செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சிறப்பு விவாதம்: மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக.2-–

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதன் மூலம் ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

எனவே இந்த நடவடிக்கையை கைவிட வலியறுத்தி போராடி வருகின்றன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி தினமும் அமளியில் ஈடுபட்டும் வருகின்றன.

இந்த நிலையில் மேற்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக மக்களவையில் சிறப்பு விவாதம் நடத்த வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நேற்று எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), பிறேமச்சந்திரன் (புரட்சிகர சோசலிஸ்டு), லால்ஜி வர்மா (சமாஜ்வாடி), ககோலி கோஸ் (திரிணாமுல் காங்கிரஸ்), அரவிந்த் சாவந்த் (சிவசேனா), அபய் குமார் (ராஷ்ட்ரீஸ ஜனதாதளம்) உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து போட்டிருந்தனர்.

இந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களாகிய நாங்கள், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், குறிப்பாக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டுள்ள திருத்தம் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளோம்.

இது முன்னெப்போதும் இல்லாதது. இது போன்ற திருத்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இந்த செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, நேரம் மற்றும் நோக்கம் குறித்து பரவலான அச்சம் இருப்பதால், இந்த விஷயத்துக்கு மக்களவையின் அவசர கவனம் தேவைப்படுகிறது.

நாடாளுமன்ற தற்போதைய அமர்வு தொடங்கியது முதலே இந்த பிரச்சினையை விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஜூலை 20-ந்தேதி நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் உள்பட பல தருணங்களில் அரசிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.

மக்களவையில் விவாதம்

நடத்த வேண்டும்

இந்த விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு விருப்பம் தெரி வித்திருந்தபோதிலும், இது குறித்த விவாதத்துக்கு இன்னும் தேதி குறிப்பிடவில்லை.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் வாக்களிக்கும் உரிமை மற்றும் நியாயமான தேர்தலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து மக்களவையில் நடத்தப்படும் ஒரு சிறப்பு விவாதம் உறுப்பினர்கள் தெளிவு பெறவும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் உதவும்.

எனவே, தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து மேலும் தாமதமின்றி ஒரு சிறப்பு விவாதத்தை திட்டமிடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன.

இதற்கிடையே இந்த வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் நாடாளுமன்றத்தை நேற்றும் முடக்கியது.

மக்களவை காலையில் பதாகை களுடனும், கோஷமிட்டவாறும் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர்.

கூச்சல் குழப்பம்

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பின்னர் மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை தொடர்ந்தனர். அப்போது கோவா சட்டசபையில் பழங்குடியினர் இருக்கை அமைக்கும் மசோதாவை விவாதத்துக்கு எடுக்க சபாநாயகர் விரும்பினார்.

ஆனால் அமளி நீடிக்கவே அவை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *