செய்திகள்

‘வாக்கு எண்ணிக்கை முறைகள்’ விளக்கும் கையேடு: சென்னையில் தேர்தல் துணை ஆணையாளர் வெளியிட்டார்

சென்னை, மே. 15–
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கைக்கான முன் ஏற்பாடுகள் குறித்த பயிற்சிமுகாம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத் தேர்தல் ஆணையாளர்கள் உமேஷ் சின்கா, டாக்டர். சந்தீப் சக்சேனா, இயக்குநர் நிகில் குமார், தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் (செலவினங்கள்) திலீப் சர்மா, கலந்து கொண்டு வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பயிற்சி வழங்கினர். முன்னதாக முதுநிலை துணைத் தேர்தல் ஆணையாளர் உமேஷ் சின்கா வாக்கு எண்ணிக்கை முறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார்.
இப்பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு யந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழிமுறைகள் மற்றும் வி–பேட் ல் வாக்குச்சீட்டுகளை எண்ணும் முறை, மற்றும் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பப்பட்டது. மேலும் தபால் ஓட்டுகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கான ஏற்பாட்டு முறை மூலம் பெறப்பட்ட வாக்குகளை எண்ணும் முறை தொடர்பான வழி முறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வரவேற்புரை ஆற்றினார். கேரளா தலைமைத் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அனைத்து தேர்தல் அலுவலர்களும் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *