உத்தரபிரதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
லக்னோ, ஏப். 29–
உத்தரப்பிரதேசத்தில், வழக்கறிஞர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட நான்கு பேருக்கு, எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ராஜ்நாராயண் சிங், கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று காலையில் வாக்கிங் சென்றபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் ராஜ்நாராயண் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, உயிரிழந்த ராஜ்நாராயண் சிங்கின் மனைவி சுதா சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அங்கத் யாதவ், சம்மோபூர் கிராமத்தைச் சேர்ந்த சுனில் சிங் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசில் புகாரளித்தார்.
4 பேருக்கும் ஆயுள் தண்டனை
மேலும், கொலை நடந்த சில நாள்களிலே முன்னாள் அமைச்சர் அங்கத் யாதவ், சித்தரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதைத்தொடர்ந்து அவரின் ஜாமீன் மனுவும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதோடு சித்தரி காவல் நிலையப் பகுதியில் உள்ள அவரின் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை அசம்கர் மாவட்ட நிர்வாகம் கடந்த ஜனவரியில் பறிமுதல் செய்தது.
இந்த நிலையில் ராஜ்நாராயண் சிங் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அங்கத் யாதவ், சுனில் சிங், அருண் யாதவ், டெனி எனும் ஷைலேஷ் ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓம் பிரகாஷ் சர்மா ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். கூடவே அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.