சிறுகதை

வள்ளலார் வழி – ராஜா செல்லமுத்து

கோவிந்தராஜ் ஒரு அசைவ பிரியர். காலை, மாலை, இரவு என்று எந்த நேரத்திலும் அசைவ உணவு இல்லாமல் அவர் அசைவதே இல்லை.

காலை டிபன் சாப்பிடுவதில் கூட சின்னக் கருவாட்டுத் துண்டு இருந்தால் தான் அவருக்கு டிபன் தொண்டைக்குள் இறங்கும்.

வெள்ளி, செவ்வாய் எல்லாம் அவருக்கு செல்லுபடி ஆகாது. கொல்லாமை பற்றி பேசினால் சிரித்துக் கொண்டே ஏளனம் செய்வார்.

மனிதர்கள் வாழ்வதற்கு கடவுளால் படைக்கப்பட்ட உணவு பொருட்கள் தான் ஆடு, மாடு, கோழி, மீன் என்று அர்த்தம் சொல்வார். அப்படி ஒரு அசைவப் பிரியர் .தன்னுடன் இருப்பவர்களையும் அசைவம் சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர்.

சைவம் எல்லாம் எப்படித் தான் சாப்பிடுகிறார்களோ ? என்று அவர்களைப் பார்த்து பாவப்படுவார் .

ஒருமுறை ஆன்மீகக் கூட்டத்திற்கு சென்றார் காேவிந்தராஜ். அங்கே உயிர்வதை பற்றியும் மற்ற உயிர்களை எப்படி நாம் நேசிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விலாவாரியாக பேசிக் கொண்டிருந்தார்கள் .

அந்த கூட்டத்தில் கோவிந்தராஜ் இருந்தார். எல்லா உயிர்களும் அதனதன் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன .

மனிதன் தான் மற்ற உயிர்களை கொன்று தின்கிறான். இது தவறு கொல்லாமை வேண்டும் என்று அந்த ஆன்மீகப் பெரியவர் பேசிக் கொண்டிருந்தார்.

அப்படி என்றால் காட்டில் இருக்கும் சிங்கம் புலி எதை சாப்பிடும் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டார். கோவிந்தராஜ் ஏதோ பொழுது போகவில்லை என்று அந்த ஆன்மீக கூட்டத்தில் அமர்ந்து சிரித்தார்.

ஆனால் அந்த ஆன்மீகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களில் பாதிப்பேர் அசைவ உணவு உண்பவர்களாக இருந்தார்கள் .இதெல்லாம் போலி வேடம் மாட்டினுடைய காம்பிலிருந்து கறக்கும் பால் கூட வெள்ளை ரத்தம் தான். இயற்கையில் தன்னுடைய கன்றுக்கு கொடுப்பதற்காகத்தான் மாட்டின் மடியில் பாலை வைத்திருக்கிறான் இறைவன். அதை எப்படி மனிதன் கறந்து சாப்பிடலாம். அது வெள்ளை ரத்தம் இது ஜீவகாருண்யத்தில் வராதா? என்று கேட்டு விட்டார் கோவிந்தராஜ். அத்தனை பேரும் வாயடைத்து நின்றார்கள். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆன்மீகக் கூட்டத்தில் எல்லோருக்கும் காபி, டீ கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கோவிந்தராஜின் பேச்சைக் கேட்டவர்கள் பாதிப்பேர் தொண்டைக்குள் பாதி போன காபி டீ உள்ளுக்குள் இறங்க உறுத்தலாக இருந்தது.

இப்படி ஏடாகூடமாக பேசும் கோவிந்தராஜ் அசைவ உணவுப் பிரியர்களை ஆதரிப்பார். சைவம் சாப்பிடுபவர்களை அலட்சியமாகப் பேசுவார்.

இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது அவரது வாழ்க்கை .

ஒரு நாள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி வரவில்லை. அன்று அசைவம் எடுப்பதற்கு கோவிந்தராஜே அசைவக் கடைக்கு போக வேண்டி இருந்தது.

ஏற்கனவே அசைவக் கடையில் ஆட்கள் குவிந்திருந்தார்கள். சிக்கன் .மட்டன் என்று வியாபாரம் களைகட்டிக் கொண்டிருந்தது.

கோவிந்தராஜ் நாட்டுக்கோழி வேண்டும் என்று ஆர்டர் செய்தார்.

எத்தனை கிலோ? என்று கடைக்காரர் கேட்க

இரண்டு கிலோ இருக்கிற மாதிரி ஒரு கோழி பிடிங்க என்றார் கோவிந்தராஜ்,

அந்த அசைவக் கடையில் இடது பக்கமும் வலது பக்கமும் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன நாட்டுக்கோழிகளும் பிராய்லர் கோழிகளும் .

அது ஒன்றை ஒன்று கொத்தி விளையாடுவதும் அங்கே இருக்கும் அரிசி பருப்புகளை தின்பதுமாக இருந்தது. எப்படியும் தங்களைக் கொன்று விடுவார்கள் என்ற எண்ணம் அந்தக் கோழிகளுக்கு இல்லாமல் கத்துவதும் விளையாடுவதுமாக இருந்தன.

அப்போது கோவிந்தராஜ் கேட்ட இரண்டு கிலோ கோழியைப் பிடிப்பதற்காக கறிக்கடைக்காரன் கூண்டைத் திறந்து அங்கே பறந்து திரிந்த கோழிகளில் ஒன்றைப் பிடிக்க எத்தனித்தான்.

நம்மை கொன்று விடுவார்களோ? என்ற பயத்தில் அந்த காேழிகள் அச்சத்தில் ஓடிப் பறந்தன. நம்மைப் பிடித்து விடுவார்களோ ? என்று ஒவ்வாெரு கோழியும் பயந்து நடுங்கி மூலையில் அடைந்தன.

கண்களால் எடை போட்ட அந்தக் கடைக்காரர் இரண்டு கிலோ இருப்பது போல ஒரு கோழியைக் நமக்கு கண்டுபிடித்தார்.

இந்த விளையாட்டை கோவிந்த ராஜ் பார்த்துக் கொண்டே இருந்தார் .ஒவ்வொரு கோழியும் தன் கண்களில் பயத்தை கக்கிக்கொண்டு உயிருக்காக போராடியது போல் தெரிந்தது. அந்த துன்பத்தை அவரால் பார்க்க முடியவில்லை.

அந்தக் கோழிகள் எப்படியும் இங்கு கறியாக்கப்படும் . விற்கப்படும் என்பதெல்லாம் அதற்குத் தெரியுமோ? தெரியாது .

ஆனால் அந்த நொடி நேரத்தில் தன் உயிரை காப்பாற்றுவதற்காக போராடிய போராட்டம் கோவிந்தராஜை நிலைகுலைய வைத்தது.

இரண்டு கிலோவுக்குத் தகுந்த மாதிரி கோழியைப் பிடித்து வெட்டப் போகும்போது

நிறுத்துங்க என்றார் கோவிந்தராஜ்

இந்த கோழி ரெண்டு கிலோ இருக்கும் சார். நான் கண்ணிலேயே எடை போட்டு தான் இந்த கோழியை பிடிச்ச இருக்கேன் என்று கடைக்காரர் சொன்னபோது

இல்ல எனக்கு கறியே வேண்டாம் என்றார் கோவிந்தராஜ்

ஏன் என்று கறிக்கடைக்காரர் கேட்க

இல்லைங்க. கறி வேண்டாம் என்ற கோவிந்தராஜ் சொல்லி முடித்து அந்த இடத்தை விட்டு விறுவிறுவென நடந்தார்.

அவர் மனதில் இதுவரை தான் சாப்பிட்ட அசைவ உணவின் உயிர்கள் எல்லாம், அந்தக் கோழியைப் போல அவர் முன்னே படபடத்து ஓடுவது மாதிரி, ஒரு படமே ஓடியது.

இனிமேல் நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு, நேராக கடைக்குச் சென்று பச்சைக் காய்கறிகளை வாங்கினார். வீட்டிற்கு வந்தார்.

இதைப் பார்த்த மனைவி, பிள்ளைகள்

என்னப்பா கறி எடுக்க போனிங்க ? காய்கறி வாங்கிட்டு வந்திருக்கீங்க? என்று கேட்க

இனிமே நாம அசைவம் சாப்பிடக்கூடாது. சைவம் தான் சாப்பிடணும் என்றார் கோவிந்தராஜ்,

உங்களுக்கு என்று மனைவி கேட்டாள்.

இல்ல நாம சாப்பிடுறதும் ஒரு உயிர் தானே? அதுக்கும் வாழ்க்கை இருக்கு. நாம ஏன் அதச் சாப்பிடணும் வேண்டாமே? என்று மனைவிக்கு மழுப்பலாக பதில் சொன்னார்.

என்ன ஆச்சுங்க. நீங்க ஒரு ஆளு மாறினா மட்டும் இந்த உலகம் மாறிடுமா ? இல்ல அந்த உயிர்களைத்தான் அடிச்சு சாப்பிடாம விட்டுடுவாங்களா ? என்று மனைவி கேட்க

யாரு மாறுறாங்களோ இல்லையோ? அது எனக்கு தெரியாது .நான் மாறிட்டேன். நீங்களும் மாறணும். இனிமே வள்ளலார் வழி தான் வாழ்க்கையை நடத்தணும்; அசைவம் நமக்கு அறவே வேண்டாம் என்றார் கோவிந்தராஜ்.

மனைவிக்கு கோவிந்தராஜன் பேசுவது என்னவென்று புரியாவிட்டாலும் கணவன் சொல்வது ஏதாவது ஒரு காரணத்திற்காக தான் இருக்கும் என்று நினைத்தாள்.

காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள் காேவிந்தராஜ் மனைவி.

கறிக்கடையில் உயிர்பயத்தில் படபடத்த அந்தக் காேழிகளின் இறக்கைகள், இப்பாேது கோவிந்தராஜின் நெஞ்சுக் கூட்டுக்குள் பறந்து கொண்டிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *