செய்திகள்

வளவனூர் பெருமாள் கோயிலில் 970 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

Makkal Kural Official

விழுப்புரம், ஜன.19-–

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வளவனூர் பாவலர் தி.பழநிச்சாமி, விழுப்புரம் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், செ.சித்தார்த்தன் ஆகியோர் கடந்த 15ம் தேதி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 970 ஆண்டு பழமைவாய்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:–

வளவனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் கருவறை பின்பக்கச் சுவற்றில் மூன்று வரிகளில் அமைந்த துண்டு கல்வெட்டு ஒன்று தலைகீழாகப் பதிக்கப்பட்டுள்ளது. இதனை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜகோபால், “இதன் முதல் வரியில், புரவியொடும் பிடித்து தன்னாடை ஜெயம்கொண்டு எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது திங்களேர் திருதன் தொங்கல் எனத் தொடங்கும் முதலாம் ராஜாதி ராஜனின் (கி.பி.1018–-1054) மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியாகும். இரண்டாவது வரியில் பிரம்மதேசத்து திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், மூன்றாவது வரி, ஸ்ரீமாகேஸ்வர ரக்ஷை என்றும் முடிகிறது. இது சிவனடியார்கள் பாதுகாப்பு எனும் பொருள் தரும். இக்கல்வெட்டு சிவன் கோயிலுக்கு உரியதாக இருக்கலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் கட்டுமானப் பணிகளின் போது இந்தத் துண்டுக் கல்வெட்டு சுவற்றில் வைத்து பதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் குறித்த மேலதிக ஆய்வுகள் தேவை. 4 வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேயமாக இப்பகுதி இருந்துள்ளதையும் 970 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

மேற்காணும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ராஜாதிராஜன் சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் பேரனும் ராஜேந்திர சோழனின் மகனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலைச் சாளுக்கியருடன் நடந்த கொப்பத்துப் போரில் இம்மன்னர் உயிர் துறந்தார்.

வளவனூரில் உள்ள ஜகந்நாத ஈஸ்வரர் கோயிலில் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் முற்று பெறாத கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தற்போது பெருமாள் கோயிலில் ராஜாதிராஜன் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பெரிய அளவில் சிவாலயம் இருந்து சிதைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.வளவனூர் பகுதியில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் சோழர் கால தடயங்கள் மேலும் கிடைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *