சிறுகதை

வாட்ஸ் அப் குரூப்| ராஜா செல்லமுத்து

எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் துரை குடும்பம் ஒன்று சேர்வதாக தெரியவில்லை.

துரை குடும்பத்தில்…….

நான்கு மகன்கள், 4 மகள்கள் பேரன் பேத்திகள்; உற்றார் உறவினர்கள் என்று நிறைய பேர் வசிக்கும் குடும்பத்தில் சிக்கல்களும் நிறையவே இருந்தன.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணப்பட்டார்கள்.

திருமணம் முடிக்கும் வரைக்கும் ஒன்றாக இருந்த குடும்பம் , திருமணம் முடித்த பிறகு திசைக்கொருவராக பிரிந்துகொண்டார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு வழி. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை, ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை. ஒவ்வொருவருக்கும் ஒரு பேச்சு; இப்படி எல்லோருடைய சிந்தனைகளும் வெவ்வேறாக இருந்ததால் அந்த குடும்பத்தில் ஒற்றுமை சரிந்து விழுந்துகிடந்தது.

முன்பு ஒரு தாயின் பிள்ளைகளாக இருந்த துரையின் குடும்பம் , மகன் மகள்களுக்கு திருமணம் என்று வெளியிடங்களில் இருந்து, வந்த மாப்பிள்ளைகளும் பெண்களும் அந்த குடும்பத்தை சுக்குநூறாக உடைத்தார்கள்.

வீட்டுக்கு வந்த மருமகள் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று அடம் பிடித்தார்கள் .

வீட்டிற்கு வெளியே மாப்பிள்ளை கட்டி போன பெண் குழந்தைகள் கூட துரையின் குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை” என்ற நிலையிலேயே அந்த குடும்பம் இருந்தது.

முன்பெல்லாம் நிலாச்சோறு என்று துரையின் மனைவி கஸ்தூரி அம்மா சமைத்து ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சோற்றை உருண்டையாக உருட்டி கொடுப்பாள். அந்த சுகமே அத்தனை குழந்தைகளுக்கும் அலாதியான பிரியம். ஆனால் இன்று திசைக்கொன்றாய் சிதறிய குடும்பங்கள் ஒட்டு உறவின்றி வெவ்வேறாக இருந்தார்கள்.

ஒரே கொடியில் பூத்த மலர்களாய், கிளைகள் எங்கெங்கோ பரவியிருந்தாலும் அதன் வேர்கள் இருப்பது ஒரே இடத்தில் தான் என்பதைப்போல துரையின் குடும்பத்தார்கள் மனதில் அன்பு இருந்தது.

ஆனால் கிளைகள் போலவே வெவ்வேறு திசைகளில் அது விரிந்து இருந்தது .எவ்வளவு முயற்சி செய்தும் பிரிந்து போன குடும்பத்தை ஒட்ட வைக்கவே முடியவில்லை.

ஆனால் அந்த குடும்பம் எப்படி இருந்தது என்று அந்த தெருவில் இருந்தவர்களுக்கும் அந்த ஊரிலிருந்த ஒவ்வொருவனுக்கும் அத்துபடி என்னையா துரை குடும்பம் எவ்வளவு ஒற்றுமையா இருந்தார்கள். நல்லா இருந்த குடும்பத்தை இப்பிடி பிரிச்சு புட்டாங்க.

என்ன செய்றது அஞ்சு விரல் ஒன்று போல இல்லையே .அவங்கவங்க வந்தாங்க, அவங்க வந்து பிரிச்சாங்க.

ஒட்ட வைக்கிறது ரொம்ப கஷ்டம்பா. இது அவ்வளவுதான் உடைந்துபோன கண்ணாடிதான் என்று ஆளாளுக்கு கட்டியம் கூறினார்கள்.

சித்தப்பா பெரியப்பா வேறு ஒரு திசைக்கு முடிவு எடுப்பார்கள். அத்தை, மாமா இப்படி எல்லோருடைய மனதிலும் வேற்றுமை வேறு ஒன்றாய் நின்று கொண்டிருந்தது.

எண்ணினால் நூறு இருநூறு பேர் குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள் துரையின் குடும்பத்தின் அவ்வளவு மனிதர்களும் மனது வேறுபட்டு யார் யாரோ என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இத்தனையும் சேர்த்து மொத்த உறுப்பினர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டுமே என்ன செய்வது முன்பு இருந்தது போலவே இந்த சிதறிய குடும்பத்தை ஒன்றாக வேண்டுமே என்று அந்தக் குடும்பத்தில் பிறந்த கடைக்குட்டி செல்வம் சிந்தித்தான்.

என்ன செய்வது என்று முடிவெடுத்தான்.

உறவுகளை எல்லாம் பேசிப் பார்த்தும் ஒட்டாத உறவுகளை எப்படியாவது ஒட்ட வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்தான் செல்வம். அவனுடைய செல்போனில் உறவுகள் அத்தனை பேர்களின் செல் நம்பர் இருந்தன. அத்தனையும் கொண்டு துரை குடும்பம் என்று ஒரு வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கினான். அந்த வாட்ஸ்அப் குரூப்பில் துரையின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் சேர்த்தான். பேசியவர்கள், பேசாதவர்கள் சண்டை போட்டவர்கள், புறம் பேசியவர்கள், துரோகம் செய்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள் இப்படி எத்தனையோ பிரச்சனைகளில் இருந்த மொத்த உறுப்பினர்களின் செல்போனை எடுத்து துரை குடும்பம் என்று ஒரு வாட்ஸ் அப்பை உருவாக்கினான்.

இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்கள் யாரிடமும் அவன் கேட்கவில்லை. மொத்தமாக அத்தனையும் அந்த குரூப்பில் கொண்டு வந்தான். உறவுகளால் பிரிந்து கிடந்த அந்த குடும்ப நபர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்திருந்தார்கள்.

அந்த வாட்ஸ்அப் குரூப்பில் கூட்டுக் குடும்பத்தின் நிலை, கூட்டுக் குடும்பம் எப்படி இருக்கவேண்டும், குடும்பத்தோடு வாழ்ந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்றெல்லாம் சில செய்திகளை போட்டான் செல்வம்.

அந்த குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள், திருமணநாள் என்று நல்ல நாட்கள் வரும் பொழுது அந்த துரை வாட்ஸ்அப் குரூப்பில் அத்தனையும் பகிர்ந்தான். இது பேசாத ஒவ்வொரு குழுவிலும் செல்போனிலும் போய் சேர்ந்தது.

எல்லோரும் வாசித்தார்கள். ஒவ்வொரு செய்தி வாசிக்கும் போதும் அந்த குடும்ப உறுப்பினர்களின் உள்ளம் லேசாக இளகியது. ஒருவருக்கு ஒருவர் முகம் பார்க்காமலேயே வாழ்த்து செய்திகளுக்கு பதில் சொல்வதும் பதில் போட்டவர்களுக்கு திரும்ப பதில் சொல்வதுமாய் வளர்ந்தது அந்த பேசாத குடும்பத்தின் துரை வாட்ஸ்அப் குரூப்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அந்த துரை வாட்ஸ்அப் குரூப் மனிதர்கள் ஒன்று சேராவிட்டாலும் மனங்கள் ஒன்று சேர்ந்தன .

செல்வத்திற்கு இனி இந்த குடும்பத்தை சேர்த்து விடலாம் என்ற எண்ணம் ஓரளவுக்கு நிறைவேறியது.

காலை வணக்கம் சொல்வது, மாலை வணக்கம் சொல்வது, ஏதோ ஒரு நாட்கள் என்றால் கவிதைகள் எழுதுவது, என்று செல்வம் அந்த வாட்ஸ்அப் குரூப்பை பிரிந்துபோன குடும்பத்தை இணைக்கும் ஒரு பாலம் ஆகவே பயன்படுத்தினான். முதலில் வேண்டாவெறுப்பாக இருந்த அந்த உறவுகள் பின் வாட்ஸ்அப் குரூப்பில் அத்தனையும் சேர்த்தது.

இனி என்ன ஆகப்போகுது விடுங்க ஒரு வாழ்த்து செய்தியை போட்டு விடுவோம் என்று பிரிந்து போன குடும்பங்கள் வாட்ஸ் அப்பில் செய்திகளை பரிமாறிக் கொண்டார்கள்.

ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாவிட்டாலும் பார்த்துக் கொண்டது போலவே அவர்கள் மனங்கள் சொல்லியதை வாட்ஸ்அப் குரூப் சொல்லியது. இப்போது மொத்த குடும்ப உறுப்பினர்களும் எங்கெங்கோ பிரிந்து கிடந்த அவர்களின் மனங்கள், ஒரு புள்ளியில் நின்றது. இப்போதெல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் ஒரு வாட்ஸ்அப் செய்தி போட்டால் அதை பாராட்டுவதும் அதை பகிர்வதும் அதைக் கொண்டாடுவதுமாய் பிரிந்து போன குடும்பங்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு எழுத ஆரம்பித்தார்கள்.

மனிதர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சேர்க்க முடியாத குடும்பத்தை செல்வம் வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்தான்.

இப்போது அந்த குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களும் ஒன்று கூடி சேர்வது என முடிவு செய்தார்கள்.

ஒரு தேதியை வாட்ஸ்அப் குரூப் இலேயே பதிவு செய்தான் செல்வம் குலதெய்வ சாமி கும்பிடு பிரிந்து போன அத்தனை குடும்பத்தையும் ஒரே புள்ளியில் இணைத்தான் செல்வம். அன்று திசைக்கொன்றாய் சிதறிக்கிடந்த குடும்பங்கள் குலதெய்வக் கோயிலில் ஒன்று கூடினார்கள் .

*

அதுவரை பார்க்காத முகங்கள் அன்று பார்த்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள். ஆறுதல் சொன்னார்கள்; சிலருக்கு வார்த்தைகளே வரவில்லை; கண்ணீர் மட்டுமே பேசியது . சிலரின் குழந்தைகள் பிறந்ததைக் கூடச் சில குடும்பங்களுக்கு தெரியாமல் இருந்தது,

குழந்தைகளை தூக்கி கொஞ்சினார்கள். நலம் விசாரித்தார்கள். அங்கே ஒரு பாச மழை பெய்து கொண்டிருந்தது.

பிரிந்துபோன மொத்த குடும்பத்தையும் சேர்த்த செல்வத்தை துரை குடும்பத்தினர் கொண்டாடினார்கள்.

செல்வம் சிரித்துக் கொண்டே சொன்னான் நல்லா இருந்த குடும்பம் இவ்வளவு உடைஞ்சு போச்சுன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் இதை எப்படி செய்யணும் அப்படின்னு எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்தேன், ஆனா முடியல ஏன் ஒரு துரை குடும்பம் அப்படின்னு ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி உங்களையெல்லாம் சேர்த்துவிடலாமன்னு நினைச்சேன். அதை அப்படியே நடந்திருச்சு. உண்மையிலேயே சாமிக்கு நன்றி சொல்வதை விட இந்த வாட்ஸ் அப்ப தான் நான் சாமியா கூப்பிடனும் என்று செல்வம் சொன்ன போது , அங்கே இருந்த ஒரு பெரியவர் சொன்னார் :

தம்பி அந்த வாட்ஸ்அப் குரூப்பவே உருவாக்க சொன்னது இந்த கடவுளின் கட்டடளை என்று எல்லாத்துக்கும் ஒரு உந்துதல் இருக்கு தம்பி. மனசே இல்லாத ஒரு செல்போன் மனசு இருக்கிறவங்க எல்லாம் சேர்த்தது. இதுதான் நீங்க கும்பிட்ட சாமியோட மகிமை . இனி இந்த குடும்பம் ரொம்ப நல்லாவே இருக்கும் என்று வாழ்த்தினார் அந்தப் பெரியவர்.

அந்த குல தெய்வ சாமி கும்பிட்டு வந்த துரை குடும்பத்தினர்கள் ஒருவருடன் இன்னொருவர் சேர்ந்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டு செல் போனில் செல்பி எடுத்துக் கொண்டு தங்கள் அன்பை பரிமாறினார்கள். தழுவினார்கள், முத்தமிட்டார்கள்.

இவ்வளவு நாட்களாய் பிரிந்து கிடந்த அந்த பாசப்பிணைப்பு இப்போது ஒட்டிக்கொண்டது.

துரை குடும்பம் என்ற அந்த வாட்ஸ்அப் குரூப்பில் அன்று பாச மழை பெய்து கொண்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *