செய்திகள்

‘வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்’: எடப்பாடி உறுதி

வீடு தேடி ரேஷன் பொருட்கள்; ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம்

‘வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்’:

எடப்பாடி உறுதி

மானாமதுரை, மார்ச் 27–

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் எஸ். நாகராஜனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். திறமையானவர், எளிமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். உயர்ந்த உள்ளம் கொண்டவர்.

ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் என்னைப்பற்றி பேசி வருகிறார். என்னைப்பற்றி பேசினால் தான் எதிர்கட்சி வரிசையாவது கிடைக்கும் என்று பேசி வருகிறார். அண்ணா தி.மு.க. மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இருபெரும் தலைவர்கள் வழியில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர் வகுத்துக் கொடுத்த வழியினால் இன்றைக்கு தமிழகம் வெற்றிநடை போடும் தமிழகமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

அண்ணா தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். அண்ணா தி.மு.க ஒரு ஜனநாயக இயக்கம். ஆனால் தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் ஜனநாயக இயக்கத்தை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு தொண்டனைக் கூட தொட்டுப்பார்க்க முடியாது. உழைத்தால் மட்டுமே உயர்வு கிடைக்கும். நாங்கள் உழைக்கின்றோம், மக்களாகிய நீங்கள் எங்களுக்கு உரிய உயர்வைத் தருவீர்கள். நாங்கள் சிறப்பான ஆட்சியினை கொடுத்து வருகின்றோம். அதனால் அனைத்து துறைகளிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளோம்.

ஒரு பக்கம் விவசாயம் செழிக்க வேண்டும், இன்னொரு பக்கம் தொழில்கள் சிறக்க வேண்டும், இவை இரண்டும் சிறந்து இருந்தால் தான் நாடு வளர்ச்சியடைய முடியும். அந்த வகையில் அம்மாவின் அரசு, வேளாண்மைக்கும், தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு வளர்ச்சி பெற பாடுபட்டு கொண்டிருக்கிறது.

வாக்குறுதிகள்

அண்ணா தி.மு.க. கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது, அது நாட்டு மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மீண்டும் அம்மா அரசு அமைந்தவுடன் எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கும் விலையில்லாமல் ஒரு ஆண்டிற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். கேபிள் டிவி இணைப்பு இனி கட்டணமில்லாமல் வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு அரசால் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண தம்பதிகளுக்கு பட்டுப் புடவை, பட்டு வேட்டி, பாத்திரங்கள் அடங்கிய சீர்வரிசை வழங்கப்படும். விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு, சான்றிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. தாய்மார்கள் 6 சவரனுக்குக் குறைவாக நகைகளை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுயஉதவிக் குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். உழவு மானியம் 7500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசே நிலத்தை வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு ஏற்கனவே கட்டித் தரப்பட்டுள்ள வீடுகளில் வசிக்க இயலாத அளவிற்கு பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற, அம்மாவுடைய ஆட்சி தொடர வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வெற்றி வேட்பாளர் எஸ். நாகராஜனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *