மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை
சென்னை, ஏப்.27-
வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு எந்திரங்களும், 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறையில் அவை 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது, அந்த பாதுகாப்பு அறையில் இருந்து அவை வாக்கு எண்ணும் பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வாக்கு எண்ணப்படும்.
இந்த பணிகளுக்கான முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வை நேற்று சத்யபிரத சாகு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அவர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, வாக்கு எண்ணிக்கை தகவல்களை உரிய மென்பொருள் உரிய நேரத்தில் செயலிகளில் பதிவேற்றம் செய்வது, வாக்கு எண்ணிக்கை பணிகளை ‘வெப் காஸ்டிங்’ மூலம் ஒளிபரப்பு செய்வது, வாக்கு எண்ணிக்கை பணியில் உள்ள அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்குவது போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.