கர்னாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர், ஜூன் 6–
கர்னாடகாவில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்னாடக சட்டசபை தேர்தலின் போது, 200 யூனிட் இலவச மின்சாரம்; குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்; குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி, வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 1,500 ரூபாய் ஊக்கத்தொகை; மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் என ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது.
அதன்படி, தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்ததும் இந்த ஐந்து வாக்குறுதிகளையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, ஜூலை 1–ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள இலவச மின்சாரம், யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த நிலையில்,
இது குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சித்தராமையா, ‘கர்னாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என தெரிவித்தார்.