செய்திகள்

‘வளர்ந்த பாரதத்தை அடையும் வரை ஓயமாட்டேன்’: பிரதமர் மோடி உறுதி

Makkal Kural Official

புதுடெல்லி, அக்.8-–

வளர்ந்த பாரதம் எனும் கூட்டு இலக்கு எட்டப்படும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி முதன் முதலாக குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார்.

2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்த அவர், பின்னர் நாட்டின் பிரதமரானார். அந்த பதவியிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறார்.

இதன் மூலம் குஜராத் முதலமைச்சர் மற்றும் நாட்டின் பிரதமர் என அரசின் தலைவராக 23 ஆண்டுகளை அவர் நிறைவு செய்து உள்ளார். இதையொட்டி அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-–

ஒரு அரசின் தலைவராக 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை யொட்டி எனக்கு வாழ்த்தும், ஆசியும் வழங்கிய அனைவருக்கும் இதயப்பூர்வ நன்றிகள். குஜராத் முதலமைச்சராக பணியாற்றும் பொறுப்பை 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஏற்றுக்கொண்டேன்.

என்னைப் போன்ற ஒரு பணிவான தொண்டனை மாநில நிர்வாகத்துக்கு தலைமை தாங்கும் பொறுப்பை வழங்கியது எனது கட்சியான பாரதீய ஜனதாவின் மகத்துவம் ஆகும்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது குஜராத் ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருந்தது. கட்ச் பூகம்பம், அதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய புயல், மாபெரும் வறட்சி, பல்லாண்டுகளாக காங்கிரசின் கொள்ளை, வகுப்புவாதம் மற்றும் சாதிவெறி போன்ற தவறான நிர்வாகத்தின் மரபுகள் என எண்ணற்ற சவால்கள் இருந்தன.

குஜராத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம்

மக்கள் சக்தியின் உதவியால் நாங்கள் குஜராத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகால எனது ஆட்சியில் குஜராத் ஒரு ஒளிரும் எடுத்துக்காட்டாக உரு வெடுத்தது. சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் வளத்தை உறுதி செய்தது. 2014-ம் ஆண்டில் இந்திய மக்கள் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொடுத்தனர். அதன் மூலம் பிரதமராகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

வறுமையிலிருந்து 25 கோடி மக்கள் மீட்பு

கடந்த 10 ஆண்டுகளில் எங்களால் ஏராளமான சவால்களுக்கு தீர்வு காண முடிந்தது. 25 கோடிக்கு அதிகமான மக்களை வறுமையில் இருந்து மீட்டு இருக்கிறோம். உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கிறது. இது நமது சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகள் மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளுக்கு உதவியிருக்கிறது. விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு மேம்பாட்டுக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த 23 வருட கற்றல் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு முன்னோடி திட்டங்களைக் கொண்டு வர எனக்கு உதவியது. நான் தொடர்ந்து அயராது உழைப்பேன் என்று எனது சக குடிமக்களுக்கு உறுதியளிக்கிறேன். வளர்ந்த பாரதம் என்ற நமது கூட்டு இலக்கு நிறைவேறும் வரை நான் ஓயமாட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *