக்கு சுருக்கென்று குத்தியது. கஸ்தூரியும் அந்தப் படத்தில் நடித்த ஷிவானியைப் போல் டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டாள். என்னயிருந்தாலும் ஷிவானி போல் வருமா என்றான். கஸ்தூரியும் கதாநாயகன் எவ்வளவு அழகு பார்த்தீர்களா. அவனுடைய சுருட்டை முடியும் மேலும் அழகு கூட்டியது என்று சொன்னாள்.

ஒருநாள் திடீரென மாட்டியிருந்த ஷிவானி போட்டோவை குப்பயைில் போட்டான் அரவிந்தன். அவளைப் பற்றி பேசுவதையும் குறைத்துக் கொண்டான்.

கதாநாயகன் சுகந்தன் போட்டோவை கஸ்தூரி தூக்கி எறிந்தாள்.

வீட்டில் எப்போதும் அமைதி நிலவியது.

திடீரென அரவிந்தனுக்கு உடல்நலம் குறைந்தது. டாக்டர் அவனுக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளது. இதற்கு மருந்துகளைக் காட்டிலும் உணவு முறைதான் சீர்படுத்தும் என்று அடவைஸ் பண்ணினார்.

தினமும் ஒரு கீரை சாப்பிட வேண்டும் என்றார். கஸ்தூரிக்கு கீரை சமைப்பது பற்றி தெரியாத விஷயமா தினமும் புதிது புதிதாக அரவிந்தனுக்கு கீரையில் இப்படியும் செய்ய முடியுமா என்று இருந்தது.

கஸ்தூரியிடம் கேட்டான்: இது என்ன கீரை மிகவும் ருசியாக உள்ளதே என்றான். கஸ்தூரி மிகவும் வியப்படைந்தாள். தன்னுடைய சமையலைப் புகழ்ந்தது அன்றுதான். இதன் பெயர் கும்மடிக் கீரை. இது கிராமங்களில் மட்டும் கிடைக்கும். நான் தற்பெயலாக நம் வீட்டிற்கு அருகே படர்ந்திருந்தது. அதனால் இதைப் பிடுங்கி இதை சமைத்தேன் என்றாள்.

மறுநாளும் புதுக் கீரை ஒன்றை சமைந்திருந்தாள். அரவிந்தன் கேட்டான் இது இவ்வளவு மென்மையாக உள்ளதே இதன் பெயர் என்ன என்றான்.

கஸ்தூரி சொன்னாள். இதன் பெயர் வெள்ளைக் கீரை என்றாள். சில நாட்களிலேயே அரவிந்தனுக்கும் மஞ்சள் காமாலையும் குறைந்து விட்டது என்று டாக்டர் கூறினார். அரவிந்தனிடம் ஷிவானியின் பேச்சே இப்போதெல்லாம் கிடையாது. கஸ்தூரிதான் அவனின் கதாநாயகி, அவளின் ஒவ்வொரு செயலையும் புகழுவான். கஸ்தூரியும் அவனின் அன்பில் மூழ்கினாள்.

இதுதான் அவர்களின் வாழ்க்கையின் வெற்றி ரகசியமாக மாறியது. கஸ்தூரியும் அவனை அவன் போக்கிலேயே போய் திருத்தி வெற்றி பெற்றாள்.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *