சிறுகதை

வழி வகுக்கும் – மு.வெ.சம்பத்

நிகிலேஷ் தான் இன்று பங்கேற்கும் விழாவில் யார் யார் என்ன தலைப்பில் பேசுகிறார்கள் என்று அழைப்பிதழைப் பார்த்தான். தனக்கு கொடுத்துள்ள தலைப்பை மறுபடியும் ஊர்ஜிதம் செய்தான். அதாவது வாழ்வில் அமைதியும் ஆனந்தமும்” என்ற தலைப்பில் பேச காலை பத்து மணியளவில் நேரம் ஒதுக்கியிருந்தாக படித்தான்.

சரியாக காலை ஒன்பது மணிக்கு நிகிலேஷ் கிளம்பும் போது அவன் மனைவி இன்று நாம் எனது அப்பாவைப் பார்க்கப் போகிறோம், நீங்கள் விழா முடிந்து வரும் பொழுது பழங்கள், இனிப்புகள், சிறு நொறுக்குத் தீனி இவைகளை வாங்கி வந்து விடுங்கள். நான் இப்போது வெளியே சென்று விட்டு மதியம் ஒரு மணிக்கு வந்து விடுவேன். பிறகு சாப்பிடலாம் என்றாள்.

பொத்தானை அமுக்கிய பின் கருவி பாடுவது போன்று ஒப்பித்து விட்டுச் சென்றதைக் கண்ட நிகிலேஷ் தலையை மட்டும் ஆட்டி விட்டுப் புறப்படத் தயாரானான்.

விழாவிற்கு வந்த நிகிலேஷை வரவேற்று அவருக்குரிய இருக்கையில் உட்கார வைத்தனர். விழா ஆரம்பித்து சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்ததும் நிகிலேஷ் பற்றி அறிமுகம் செய்யப்பட்டு அவரைப் பேச அழைத்தனர். நிகிலேஷ் வணக்கம் கூறி பேச்சை ஆரம்பித்தான்.

அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வையே மனிதர்கள் விரும்புகின்றனர். ஆனால் அது ஏற்படுவதற்கான முயற்சிகளில் நிறையப் பேர் ஈடுபடுவதில்லை. மனிதன் தான் கண்டுபிடித்த கருவிகள் மூலம் மனிதர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளச் செய்ய முடிகிறது. மனிதன் தன்னிடம் உள்ள சக்தியைக் கொண்டு அமைதியும் ஆனந்தமும் நிலைக்க முயல்வதில்லை. மனிதர்கள் இன்பங்களை அனுபவிக்கவே ஆசைப்படுகின்றனர். அதற்காக குறுக்கு வழியையும் பின்பற்றத் தயங்குவதில்லை. வெளித் தோற்றத்தில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் உள்ளே அமைதி இழந்தே காணப்படுகின்றனர்.

வயதானோர் பிள்ளைகள் தங்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுவார்களோ அல்லது கை விட்டு விடுவார்களோ என்ற பயத்திலும் வேலை பார்ப்போர் விருப்ப ஓய்வுத் திட்டம் வந்து விடுமா, வேலை போய்விடுமா, ஓய்வு பெற்றால் பணப்பலன் தருவார்களா என்ற கவலையிலும் விலை ஏற்றத்தால் குடும்பச் செலவை எவ்வாறு சமாளிப்பது என்ற கவலையிலும் மாணவர்கள் தேர்வின் (ஆன்லைன் அல்லது நேரடி) பயத்திலும் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு எல்லோரும் அமைதியையும் ஆனந்தத்தையும் தொலைத்து விடுகின்றனர். மன இறுக்கம் எல்லா நிலைகளிலும் எங்கும் இருக்கத் தான் செய்யும். வளர்ந்த நாடுகளில் தற்கொலை செய்து கொள்ளுதல், மன நோயாளிகளாகி விடுதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அளவுக்கு அதிகமாக பணம் சேர்ப்பது, அதிகமாக தேவையில்லாமல் பதட்டம் அடைவது மன அமைதிக்கு வழிவகுப்பதில்லை. பணம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் தான். அதனால் மன அமைதியை நல்ல வழியில் பெற்றுத் தர முடியாது. நாம் எல்லோரும் பணத்திற்கு ஒரு புறம் அடிமையாகி விட்டோம்.

அமைதியையும் ஆனந்தத்தையும் வெளியே தேடுவதை விட்டு விட்டு அவற்றை நம்மிடத்திலேயே தேட வேண்டும். அவை நம் கைக்குள்ளே அடங்கியுள்ளது. மன அமைதியிழந்து நாமெல்லாம் நீரை விட்டு வெளியே வந்த மீன் போன்று துடிக்கிறோம். ஆனந்தம் சாதி, குலம் இவற்றிற்கு அப்பாற்பட்டு நிற்கிறது. பற்றற்ற நிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பற்று வைப்பது போல பற்றற்ற தன்மையைப் பெற வேண்டும். இவையே அமைதியும் ஆனந்தமும் பெற அடிகோலும் வழிவகைகளாகும். மன அமைதியைக் கொடுக்கும் செயல்களை மேற்கொள்ளவேண்டும். தியானம் செய்தல் நல்ல நூல்களைப் படித்தல் போன்றவைகள் மன அமைதிக்கு வழி வகுக்கும். இந்த வாழ்க்கை குறுகிய காலம் கொண்டது. ஆடம்பர வாழ்க்கை நிலையற்ற ஒன்றாகும்.

பிறருக்காக வாழ்பவர்கள் பல நேரங்களில் அமைதியும் ஆனந்தமும் அடைகின்றனர். மேலும் பொறுமை, சகிப்புத் தன்மை என்பது மிகவும் அவசியமானதாகும். வீட்டினில் கணவன் மனைவி இடைவெளியைக் குறைக்க பொறுமையும் சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுக்கும் பாங்கும் அவசியம். யார் சகிப்பது அல்லது விட்டுக் கொடுப்பது என்பது தான் பிரச்னை. தவறான பேச்சுக்கள், தவறான புரிதல், வேற்றுமைக் கருத்துக்கள் போன்றவைகள் மனஅமைதிக்கும் ஆனந்தத்திற்கும் ஊறு விளைவிக்கின்றன.

ஓரு செல்வந்தர் தனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதும் மிகுந்த கவலை கொண்டார். அப்போது வந்த மற்றொரு வியாபாரி கவலைப்படாதீர்கள், கலங்காதீர்கள் எப்படியும் சம்பாதித்து விடலாமென்றார். சில நாட்களில் ஆறுதல் சொன்ன வியாபாரிக்கு பொருள் சேதம் ஏற்பட்டதை அறிந்து, செல்வந்தர் அவரிடம் சென்று ஆறுதல் கூறியும் அவர் தன்னைத் தேற்றியது பற்றியும் கூற அந்த வியாபாரி செல்வந்தரிடம் அது உனக்கு இழப்பு, இது எனது பெரிய இழப்பு என்று கூறி புலம்பினார். தன்னலம் அவர் கண்ணை மறைத்து அவர் செய்வது தானும் மனஅமைதியிழந்து பிறரையும் நிம்மதியிழக்கச் செய்கின்ற செய்கையாகும்.

உபதேசம் செய்வது எளிது. பின் பற்றுவது கடினம். இருப்பினும் மன அமைதி, ஆனந்தம் பெற இழந்ததையே நினைத்து முடங்கி விடக் கூடாது. சம நிலைமையை இழக்கச் செய்யும் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது விமர்சிப்பார்களோ என்று நாம் எண்ணக் கூடாது. அப்படி எண்ணினால் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாகி மன இறுக்கம் ஏற்பட்டு அமைதி, ஆனந்தம் தொலைகிறது.

துன்பத்தை விட துன்பத்திலிருந்து வெளியேறுபவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். முழு மன உறுதியுடனும் திடமான நோக்கத்துடனும் தீவிரமாக போராட வேண்டும். குறிக்கோளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல அதை அடையும் வழிக்கும் கொடுக்க வேண்டும். நாம் மன அமைதியும் ஆனந்தம் பெற மற்றவர்களுடைய குற்றங்களை புறந்தள்ளுதலும் எதிர் மறை எண்ணங்களை ஒழித்தலும் வழி வகுக்கும். நம்பிக்கை துரோகத்திற்கு விடை மறத்தல் மற்றும் மன்னித்தலே. நிறை மனிதர்கள் தனது முழு உயிரை செலுத்தியும் அன்பு செலுத்தியும் பற்றற்று இருப்பதாலும் அமைதியும் ஆனந்தமும் அவர்களைக் குடி கொண்டிருக்கிறது என்று கூறி நிகிலேஷ் தனது உரைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

பின் பலத்த கரவொலி அந்த அரங்கையே கலக்கியது.

விழா முடிந்து வாங்கிய பொருட்களுடன் வீடு திரும்பும் போது நிகிலேஷ் வீட்டில் மன அமைதி மற்றும் ஆனந்தம் நிலைக்க இன்று முதல் நல்லதே செய்வோம் என்ற எண்ணத்தில் ஆழ்ந்தபடி சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *