ஆமதாபாத், செப்.13-
வாக்கு திருட்டுதான் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டு உள்ளதாக பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்த பிரச்சினையை மையமாக வைத்து பீகாரில் அவர் வாக்காளர் உரிமை யாத்திரையையும் நடத்தினார். இதன் மூலம் வாக்கு திருட்டு விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.
இதற்கிடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று முதல் முறையாக செல்கிறார்.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் நடந்து வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி நேற்று ஜுனாகத் சென்றார்.
அங்கே செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-
மணிப்பூர் மாநிலம் நீண்ட காலமாக பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகிறது. பிரதமர் இப்போது அங்கு செல்ல முடிவு செய்துள்ளார். எனவே அது ஒரு பெரிய விஷயம் அல்ல.
ஆனால் இந்தியாவின் இன்றைய முக்கிய பிரச்சினை, வாக்கு திருட்டுதான். வாக்கு திருட்டு கோஷத்தை நாடு முழுவதும் மக்கள் எழுப்புகிறார்கள்.
அரியானா, மராட்டிய தேர்தல்கள் திருடப்பட்டன. கர்நாடகாவில் அதை நாங்கள் சமீபத்தில் நிரூபித்தோம். எனவே முக்கிய பிரச்சினை, வாக்கு திருட்டுதான்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
![]()





