அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

வளர்ப்பு பிராணி அறை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அறைகள் சொல்லும் கதைகள்- 28


அத்தனை அவசரத்தில் ஒரு நாயைத் தூக்கி வந்திருந்தாள் சோபனா. அதை நாய் என்று சொல்வதை விட தன் பிள்ளை என்று தான் சொல்லுவாள். அந்த நாய்க்கு அவள் வைத்திருக்கும் பெயர் சோபி. தன் பெயரை போலவே நாயும் இருக்க வேண்டும் என்று தன் பெயரையே அந்த நாய்க்கு வைத்திருந்தாள். அவள் அழுகையும் கண்ணீருமாக இருப்பதைப் பார்த்த அந்த மருத்துவமனையில் அவசரமாக அவசரச் சிகிச்சையில் சேர்த்தார்கள் .உடம்பில் ஆங்காங்கே அடிபட்டு இருந்ததற்கான அடையாளம் இருந்தது. ரத்தக்கசிவு கொஞ்சம் இருந்தாலும் அதனுடைய பார்வை அதனுடைய வலியை சோபனாவால் உணர முடிந்தது

” டாக்டர் ,சீக்கிரம் ட்ரீட்மென்ட் குடுங்க. எனக்கு என்னமோ பயமா இருக்கு “

என்று விலங்கு டாக்டரைத் துரிதப்படுத்தினாள், சோபனா

” ஒன்னும் ஆகாது. நீங்க வருத்தப்படாதீங்க. நீங்க கவலைப்படற அளவுக்கு சோபிக்குக்கு ஒன்னும் ஆகல என்று சோபனாவை தேற்றினார் மருத்துவர் .

அந்த நாய்க்கு சராசரியான நாயை விட கண்கள் கொஞ்சம் முட்டையாக இருந்தன .கழுத்தில் பாசிமணிகள் .கண்ணிற்கு மேலே உள்ள புருவத்தில் கண்மை எழுதப்பட்டு நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டிருந்தது.

” உங்க வீட்டில குழந்தை இருக்காங்களா? என்று சோபனாவிடம் மருத்துவர் கேட்க

அவள் இல்லை என்று தலையை மட்டுமே ஆட்டினாள். ஓகே கணவர் எங்கே இருக்கிறார். கூட இருக்கிறாரா? என்று மருத்துவர் கேட்டதும்

“ம் “ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் சோபனா அதற்கு மேல் சோபனாவைக் கேட்க விரும்பாத மருத்துவர் அந்த நாய்க்கு சிறப்புச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். களிம்புகள் மருந்துகள் போட்டு கட்டும் போட்டு

” இனிப் பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல. ரெண்டு மூணு நாள் நீங்க ஹாஸ்பிடல் வந்து ட்ரீட்மென்ட் எடுத்தீங்கன்னா சரியா போயிரும்” என்று உறுதியளிக்கும் வரையில். கண்கள் வழியே நீரை உகுத்துக் கொண்டிருந்தாள் சோபனா. கட்டுப்பட்டுப் போட்டுப் பெட்டில் கிடந்த சோபியை ஓடிப் போய் தன் மார்போடு கட்டியணைத்து ஓ என்று அழ ஆரம்பித்தாள். பதிலுக்கு அந்த சோபியும் அழ ஆரம்பித்தது. அங்கிருந்த மருத்துவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம்.

“என்னது இதுவும் அந்த அம்மா மாதிரியே அழுகுதே ?” என்று பார்த்தவர்களுக்குள் வியப்பு. அவள் ஏதேதோ பேச அதற்கெல்லாம் அந்த நாய் முணகல் , சைகை மூலம் பதில் சொல்லிக் கொண்டே இருந்தது. இது நாய் அல்ல .அதையும் மீறிச் கிளி போல் இந்த அம்மா பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறதே? என்று வியந்தார்கள் அந்த விலங்குகள் மருத்துவமனையில் இருந்த ஆட்கள்.

டாக்டர் என் சோபிய வீட்டுக்கு கூட்டிட்டிப் போலாமா?

“தாராளமா கூட்டிட்டு போங்க” என்று மருத்துவர்கள் பதிலளிக்க ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் சோபனா.

அந்த வீட்டில் சோபிக்கென்று தனியாக அறை.

ஏசி, மெத்தை ,உணவு வைக்கும் தட்டு என்று மிகப் பிரமாதமாக இருந்தது . அந்த அறை. சுற்றிலும் கண்ணாடிகள். . சோபி தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கு.

முதலில் கண்ணாடியில் தெரியும் உருவத்தைப் பார்த்து வேறு யாரோ ஒரு நாய் என்று முதலில் நினைத்த சோபிக்கு இப்போதெல்லாம் கண்ணாடியை பார்த்து தன்னைத்தானே சரி செய்து கொள்ளவும் தெரிந்தது. அந்த அறையில் மெத்தையில் சோபியைப் படுக்க வைத்து ஏசியை போட்டு அதனுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள் சோபனா. வளர்ப்புப் பிராணிகள் என்றால் சோபனாவுக்கு அவ்வளவு பிரியம் மனிதர்களை விட வளர்ப்பு பிராணிகள் மீது அதிகம் அன்பும் அக்கறையும் கொண்டிருப்பாள் ; பிராணிகளுக்கு பிரியம் மட்டுமே வைக்கத் தெரியும்.குறைகள் சொல்லத் தெரியாது. அடுத்தவரிடமும் தம்மைப் பற்றி புறம் பேசாது என்று நம்புவாள்.

வீதியில் போகும் போது கூட நாய், பூனை ஏதாவது ஒன்றைப் பார்த்தால் அவைகளுக்கு உணவு வைத்து விட்டு தான் போவாள். அப்படி ஒரு அன்பு கொண்ட சோபனாவால் தெருவில் கண்டெடுக்கப்பட்டது தான் இந்த சோபி..

அத்தனை நேர்த்தியாய் அதை வளர்த்துக் குழந்தை இல்லாத அவள் சோபியை ஒரு குழந்தையாகவே வளர்த்தாள். அடிபட்டுக் கிடந்த சோபியைப் பார்த்து அழுது கொண்டிருக்கும் போது வீட்டுக்கு நுழைந்தார் சோபனாவின் கணவர் ரவி

“என்ன சோபனா ஏன் அழுதுகிட்டு இருக்க?

” இல்லங்க சோபிக்கு உடம்பு சரியில்ல. அதான் பாத்துட்டு இருக்கேன்” என்று அவள் சொன்னதும் ரவிக்குத் தூக்கி வாரிப் போட்டது

“என்னது சோபியா? என்று கேள்வியாகக் கேட்டார்.

” இங்க பாருங்க” என்று மெத்தையில் படுத்துக் கிடந்த சோபியைத் தொட்டு அவள் சொன்னபோது .

“சோபனா நமக்கு குழந்தை இல்லை .அது பெரிய வருத்தம் தான். நீ சோபியை ஒரு பிள்ளையா நினைச்சு வாழ்ந்திட்ட . அதுவும் தப்பு இல்ல .ஆனா சோபி இறந்து இன்னைக்கோட மூணு நாள் ஆச்சு. அதையே நினைச்சுகிட்டு இருந்தா எப்படி? சோபி நம்ம கூட இவ்ளோ நாள் தான் வாழனும்னு அந்த கடவுள் எழுதி வச்சிருக்கான் ” என்று சோபனாவைத் தேற்றினார் ரவி

“இல்ல என் சோபி சாகல. இன்னும் உசுரோட தான் இருக்கு இத பாருங்க” என்று அவள் கண்ணுக்கு தெரிவது போல் இருந்த சோபியைத் தொட்டு தொட்டு அழுது கொண்டிருந்தாள் சோபனா. அவளைத் தொட்டு தேற்றினார் ரவி.

அப்போது கண்ணாடியில் ஓர் குட்டி நாய் ஓடி வருவது தெரிந்தது.

இது என்ன ஆச்சரியம் சோபி குட்டி ஆயிட்டாளா? என்று ஆவலோடு அங்கு வந்து கொண்டிருந்த குட்டி நாயை தூக்கினாள் சோபனா

” ஆமா சோபி இப்போ குழந்தை உருவத்தில் வந்திருக்கு .போய் எடுத்துக்க” என்று ரவி சொல்ல ஓடிப்போய் அந்தக் குட்டி நாயைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் சோபனா

சோபி… சோபி… என்று அதற்கு மாறி மாறி முத்தம் கொடுத்தாள் அது …. கீ…. கீ….என்று தன்னுடைய நாய்க்குட்டி மொழியில் பேசியது. இப்போது அந்த மனநிலையில் இருந்து கொஞ்சம் சோபனா வெளியே வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட ரவி அறையை விட்டு வெளியே வந்தார்.

“இப்ப அம்மா நல்லா இருக்காங்களா? என்று அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கேட்க

” ஆமா” என்று தலையாட்டினார்,

” நீங்க சொன்னது சரிதான் சார் ஒரு குட்டி நாய வாங்கி விட்டா அவங்க மனநிலை மாறும் சொன்னது. இப்போ அவங்க இந்தக் குட்டி நாய் சோபியா தான்னு நினைக்கிறாங்க” என்றாள் பணிப்பெண்.

“இப்போதைக்கு அது இருக்கட்டும். போகப்போக அவளுக்குச் சரியாகும்” என்று நினைத்தார் ரவி. வளர்ப்பு பிராணி அறையில் அந்தக் குட்டி நாய்க்கு சோபிக்குட்டி என்று பெயரிட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் சோபனா.

அந்த அறையைச் சுற்றி இருந்த கண்ணாடி முழுவதும் அவர்களின் உருவம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *