செய்திகள்

வாசகரின் பாராட்டுடன் ‘மக்கள்குரல்’ பொன்விழா மக்கள்குரலின் பயணம் தொடர்கிறது

பொன்விழா காணும் ‘மக்கள்குரல்’ பத்திரிகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கடிதத்தை துவக்குகிறேன்.

மக்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட வேண்டிய காலங்களில் புரட்சிகள் தோன்றும். அப்படிப்பட்ட காலக்கட்டங்களில் புதிய பத்திரிகைகள் தோன்றுவது வரலாற்றின் கட்டாயம்.

அப்படி தோன்றி நிலைத்து இப்போது பொன்விழா காணும் ‘மக்கள்குரல்’ பத்திரிகை என்றால் மிகை ஆகாது.

‘மக்கள்குரல்’ உருவான நேரத்தில் தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் உருவானது என்பது வரலாறு. ‘மக்கள்குரல்’ : என்னுள்

நுழைந்தது எப்படி?

1983ம் ஆண்டு 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பல பத்திரிகைகள் பற்றிய விவரங்கள் தெரிய வர ஆரம்பித்தது. அப்போது என் தந்தையார் வேலையை முடித்துவிட்டு வரும்போது அவருடன் நானும் வருவேன். லஸ் கார்னரில் உள்ள நேரு நியூஸ் மார்ட் கடையில் ‘மக்கள்குரல்’ பத்திரிகையை வாங்கி என்னிடம் வைத்துக் கொள்ளுமாறு கொடுப்பார். அப்படி அப்படி அறிமுகம் ஆனது தான் ‘மக்கள்குரல்’

அன்று சிறுவனாய் நெஞ்சில் பதித்த ‘மக்கள்குரல்’ இன்று வரை மனதில் அழியாமல் தொடர்ந்து சிரஞ்சீவியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘மக்கள்குரலின்’ பத்திரிகையின் பெயருக்கு இடையில் உள்ள சின்னம் (Logo) ஒரு புரட்சியை நினைவுப் படுத்துவது போல தோன்றியது, என் சிறு வயதில் அன்றே என் மனதில் நுழைந்து விட்டது.

‘மக்கள்குரல்’ : நான் கண்ட அனுபவம் ‘மக்கள்குரலின்’ இந்த நெடிய பயணத்தில் நான் கண் கூடாக கண்ட ஒரு அனுபவம்:

‘மக்கள்குரல்’ தன் கொள்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தை எந்த தயக்கமும் இன்றி மக்களிடம் கொண்டு செல்வதில் சளைக்காமல் வழி நடத்தி சென்றது என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

இந்த சிந்தனை என் உள்ளத்தில் விதையாக விதைத்தது. 1984ஆம் ஆண்டு தேர்தலின் போது தொடர்ந்து நான் படித்த ‘மக்கள்குரல்’ பத்திரிகையின் செய்திகளும், அதிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியின் சிறப்பை விளக்கும் வண்ணம் 2 பக்க விளம்பரமும் மறக்க இயலாத கல்வெட்டாக என் மனதில் பதிந்து விட்டது.

‘மக்கள்குரலைப்’ பொருத்தவரை தான் கொண்ட கொள்கையில் சமரசம் செய்துக் கொண்டதில்லை. 1988ஆம் ஆண்டு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் செயல்பாட்டில் முரண் கண்டு அன்றைய உலக நடப்போடு விமர்சித்த ‘மக்கள்குரலின்’ கட்டுரை நிழல் போல இன்றும் நிழலாடுகிறது.

எம்.எஸ்., டி.ஆர்.ஆர்.

கட்டுரை சிறப்பு

அந்த காலங்களில் எம்.எஸ். (எம்.சண்முகவேல்) டி.ஆர்.ஆர். இருவரின் கட்டுரைகளை படித்த நினைவுகள் இன்னும் நிழலாடுகிறது, மனத்திரையில். தற்போதைய ஆசிரியர் ஆர்.முத்துக்குமாரின் கட்டுரைகள் படிப்பதற்கும், அறிவிற்கு விருந்தாகவும் உலக நடப்பிற்கும் உதவுவதாக உள்ளது.

மிக முக்கியமானது, செய்திகளை வெளியிடும்போது எந்த கலப்பும் இன்றி உண்மையை திரிக்காமல் எந்த அரசியல் காழ்புணர்ச்சியின்றி வெளியிடுவதில் ‘மக்கள்குரலுக்கு நிகர் மக்கள்குரலே.

தினமும் வெளியாகும் சிறுகதைகள் சிறப்பு செய்திகள் அற்புதமானது.

பிற்சேர்க்கை ‘மக்கள்குரலின்’ நட்சத்திர கட்டுரையாளர் டி.ஆர்.ஆரைப் பற்றியும், அவர் சிறப்பை பற்றியும் பத்திரிகை உலகின் மூலம் புரட்சித் தலைவருக்கு தோளோடு தோளாக நின்றதையும் தெரியாமல் இருந்தேன்.

பல காலம் கழித்து, சோ எழுதிய ‘கூவம் நதிக் கரையிலே’ என்ற அரசியல் விமர்சன நாவலில் எம்.ஜி.ஆர். பற்றிய செய்தியை விவாதிக்க அந்த நாவலின் கதாபத்திரம் மக்கள்குரல் டி.ஆர்.ஆரை சந்தித்து பேசுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும். அப்போது தான் டி.ஆர்.ஆர். எவ்வளவு துணிவாக அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்துள்ளார் எனப் புரிந்து கொண்டேன்.

தொடரட்டும் பயணம்

மீண்டும் ஒரு முறை பொன் விழா காணும் ‘மக்கள்குரல்’ பத்திரிகையை மனம் திறந்து வாழ்த்துகிறேன். தொடர்ந்து பவள விழாவும், நூற்றாண்டு விழாவும் காண ‘மக்கள்குரல்’ வாசகன் என்ற முறையில் உரிமையுடன் வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள

எம்.ஸ்டீஃபன் ரஃபேல்

தரமணி, சென்னை–600 113

அலைபேசி : 9884093570

Leave a Reply

Your email address will not be published.