செய்திகள்

வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்து முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை, ஜூன் 22–

சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு தமிழ்நாடு நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். வள்ளலார் சித்தி அடைந்த இடமான மேட்டுகுப்பம் பகுதியில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். அப்போது சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என அவர் பேசினார்.

அவரது இந்த பேச்சு, தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

‘தர்ம ரட்சகராக’ அவதாரம்

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து, சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியை புகுத்தும் முயற்சியில், ‘தர்ம ரட்சகராகப்’ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.

தமிழ்ப் பண்பாடும் – விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் ‘தனிப்பெருங் கருணை’ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே, ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட எம்.பி.சு.வெங்கடேசன், வள்ளுவரும் வள்ளலாளரும் விழுங்கவே முடியாத கலகக் குரல்கள் மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக் குரல்கள் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *