சிறுகதை

வாங்காதீங்க! – ப.நந்தகுமார்

மகனுக்கு இன்று காலேஜ் பீஸ் கட்ட கடைசி நாள். ஏற்கனவே தன் நிலமையைக் கூறி கடன் கேட்டான் சென்னப்பன். காளிதாசன் தருவதாக தெரிவித்தார்.

அதனால் தன் மகன் செந்திலை அழைத்துக் கொண்டு அவர் வீட்டை நோக்கி தனது டூவீலரில் புறப்பட்டான் சென்னப்பன்.

“வீட்டிலிருந்து மெயின் சாலையை அடையும் வரை ஒத்தையடிப் பாதை என்பதால் மிகவும் மெதுவாகவே வண்டியை ஓட்டி சென்றான் சென்னப்பன்.

“அப்பா ஒரு நிமிடம் வண்டியை நிறுத்துங்கள்” என்ற தனது மகன் செந்திலின் கூக்குரலை கேட்ட அடுத்த நொடியே மெதுவாக தனது இருசக்கர வாகனத்தை ஓரம் கட்டினான். சென்னப்பன்.

வண்டியிலிருந்து வேக வேகமாக இறங்கிச் சென்ற செந்தில் அங்கு குனிந்து கீழே கிடந்த பர்சை எடுத்தான். அதற்குள் அவனை நோக்கி வந்த சென்னப்பன், “ஆமா எதற்கு வண்டியை நிறுத்த சொன்னே?” என செந்திலை பார்த்து கேட்டான்.

“அப்பா இங்க பாருங்க” என தன் கையில் இருந்த பர்ஸை காண்பித்தான்.

” அப்பர்ஸில் என்ன இருக்குன்னு பார்?” என அப்பா கேட்டார்.

மணிப்பர்ஸை திறந்து பார்த்த செந்திலுக்கு உள்ளே இரண்டாயிரம் ரூபாய் தாளில் ஏழு, ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், விசிட்டிங் கார்டு, அது போக நானூற்று நாற்பது பணம் உதிரியாக இருந்தது! அதைப் பார்த்த செந்தில் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி.

“அப்பா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அந்த ஆண்டவனே நமக்கு உதவி செஞ்சிருக்கான்.” என மகன் சொல்லும் போதே,

“அது தப்புப்பா… நம்மள மாதிரித்தான் இந்த பணத்தை தொலைச்சவங்களும் என்ன சிரமத்தில் இருக்காங்களோ? என்னமோ? அதில் போன் நம்பர் ஏதாவது இருக்கான்னு பார். இருந்தா கூப்பிட்டு கொடுத்திடலாம்!”

பர்ஸை அலசிய செந்தில் ஒரு விசிட்டிங்கார்டை கையில் எடுத்தான். அதில் ரவி இட புரோக்கர் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது!

“அப்பா…இட புரோக்கர் ரவின்னு ஒரு விசிட்டிங் கார்டு இருக்கு.”

“அப்படியா அந்த நம்பருக்கு போன் போட்டு கொடு” “விசிட்டிங் கார்டில் உள்ள நம்பரை செல்லில் டைப் செய்து காலிங் பட்டனை அழுத்தி தன் அப்பாவிடம் கொடுத்தான் செந்தில்.

அதை வாங்கி காதில் வைத்த சென்னப்பனுக்கு ரிங் போகும் சத்தம் கேட்டது.

“ஹலோ ரவிங்களா?”

“ஆமாங்க நான் இட புரோக்கர் ரவிதான் பேசுறேன்! என்ன விசயமா கூப்பிட்டீங்க?”

என் பெயர் சென்னப்பன். காமராஜ் வீதியில நான் வரும் போது ஒரு பர்ஸ் கீழே கிடந்தது! அதுல உங்க விசிட்டிங் கார்டு இருந்தது! அதனால்தான் கூப்பிட்டேன் பர்ஸ் உங்களதுதானா என கேட்க?”

