செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது எப்படி? முதியோர் இல்லத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை, மார்ச் 15

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது எப்படி என்பதை முதியோர்களுக்கு விளக்கும் வகையில் முதியோர் இல்லத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள கிரேஸ் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் ­பே­ரில் தமிழ்நாட்டில் வருகின்ற பாராளுமன்ற பொதுத் ­தேர்தலில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு வாக்காளர்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சிகளில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் தேர்தல் நடத்தை விதிகள் கீழ் வருகிறது. திருமண மண்டபங்களில் வழக்கமான திருமணம் உட்பட நிகழ்ச்சிகள் நடத்தலாம். அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பான கூட்டங்கள் நடத்தும் போது சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கி இருந்தால் மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தலாம். அனுமதி இல்லாமல் திருமண மண்டபங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பான கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட திருமண மண்டபங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *