செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் 9-ந் தேதி விவாதம்: மத்திய அரசு அறிவிப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, டிச.3–-

வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து 9-ந் தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,

2 முதல் 4 கட்சிகள் சபையை முடக்கி வருகின்றன. ஜனநாயகத்தில் கட்சிகள் வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம். அதற்காக இப்படி கோபத்தை காண்பிக்கக்கூடாது.

இப்படி செய்வதால், காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் காலக்கெடு விதிக்கக்கூடாது எனக்கூறியிருந்தார்.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வுகாண நேற்று மாலை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

அதில், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து 9-ந் தேதி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-– மக்களவை சபாநாயகர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலின் 150-வது ஆண்டு தினம் குறித்து 8-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மக்களவையில் 9-ந் தேதி பகல் 12 மணிக்கு விவாதம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அலுவல் ஆய்வுக்குழு

பின்னர், சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அதிலும், இதே முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் கொறடா கே.சுரேஷ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு தினம் குறித்து மக்களவையில் 8-ந் தேதி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் சீர்திருத்தங்களின் கீழ், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான எதிர்க்கட்சிகள் கோரிக்கை பற்றி 9 மற்றும் 10-ந் தேதிகளில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

வந்தே மாதரம் பற்றிய விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். ஒவ்வொரு விவாதத்துக்கும் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், நேரம் நீட்டிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *