சிறுகதை

வானில் பறந்த வெண்புறா! – கவிஞர் திருமலை. அ

‘ரைட்ஸ் சாப்ட்வேர்’ நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருபவர் நிஷா.

அன்று புதிதாக சேர வந்த கரன், எதிரில் வந்த நிஷாவைப் பார்த்தவாறு மேலாளர் அறைக்குச் சென்று வேலையில் சேர்ந்தான்.

மதிய உணவிற்கு கேன்டீனில் டோக்கன் வாங்கிக் கொண்டு சாப்பாட்டு டேபிளில் உட்கார்ந்தான் கரன். அங்கு வந்த நிஷாவும் சாப்பாட்டு பையுடன் எதிரில் அமர்ந்தாள்.

‘நீங்க புதுசா?’ நிஷா கேட்டாள்.

‘ஆமா; இன்னிக்குதான் சேர்ந்தேன்’.

பிறகு எதுவும் பேசவில்லை. கிளம்பி விட்டனர்.

மறுநாள் அதே மதிய உணவு வேளை; கரனும் நிஷாவும் எதிரெதிரே அமர்ந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘உங்களோடு சாப்பிட யாரும் வருவதில்லையே?’ இது கரன்.

‘அதில் இரகசியம் இருக்கிறது. நீங்களே தெரிந்து கொள்ளுங்கள், என்றாள் நிஷா’.

‘என் பெயர் கரன். நீங்கள்?’

‘நிஷா. இந்த அடையாருதான் என் சொந்த ஊர்’.

‘நானும் பக்கம்தான் தரமணி’ என்று பதிலளித்தான் கரன்;

‘நேற்று அவசர வேலை. வேகமாகச் சென்று விட்டேன். சாரி’ சொன்னாள் நிஷா; ‘பரவாயில்லை’ என்றான் கரன்.

இருவரும் கிளம்பினார்கள்.

தனது சீட்டுக்கு வந்த கரன்,

பக்கத்து சீட்டு நண்பரிடம், ‘நிஷாவின் பொறுப்பு என்ன?’ என்றான்.

நிஷாதான் இந்த கம்பெனியோட ‘பி.ஆர்.ஓ.’ என்பது நண்பனின் பதிலாக இருந்தது.

அந்த நண்பன் தொடர்ந்தான்;

‘3 மாதங்களுக்கு முன்புதான் நிஷாவின் கணவர் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். ஆதரவற்ற பெண்களுக்கு, மத்திய மாநில அரசுகள், வேலை வாய்ப்பில் இதுவரை எந்தச் சலுகையும் செய்யவில்லை.

இருப்பினும் நிஷா ‘பி.இ.’ படித்திருந்ததால் சொந்த முயற்சியில் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நிஷாவுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான்’.

இதைக் கேட்டு அதிர்ந்து போன கரன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஏற்ற பெண்ணாக இருப்பாள் என்று நம்பினான். வீட்டுக்கு சென்றவுடன் தன் அம்மாவிடம் நிஷா வாழ்க்கையை விவரித்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ளும் தனது விருப்பத்தையும் தெரிவித்தான்.

கரனின் அம்மாவும் பெண்ணைப் பார்க்க விரும்பினார். மறுநாள் காலையில் போன் ஒலித்தது. ‘நான் இன்று விடுமுறை; சாப்பிட வரமாட்டேன்’ மறு முனையில் நிஷா பேசினாள்.

‘உங்கள் இரகசியத்தை நேற்றே தெரிந்து கொண்டேன். எனக்கு மனமே சரியில்லை. நானும் இன்று விடுமுறைதான். உங்களோடு நிறையப் பேச வேண்டும்; நாளை சந்திப்போம்’ என்று பதிலுக்கு பேசினான் கரன்.

மறுநாள் மதிய சாப்பாட்டு வேளைக்காக இருவரும் அலுவலகத்தில் காத்திருந்தனர். சாப்பாட்டு வேளையும் வந்தது;

இருவரும் சந்தித்தனர்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

கரன் பேசத் தொடங்கினான்:

‘உங்களைப் பற்றி என் அம்மாவிடம் சொன்னேன். உங்களைப் பார்க்க விரும்பினார்கள். அழைத்து வருவதாகச் சொன்னேன். இன்று போகலாமா?’ என்றான் கரன்.

‘போகலாம்’ என்ற நிஷாவின் பதிலில் மெல்லிய நாணமும் மறைந்திருந்து.

அன்று மாலை இருவரும் ஆட்டோவில் கரன் வீட்டுக்கு சென்றார்கள்.

நிஷாவை அன்போடு வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் கரனின் அம்மா. இருவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேசினார்கள். 2உன்னைத்தான் திருமணம் செய்வேன் என்று கரன் ஒற்றைக் காலில் நிற்கிறான். நீ என்னம்மா சொல்கிறாய்?’

‘எனது அப்பா தனியார் வங்கியில் வேலை பார்த்தார். உடல் நலமில்லாமல் எனது சிறு வயதிலேயே அவர் இறந்து விட்டார். எனக்கு எல்லாமே என் அம்மாதான். அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள்’ என்று சுருக்கமாக பதில் சொல்லிய நிஷா, எல்லோரிடமும் விடை பெற்றாள்.

ஆட்டோ வரை சென்று வழி அனுப்பி வைத்தான் கரன்.

அதே வாரம் விடுமுறை நாளில் கரன் தன் பெற்றோருடன் நிஷா வீட்டுக்குச் சென்றான். எல்லோரையும் எல்லோருக்கும் பிடித்து விட்டது.

திருமண ஏற்பாடுகள் நடந்தது.

ஊரறிய திருமணம் சிறப்பாகவே நடந்தேறியது. முதலிரவு இப்போது வேண்டாம் என்று தங்கள் பெற்றோரிடம் இருவருமே சொல்லி இருந்தார்கள். எனவே அன்றைய முதலிரவு ஒத்தி வைக்கப்பட்டது. பேரனை அழைத்துக் கொண்டு நிஷாவின் அம்மா அனைவரிடமும் விடை பெற்றார். நிஷா தன் மகனை வாரி அணைத்து முத்தமிட்டு வழி அனுப்பி வைத்தாள்.

தங்கள் அறைக்கு வந்த இருவர் கண்களிலும் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கட்டிலில் தனித் தனியே தலை வைத்து அசதியில் தூங்கிவிட்டனர். காலையில் இருவரும் வெளியே சொல்லத் தயாராயினர்.

கரன் தன் பெற்றோரிடம் ‘நிஷாவின் அம்மாவும் பையனும் தனியாக வீட்டில் இருக்கிறார்கள். தனக்கு அம்மா, அப்பா இருப்பதை உணர்ந்து வாழும் வாழ்க்கையைப் பையன் அனுபவிக்க வேண்டும். எனவே நிஷா வீட்டிலேயே தங்கிவிட விரும்புகிறோம். எனவே மற்ற ஏற்பாடுகளை அங்கேயே செய்து கொள்ளலாம்’ என்றான்.

அவனது தந்தை கார் சாவியையும் ஒரு பையில் செலவுக்கு பணமும் கரனிடம் கொடுத்தார். பிறகு இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

சிறிது நேரத்தில் நிஷா வீட்டில் மண மக்களுக்கான அறை சகல வசதிகளோடு அலங்கரிக்கப்பட்டது. கரனின் அப்பா இதை முன் நின்று செய்தார்.

இரவு வந்தது; புது வீடு, புது வாழ்க்கை தனி அறை; அறைக்குள் வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தனர். மெதுவான குரலில் பேசிக் கொண்டே இருவரும் தலையணையில் சாய்ந்தார்கள். அப்போது வெளியே இடி, மின்னலுடன் பலத்த மழை. திடீரென மின் தடை. ஏற்கனவே பயத்தில் இருந்த நிஷா, கரனின் தோளைப் பற்றிக் கொண்டு மிகவும் நெருக்கமானாள்.

கூட்டுக்குள் அடைபட்ட வெண் புறாவைத் தன் இரு கைகளாலும் தூக்கி வானத்தில் பறக்கவிட்ட மகிழ்ச்சியில் கரனும் அவளைக் கட்டியணைத்து முத்த மழை பொழிந்தான்.

வெளியே மழை ஓய்ந்தாலும் அறைக்குள் வளையல் சத்தமும் கொலுசு சத்தமும் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.