செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை மீண்டும் முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு

சென்னை மாவட்டத்தில் 13–ந் தேதி நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை மீண்டும் முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு

பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் பணியிடை நீக்கம்:

கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவு

சென்னை, மார்ச் 20–

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான முதற் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும், கலந்துகொள்ள தவறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையாளர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநரகாட்சி கமிஷனருமான கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 தொடர்பாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5911 வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான (Polling Personnel) முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கடந்த 13–ந் தேதி அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெற்றது.

மேற்படி நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் படி விளக்கம் கேட்கும் குறிப்பாணை (Show Cause Notice) சம்மந்தப்பட்ட துறையின் வாயிலாக சார்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தீவிர நோய்வாய்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பணியாளர்கள் தவிர வேறு எவருக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

மேற்படி, 13–ந் தேதி அன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை 21–ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பான பணிஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணை வருவாய் துறை அலுவலர்களால், வாக்குச்சாவடி, அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் வழங்கப்படும் எனவும், மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களின் அலைபேசி வழியாக குறுந்தகவல் (sms) மூலமாகவும் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.

எனவே, நாளை 21–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள தவறும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 134 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *