செய்திகள்

வாணவேடிக்கையுடன் பாரா ஒலிம்பிக் தொடக்கம்

டோக்கியோ, ஆக. 25–

மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்சில், 162 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் நடைபெறும் 539 பதக்க போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த தொடருக்கான தொடக்க விழா டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியை ஜப்பான் மன்னர் நருஹிடோ முறைப்படி தொடங்கி வைத்தார். ‘எங்களுக்கு சிறகுகள் உள்ளன’ என்ற கருத்தின் அடிப்படையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சர்க்கஸ் போன்ற சூழலில் இசை, நடனம், வாணவேடிக்கை என்று ஜப்பான் கலைஞர்கள் அமர்க்களப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, போட்டியில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த குழுவினர் அரங்கத்துக்குள் அணிவகுத்து வந்தனர். தனிமைப்படுத்திலில் உள்ளதால், தொடக்கவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி தலைமை வகிக்க, இந்திய குழுவினர் உற்சாக நடைபோட்டனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் கணவர் டக்ளஸ் எம்ஹாப், சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் உள்பட பிரபலங்கள் பலர் தொடக்கவிழாவில் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகள் இன்று முதல் செப். 5ம் தேதி வரை நடைபெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *