செய்திகள்

வளர்ச்சி பாதையில் தமிழகம் செல்கிறது: எடப்பாடி பேச்சு

எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்; விருதுகளை குவித்து சாதனை

வளர்ச்சி பாதையில் தமிழகம் செல்கிறது:

எடப்பாடி பேச்சு

அண்ணா தி.மு.க. மக்களுக்கான கட்சி; தி.மு.க. குடும்பத்துக்கான கட்சி

மதுரை, மார்ச் 26–

எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம். தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து விருதுகளை வாங்கி குவித்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வின் நமது வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் பி.அய்யப்பன் எளிமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர், இந்த தொகுதியில் மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

தி.மு.க தலைவர் தனது குடும்பத்தைத்தான் காப்பாற்றினார். நமது தலைவர்கள் மக்களை காப்பாற்றினார்கள். அண்ணா தி.மு.க மக்களுக்கான கட்சி, மக்களின் குரலாக இருக்கின்ற கட்சி. அண்ணா தி.மு.க கட்சிதான் நாட்டுமக்களுக்கு நன்மை செய்கின்ற கட்சி.

நான் முதலமைச்சராக பதவியேற்று 4 வருடம் 2 மாதங்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு காரணம் அம்மா அரசின் திட்டம்தான்.

வறட்சி, புயல், கனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும். அனைத்து தரப்பு ஏழை, எளிய மக்களுக்கும் அரசே நிலத்தை வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

ஸ்டாலின் அதிகார வெறி

நான் முதலமைச்சர் இல்லை, மக்கள் தான் முதலமைச்சர். மக்கள் இடும் உத்தரவுகளை செயல்படுத்துவதுதான் என் வேலை. ஆனால், ஒரு கூட்டத்திலாவது மக்கள் தான் முதலமைச்சர் என்று ஸ்டாலினை சொல்லச் சொல்லுங்கள், பார்க்கலாம், சொல்லமாட்டார். ஏனென்றால், அதிகார வெறி பிடித்த கட்சி தி.மு.க.

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அது நாட்டு மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மீண்டும் அம்மா அரசு அமைந்தவுடன் எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கும் விலையில்லாமல் ஒரு ஆண்டிற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். கேபிள் டிவி இணைப்பு இனி கட்டணமில்லாமல் வழங்கப்படும். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அரசே ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.

ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வரும் அம்மாவின் அரசு மீண்டும் தொடர, உசிலம்பட்டி தொகுதி வெற்றி வேட்பாளர் பி.அய்யப்பனுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அலங்காநல்லூர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (25–ந் தேதி) மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

-இந்த சோழவந்தான் தொகுதி செழிப்பான, பசுமையான விவசாய பூமி நிறைந்த பகுதி. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைப்பாளிகள் நிறைந்த தொகுதி. இந்த தொகுதியில் வெற்றிலை அதிகம் விளைவிக்கக்கூடிய தொகுதி. வளம் நிறைந்த பகுதி, செழிக்கின்ற பகுதி இந்த சோழவாந்தன் தொகுதி. இந்த தொகுதியின் வெற்றி வேட்பாளர் கே. மாணிக்கத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். கே. மாணிக்கம் எளிமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றக் கூடிய அற்புதமான திறமையான வேட்பாளர்.

விவசாயிகளின் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அறிந்து திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகின்ற அரசாங்கம் என் தலைமையிலான அம்மாவின் அரசாங்கம். விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு ஏப்ரல் 1–ந் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஏப்ரல் 1–ம் தேதிக்குப் பிறகு எப்பொழுது போட்டாலும் பம்புசெட் ஓடும். அதேபோல், ஏழை, எளியப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது, இனிவரும் காலங்களில் திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் அதையும் செயல்படுத்த இருக்கின்றோம்.

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆலை அடுத்த ஆண்டு இயக்கப்படும். சாத்தையாறு அணை புனரமைக்கப்பட்டு முல்லைப் பெரியாரிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படும். அலங்காநல்லூர் பகுதியில் பழங்கள், காய்கறிகளை சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். வைகையாற்றின் குறுக்கே இரும்பாடி, மண்ணாடிமங்கலம் இடையே உயர்மட்டப்பாலம் அமைத்துத் தரப்படும். தேனூர் தடுப்பணை உயர்த்தித் தரப்படும்.

நான் ஒரு விவசாயியாக இருப்பதால், உலகப்பிரசித்திப் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை மக்களின் கோரிக்கையை ஏற்று துணை முதலமைச்சருடன் வந்து தொடங்கி வைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். இந்த ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் – -தி.மு.க. ஆட்சி. அந்தத் தடையை நீக்கியது அண்ணா தி.மு.க. அரசு.

தமிழ்நாட்டிலுள்ள ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, விவசாய, விவசாய தொழிலாளர்களும் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டுமென்பதை எங்கள் அரசின் கடமையாகக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அதற்காக எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை தெற்கு, வடக்கு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (25–ந் தேதி) மதுரை மாவட்டம், மதுரை தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–-

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களியுங்கள். எளிமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுக்கு உதவக்கூடிய பண்பாளர். திறமையானவர். அடிக்கடி என்னைச் சந்தித்து உங்களது கோரிக்கைகளை அரசின் கனவத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றும் உங்கள் வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கூட்டணிக்கட்சியான பரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் பி. சரவணனுக்கு தாமரைச் சின்னத்திலே வாக்களியுங்கள். படித்தவர், பண்பாளர், உயர்ந்த எண்ணம் படைத்தவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுக்கு உதவக்கூடியவர். உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பினை தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணா தி.மு.க.வை எதிர்க்கும் கொள்கை இல்லா கட்சிகள்

தி.மு.க. என்றாலே ஒரு அராஜக கட்சி. 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீலாவதி கவுன்சிலராக இருந்தார். அவர் தி.மு.க.வினரால் படுகொலை செய்யப்பட்டார். தற்பொழுது அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றார்கள். கொள்கை இல்லாத கட்சி எல்லாம் சேர்ந்து அண்ணா தி.மு.க.வை எதிர்த்து கூட்டணி அமைத்துள்ளனர். விருதுகள் குவிப்பு

தமிழ்நாடு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது, உணவு தானிய உற்பத்தியில் தேசிய விருதான கிருஷி கர்மான் விருது, மின் மிகை மாநிலத்திற்கான தேசிய விருது, போக்குவரத்துத் துறையில் தேசிய விருது, நீர் மேலாண்மையில் தேசிய விருது. இப்படி அனைத்து துறைகளிலும் தேசிய விருதுகளை அதிக அளவில் பெறுகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு.

மதுரை மாநகருக்கு தங்கு தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.1295 கோடியில் பெரியார் அணையிலிருந்து நேரடியாக இரும்பு குழாய் மூலம் வழங்கும் பணிக்கு நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினேன். அந்தப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

ரூ.270 கோடியில் மருத்துவக் கல்லுரியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டித் தந்துள்ளோம். வைகை ஆற்றின் இருபுறத்திலும் 11 கி.மீ.க்கு அருமையான சாலை அமைத்துக் கொடுத்துள்ளோம். போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகளில் உயர்மட்ட பாலம் கட்டவும், மெட்ரோ ரெயில் திட்டம் மதுரை மாநகருக்கு கொண்டு வரப்படும்.

பிரதமரின் சிறப்பான ஆட்சியில் தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன், நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள். இதனை முதலமைச்சராக இருந்து கேட்கவில்லை, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக்கொள்கிறேன்.

இது உங்களுடைய அரசு. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *