கந்தன் தான் கட்டிய வீட்டில் குடியேறி விளையாட்டாக பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது.
வீட்டைச் சுற்றிலும் தேவையான மரங்களையும் காய்கறிதோட்டங்களையும் பூச்செடிகளையும் அடைசலாக இல்லாமல் தகுந்த இடைவெளியில் விட்டு பயிரிட்டு வளர்த்து வந்தார். மரம் செடி இவைகளின் நடுவில் நல்ல மணற்பாங்கான பகுதி இருக்கும் படி அமைத்திருந்தார். காலையில் மரம் செடி இவைகளுக்கு தண்ணீர் விட கந்தன் தவறுவதில்லை.
மகன் பூவரசன் விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவி செய்வான். இவர் வீட்டிற்கு காற்றோட்டமாக இருக்கும்படி மரங்களை வளர்த்தாலும் பக்கத்து வீட்டில் வளர்ந்த ஒரு மரம் இவரது வீட்டின் ஒரு ஜன்னலை மறைக்கும் அளவிற்கு அதன் கிளைகள் படர்ந்து இருந்தன. கந்தன் பக்கத்து விட்டுக்காரரிடம் இது பற்றிக் கூற அவர் உங்கள் பக்கம் உள்ளவற்றை வெட்டி விடலாம் என்றார்.
நாட்கள் நகர்ந்ததே தவிர கிளைகளை வெட்டி விட எந்த ஒரு ஏற்பாடும் பக்கத்து வீட்டுக்காரர் செய்யவில்லை. மரம் பெரிதாக பெரிதாக அதன் வேர்கள் அதிகமாக பரவுமே என்ற கவலை வந்தது கந்தனுக்கு.
கந்தன் தன்மகனிடம் நாம் தான் வெட்ட வேண்டும் இந்த மரக் கிளையை என்றவுடன் பூவரசன் தந்தையே இவ்வளவு நாள் காத்திருந்தோம்; இன்னும் கொஞ்சம் நாள் பொறுக்கலாம் என்றான்.
கந்தன் உனக்கும் உங்க அம்மாவிற்கும் நான் எது செய்தாலும் முட்டுக் கட்டை போடுவது தான் வேலை என்றார்.
பூவரசன் ஏதோ சொல்ல வரும் வேளையில் கந்தன் உங்களை எல்லாம் கேட்கவே கூடாது என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றார்.
கந்தன் அம்மாவிடம் நான் ஏன் வேண்டாம் என்று சொல்கிறேன் தெரியுமா என்றான். பின் அதற்கான விளக்கத்தைக் கூறினான்.
கந்தன் மனைவி தயவு செய்து அவரை தடுத்து நிறுத்து என்றார்.
அன்று பூவரசனும் அவன் அம்மாவும் வெளியூரில் நடைபெறும் கல்யாணத்திற்கு சென்றார்கள். கந்தன் மட்டும் வீட்டில் இருந்தார். இது தான் சமயமென நினைத்த கந்தன் அந்த ஜன்னலில் இருக்கும் கிளையை மட்டும் வெட்டாமல் மேற்கொண்டு உள்ள மேற்கிளையை வெட்டி விட்டார். வந்ததே ஆபத்து. வீட்டைச் சுற்றிலும் காக்கைகள் கூட்டம். ஒரேஅடியாக காக்கைகள் சப்தம்.
பயந்த கந்தன் வீட்டினுள் முடங்கினார். அக்கம் பக்கத்தோர் ஏதோ விபரீதம் ஆகி விட்டதென பார்க்கையில் கந்தன் வெட்டிய மரக் கிளைகள் வீட்டின் வாசலில் கிடந்தன. சற்று நேரம் கழித்து காக்கைகளின் அறை கூவல் சற்று நின்றன. ஆனால் அவைகள் எல்லாம் கந்தன் வீட்டிற்கு எதிர் வீட்டின் மாடியில் போய் அமர்ந்தன.
மறு நாள் கந்தன் வீட்டிற்கு எப்போதும் வரும் காகம் வரவில்லை. ஆனால் கந்தன் வெளியே வந்தால் ஒரு காகம் அவரை சுற்றிச் சுற்றி வந்தது. காரணம் தெரியாமல் கந்தன் குழம்பினார். வெளியே வருவதைத் தவிர்த்தார். ஆனால் தன் வீட்டிற்கு வரும் காகம் எதிர் வீட்டிற்கு செல்வதைக் கண்டு சற்று யோசித்தார்.
எதிர் வீட்டுக்காரர் ஜன்னலில் காகம் சென்று அமருவதைக் கண்டார். இன்னும் சற்று கலக்கத்தில் ஆழ்ந்தார். வெளியே செல்ல காக்கையிடம் இருந்து தப்பிக்க தான் தெரிந்து வைத்த இருந்த கருப்புச்சட்டை மற்றும் தொப்பியுடன் சென்றார். காகம் பக்கத்தில் வந்தாலும் பாதிப்பு இல்லாமல் இருந்ததாக உணர்ந்தார்.
மேலும் பாதுகாப்புக்காக தனது காரிலியே வெளியே சென்று வந்தார். இவர் உள்ளே செல்வதை காகம் பார்த்து விட்டால் உடனே இவர் வீட்டிற்கு பக்கத்தில் வந்து கத்தும். கந்தன் யாரையும் சந்திக்க விருப்பமில்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்.
ஊருக்குச் சென்ற மகனும் மனைவியும் வந்ததும் ஏதோ ஒரு மாறுதல் உள்ளதை உணர்ந்து பார்க்கையில் ஜன்னல் பக்கம் உள்ள மரக்கிளை வெட்டப் பட்டிருந்தது கண்டு பூவரசன் அதிர்ந்தான். அப்பாவிடம் ஏதும் பேசாமல் குளித்து விட்டு வெளியே சென்றான். கந்தன் மனைவியும் கந்தனிடம் ஏதும் கேட்கவில்லை. கந்தனுக்கு என்ன வீட்டினுள் ஒருவரும் ஏதும் பேசாமல் இருக்கிறார்களே என்று நினைத்தாலும் நாமாக ஏதும் கூறக் கூடாதென முடிவு செய்தார்.
மாலை வீடு திரும்பிய பூவரசன் தந்தையிடம் நான் அந்தக் கிளையை வெட்டாதீர்கள் என்றேன். ஏன் வெட்டினீர்கள் என்றான். என்னிடம் எதிர் வீட்டு மாமா நடந்ததையெல்லாம் கூறினார் என்றான். கந்தன் ஏதும் பேசாமல் இருந்தார். அப்போது அங்கு வந்த அம்மாவிடம் பூவரசன் ‘‘அம்மா அந்த மரக்கிளையில் காகம் கூடு கட்டியிருந்தது. அதில் ஒரு சின்னக் காக்கைக் குஞ்சு ஒன்றிருந்தது. ஆதனால் தான் நான் அதை வெட்ட வேண்டாமெனச் சொன்னேன்’’ என்றான்.
ஏற்கனவே இது பற்றி உன்னிடம் சொல்லியுள்ளேன் என்றான்,
இவர் வெட்டியதில் கூடோடு காக்கைக் குஞ்சு மர இலைகள் நடுவே விழ, உடனே காக்கைகள் நம் வீட்டைச் சுற்றிக் கரைய, எதிர் வீட்டு மாமா கூடோடு அதை எடுத்து தனது மாடியில் பாதுகாப்பாகவும் அதே வேளையில் காக்கைகள் வந்து பார்த்துக் கொள்ளும்படியும் செய்ததில், காக்கைகள் அவர் விட்டிற்குச் சென்றன. காகம் அதிலிருந்து தந்தையை சுற்றி சுற்றி வருவதாகவும் எதிர் வீட்டு மாமா கூறியதைக் கூறினான்.
கந்தன் தப்பு புண்ணி விட்டோமென நினைக்க, பூவரசனிடம் எனக்கு அது இருப்பது தெரியாதென்றார்.
நாட்கள் உருண்டன. சின்னக் காகம் தனது அம்மா காகத்துடன் எதிர் வீட்டு மாமா வீட்டின் ஜன்னலில் அமர்ந்து மாமா தரும் உணவை உண்பதைக் கண்ட கந்தன் இனிமேல் பயமில்லை என்ற எண்ணினார்.
சுற்றுப் பகுதிகளில் அம்மாவுடன் பறந்த சிறு காகம் கந்தன் வெளியில் நிற்கையில் வேகமாக பறந்து கொத்த வர, கந்தன் வீட்டிற்குள் சென்று வழி வழியாக இது தொடருமோ என நினைத்த வேளையில், பூவரசன்யானை மட்டுமல்ல எல்லா உயிரினங்களும் தனக்கு தொந்தரவு செய்தவரை கடைசி வரை விடாது என்றான்.
இதற்குப் பின் பூவரசன் மாடியில் தொடர்ந்து காகங்களுக்கு உணவு வைக்க, சில நாட்களில் கந்தனுக்கு தொந்தரவு குறைந்தது.
மிருகங்களின் புரிதலில் மாற்றம் உண்டாகும் என்று பூவரசன் கூற கந்தன் சற்று நிம்மதியானார்.