“ஆமா ஆமா என்னுடையதுதான் அந்த மணிப் பர்ஸ். நீங்க காமராஜ் வீதியிலயே நில்லுங்க. பத்து நிமிடத்தில் வந்து வாங்கிக்கிறேன்!” என கூறிய படியே செல்போன் அழைப்பை துண்டித்த படியே தனது டூவீலரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரவி!

“செந்தில் பேசிட்டேன் . அந்த ரவியோடது தான் பர்ஸாம். பத்து நிமிடத்திற்குள் வந்து வாங்கி கொள்வதாக சொன்னார்! கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி கொடுத்துட்டு போயிடலாம்!”

“சரிப்பா அப்படியே செய்யலாம்” என அருகில் இருந்த மர நிழலில் ஒதுங்கி நின்றார்கள்.

அப்போது முப்பது வயது மதிக்கதக்க இருவர் அந்த சாலையில் இருபுறமும் எதையோ தேடிக்கொண்டு வருவதை பார்த்த செந்தில் தன் கையில் வைத்திருந்த அந்த பர்ஸை திறந்து அதில் இருந்த டிரைவிங் லைசன்ஸை உன்னிப்பாக கவனித்தான்! “

“அப்பா…அப்பா.. இந்த லைசன்ஸில் இருக்கிற போட்டாவும் அங்க எதையோ தேடிக்கிட்டு இருக்காங்களே அதுல ஒருத்தரோட போட்டோவும் ஒத்து போகுது!” என மெல்லிய குரலில் கூறினான்.

“அப்படியா? சரி சரி அந்தப் பர்ஸை கொடுன்னு..” வாங்கிய சென்னப்பன்

“கொஞ்சம் அமைதியா இரு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றான் . இருவரும் நேராக சென்னப்பனிடம் வந்து “சார் என் பெயர் குமரன். இந்த வழியா கொஞ்ச நேரத்துக்கு முன் போகும் போது எப்படியோ என் பர்ஸ் கீழே விழுந்திடுச்சு… நீங்க அந்த பர்ஸை யாரும் எடுத்ததைப் பார்த்தீங்களா?”

“ஆமா பர்ஸ் என்ன கலரு?”

“பிரவுன் கலர் சார்.”

பர்ஸ்ல என்னென்ன வைச்சிருந்தீங்க?” “இரண்டாயிரம் ரூபாய் நோட்ல ஏழு, அது போக சில்லறையாக நானூற்று நாற்பது ரூபாய், ஒரு ஏடிஎம் கார்டு, அது போக காலையில ரவிங்கிற இட புரோக்கரை பார்த்தேன். அவர் கிட்ட இடம் வாங்குவது தொடர்பா பேசினபோது அவர் கொடுத்த ஒரு விசிட்டிங் கார்டு. அவ்வளவுதான் சார் இருந்துச்சு..” “இந்தாங்க உங்க பர்ஸ்”என அவர்களிடம் நீட்டினான் சென்னப்பன். அதை வாங்கிய குமரன் செந்திலையும் சென்னப்பனையும் மகிழ்ச்சி பெருக்கோடு பார்த்தான்!

“சார் வேற யாராவது எடுத்திருந்தா இந்த பணம் என் கைக்கு வந்திருக்குமான்னு தெரியாது! அதனால நான் உங்களுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்னு இருக்கேன்னு” குமரன் சொல்லும் போதே “எனக்கு நீங்க ஏதாவது உதவி பண்ணோனும்னு நினைச்சா. அந்த இட புரோக்கர் ரவி கிட்ட இடம் வாங்காதீங்க!” என கூறிய படியே

தனது வண்டியை ஸ்டார்ட் செய்து தன் மகன் செந்திலோடு காளிதாசன் வீட்டை நோக்கி கடன் வாங்க பயணித்தான் சென்னப்பன்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *