முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி, மார்ச்.31-
‘‘வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் புதுச்சேரியில் அரசு விழாவாக கொண்டாடப்படும்’’ என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
‘‘புதுச்சேரி நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டியது அவசியமானது. தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் செயல்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக சுட்டிக்காட்டினார்கள். அவர்களது குறைகளை போக்கும் அளவுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புதிய சட்டமன்றம் கட்டும் எண்ணமும் இந்த அரசுக்கு உள்ளது. எந்த இடத்தில் கட்டுவது என்பது தொடர்பாக முடிவு செய்து இந்த ஆண்டு அதற்கு அடிக்கல் நாட்டப்படும். புதுவை அரசுத்துறைகளில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. அதை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கிராமப்புறத்தில்
பொது ஆஸ்பத்திரி
கடந்த ஆட்சியின்போது அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி அரசு சம்பளம் பெற்ற பொதுப்பணித்துறை, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணி நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும். கிராமப்புறத்தில் அரசு பொது ஆஸ்பத்திரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
மறைந்த தலைவர்களான வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா, புதுவை தலைவர் செல்லான் நாயக்கர் ஆகியோருக்கு சிலை வைக்கவேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர். அவர்களுக்கு சிலை வைப்பது என்பது தற்போதைய நிலையில் இயலாத காரியம். எனவே அவர்களது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். அவர்களது நினைவு நாளும் அரசு சார்பில் அனுசரிக்கப்படும்’’.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.