புதுடெல்லி, ஆக. 16–
இன்று வாஜ்பாய் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1996ல், 13 நாட்கள்; 1998 முதல் 13 மாதங்கள்; 1999 – 2004 வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். அவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பிற மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சேவையை அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– வாஜ்பாயின் நினைவு நாளில் நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவரது அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்க அனைவரையும் அவரது பணி ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
![]()





