சிறுகதை

வளர்ந்த நாடு – ராஜா செல்லமுத்து

வளர்ந்த நாடு. வளருகின்ற நாடு. வளரப்போகும் நாடு என்று இந்த பூமிப் பந்தில் விரிந்து பரந்த நிலப்பரப்புகளை அவற்றின் பொருளாதார வசதிகளோடு வகைப்படுத்தி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்கா, லண்டன், ஐரோப்பா ஆஸ்திரேலியாவை வளர்ந்த நாடுகள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கூட தமிழர்கள் முக்கிய பதவியில் இருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பில் தமிழனின் ஆளுமை அதிகமாக இருக்கிறது. அங்கு இருக்கும் பாராளுமன்றம் ஆட்சிப் பொறுப்பு, வசதி வாய்ப்புகள் கட்டிடங்கள், கார்கள் என்று தமிழர்கள் ஏகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் ரஞ்சன் அமெரிக்க நாடான உலகின் வல்லரசு என்று அழைக்கப்படும் அமெரிக்க நாட்டின் முக்கிய பதவியில் இருப்பவர்.

அவரைக் கருப்பர் என்று அமெரிக்கா அப்புறப்படுத்த முடியவில்லை. அவரின் ஆளுமையை எடை போட்டு தான் ரஞ்சனுக்கு அமெரிக்கா அந்த பதவியை தந்துள்ளது.

கோட் சூட் நுனி நாக்கு ஆங்கிலம், எவருக்கும் அஞ்சாத பேச்சு என்று ரஞ்சன் தன் வெற்றிக் கொடியை வெளிநாட்டில் நாட்டியிருந்தார்.

அவர் பிறந்தது என்னவோ தமிழ்நாட்டில் உள்ள ஒரு குக்கிராமம். பள்ளி வாசனையை அறியாத தாய் தகப்பனுக்கு பிறந்தவர் தான் ரஞ்சன்.

ஆனால் உலக நாடுகளைத் தீர்மானிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதி என்று அவரை பேட்டி கண்ட ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அறிவுப்பூர்வமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

சார் நீங்க இந்த இடத்துக்கு வருவீங்கன்னு நினைச்சு பார்த்தீர்களா? என்று கேட்டபோது கடகடவெனச் சிரித்தார் ரஞ்சன்.

கண்டிப்பா என்று ஒற்றை வரியில் பதில் சொன்னார் ரஞ்சன்.

அது எப்படி? அவ்வளவு தீர்க்கமா நீங்க சொல்றீங்க என்று பேட்டி எடுக்கும் நபர் கேட்க…

உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களும் அமெரிக்கா லண்டன்ல வாழ ஆசைப்படுவாங்க. ஏன்னா மேற்கத்திய நாடு. நம்ம இந்திய நாட்டுக்கும் அயல் நாட்டுக்கும் பண மதிப்பு விகிதம் என்று ஒரு வருஷம் இங்க சம்பாதிக்க சம்பாத்தியத்த இந்திய நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இங்க பத்து வருஷம் சம்பாதிக்கணும். அது மட்டும் இல்லாம இங்கு இருக்கக்கூடிய தொழில் மனிதர்கள், தூய்மை, கலாச்சாரம் இதெல்லாம் ஒவ்வொரு வெளிநாட்டுக்காரங்களும் இங்க வந்து வாழனும்னு நினைப்பாங்க அப்படித்தான் நானும் இங்கே வந்தேன்.

ஆனா இங்க வந்து பார்த்தபோதுதான் தெரிஞ்சது நாம நெனச்சதெல்லாம் தப்பு அப்படின்னு.

பொருளாதார ரீதியில உயர்ந்திடலாமே ஒழிய, ஒழுக்கத்தில இங்க உயர முடியாது அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்று ரஞ்சன் சொன்னபோது இடைமறித்தார் அந்த பேட்டியாளர்.

அது எப்படி சொல்றீங்க? என்று குறுக்கு கேள்வி கேட்க…

ஆமா சார், இந்திய மண்ணுக்கு ஒரு கலாச்சாரம் இருக்கு. தமிழ்நாட்டுக்கு ஒரு பண்பாடு இருக்கு. ஆனா அமெரிக்கன் பியூட்டிங்கிறது அப்படி இல்ல. ஒருவனுக்கு ஒருத்திங்கிற கலாச்சாரம் அங்க இல்ல. எப்படி வேணாலும் வாழலாம் அப்படிங்கற ஒரு சூத்திரம் இருக்கு.

ஆனா அந்த வாழ்க்கைய அவங்க கடைசி வரைக்கும் வாழ்றாங்களான்னா இல்ல. எட்டாவது படிக்கும் போதே ஒரு அமெரிக்க பிள்ளையை அவங்களுடைய போக்குக்கு விட்டுடுறாங்க. அவங்களே சம்பாதித்துக் கொள்ளணும், அவங்களே சாப்பிடணும். ஏன் ஒரு எட்டாவது படிக்கப் போற ஒரு பெண்ணோட பையில அந்த பொண்ணோட அம்மா காண்டம் வச்சு விடுறத நான் படிச்சிருக்கேன் பாத்துருக்கேன். அதனால குடும்பம் அப்படிங்கறது அங்க இல்ல. வரைமுறையற்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

பணம் ஒன்னு தான் குறிக்கோள் அப்படின்னு நினைத்தா குடும்பம் இருக்காது. ஆனா இங்கிருந்து போன தமிழர்கள், இந்தியர்கள் எல்லாம் ஒரு கட்டுக்கோப்பான குடும்பத்தில் வாழ்கிறாங்க. அமெரிக்கா, லண்டன் மாதிரி இருக்கக்கூடிய மேலை நாடுகள்ல இருக்கிற குழந்தைகளுக்கு கலாச்சாரம் தெரியல. பண்பாடு தெரியல. எட்டாவது படிக்கும்போது அந்த டீனேஜிலே அவன் படிக்க மாட்டேங்கிறான். குடிக்கிறான் செக்ஸ், துப்பாக்கி, கொல இப்படின்னு அவன் அறிவை வளர்க்கிறது இல்லை. சுதந்திரமான வாழ்க்கைன்னு தன்னோட வாழ்க்கையை கெடுத்துக்கிறான்க. அப்போ அந்த குடும்ப கட்டுப்பாடு அப்படிங்கறது இல்லாம போகுது.

அதனால அமெரிக்கா மாதிரி இருக்கக்கூடிய வளர்ந்த நாடுகள்ல இருக்கிறவங்க யாரும் சரியா படிக்கிறது இல்ல. இந்தியாவிலிருந்து போற குறிப்பா தமிழ்நாட்டில இருந்து போற ஆட்கள் தான் அங்க பெரிய ஆட்கள் இருக்கிறாங்க காரணம் நமக்கு ஒரு பண்பாடு இருக்குது. கலாச்சாரம் இருக்குது. வளர்ந்த நாடுகள்ல அது இல்ல.

இதைக் கேட்ட பேட்டியாளர் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

என்ன சார் நீங்க சொல்றது அப்படியே தலைகீழா இருக்கே? என்று சொன்னபோது

ஆமா சார் முன்னாடி எல்லாம் ஒற்றுமை இல்லாம ஜாதி மதம் அப்படின்னு பிரிஞ்சு கிடந்த நம்மள பிரிட்டிஷ்காரன் தான் ஒன்னு சேர்த்தாங்க அடையாளப்படுத்துனதுன்னு சொல்லுவாங்க.

ஆனா இன்னைக்கு நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிநாட்டுக்காரங்க நம்மளோட குடும்ப கட்டுப்பாடு, குடும்ப உறவு முறைகள பார்த்து அதுமாதிரி வாழனும்னு நினைக்கிறாங்க. இதுதான் உண்மை. இப்ப நான் இந்த இடத்துக்கு வந்தது கூட என்னுடைய ஒழுக்கம். என் அம்மா அப்பா நம்ம குடும்பத்தை பார்த்துக்கிட்ட ஒரு விதம் இதுதான் என் உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய் இருக்கு பாருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்காவோட அதிபரா ஒரு தமிழன் வந்தா கூட ஆச்சரியப்படறக்கு இல்ல. காரணம் அங்க கலாச்சாரம் இல்ல. பண்பாடு இல்ல. குழந்தைங்க படிக்கிறது இல்ல. இங்கிருந்து போறவங்கள பாத்து கத்துக்கிறாங்க

புன்முறுவல் பூத்தார், பேட்டி எடுத்தவர்.

அமெரிக்கா காரங்க நம்ம சாமிய கும்பிடக் கூட தயாராக இருக்கிறாங்க.இது தான் உண்மை என்று ரஞ்சன் சொன்னபோது, ரஞ்சனைப் பேட்டி எடுத்தவர் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவர்களையும் அறியாமல் கைதட்டினார்கள்.

நிச்சயமா நீங்க சொல்றது உண்மை சார் என்று பேட்டி எடுத்தவர் சொல்ல…

நான் சொல்றதை எழுதி வச்சுக்கங்க. உலக நாடுகள் எல்லாம் நம்ம கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்ல. அது கண்டிப்பா வரும். அப்படி வரும்போது உலக நாடுகள தீர்மானிக்கிற தலைமை இடத்தில தமிழன் இருப்பான். தமிழும் இருக்கும் என்று ரஞ்சன் சொன்னபோது,

அமெரிக்க நாட்டில் இருந்த இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *