செய்திகள்

வளர்ச்சி அடைந்த பாரதம் , மோடி தரும் உறுதி

Makkal Kural Official

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது நாங்கள் 140 கோடி மக்களின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும் என்று உறுதி தந்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வறுமையை ஒழிப்போம் என்று அப்போதைய ஆட்சியாளர்கள் கூறி வந்தனர். ஆனால் வறுமை ஒழியவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

நாங்கள் பொய் வாக்குறுதிகளை வழங்குவது கிடையாது. ஏழைகள், நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றத்துக்காக உண்மையான வாக்குறுதிகளை வழங்கி வருகிறோம். அந்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறோம்.

சில தலைவர்கள் சொகுசு வீடுகளில் வாழ்வதை விரும்புகின்றனர். அவர்களின் வீடு குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. நாங்கள் சொகுசு வீடுகளை கட்டவில்லை. நாட்டை கட்டி எழுப்புகிறோம்.

சில அரசியல் கட்சி தலைவர்களை போன்று நாங்கள் ஏழைகளின் வீடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுவது கிடையாது. மக்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்துகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் நாள்தோறும் புதிய ஊழல்கள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. முன்னாள் பிரதமர் ஒருவர் (ராஜீவ் காந்தி) கூறும்போது, ‘மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒரு ரூபாயை ஒதுக்கினால் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது” என்று தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழலை அறவே ஒழித்தோம். மத்திய அரசு சார்பில் சுமார் ரூ.40 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு ரூபாய்கூட இடைத்தரகர்களுக்கு செல்லவில்லை. சுமார் 10 கோடி போலி பயனாளிகள், அரசு நலத்திட்டங்களின் பலன்களை அனுபவித்து வந்தனர். ஆதார் மூலம் போலி பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் ரூ.3 லட்சம் கோடி வரை சேமிக்கப்பட்டது. சில தலைவர்கள் (ராகுல் காந்தி) தற்போது நாட்டின் வெளியுறவு கொள்கைகள் குறித்து விமர்சித்து வருகின்றனர். அவர்கள் JFK’s Forgotten Crisis என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். அதில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வளர்ச்சி திட்டங்களில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் சுமார் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்தோம். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு விண்வெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை அனைத்து துறைகளிலும் நாடு அபரிமித வளர்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தபோது, எந்தவொரு கட்சிக்கும் எதிர்க்கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனினும் மக்களவையில் அதிக இடங்களை பெற்ற கட்சியின் தலைவருக்கு உரிய மரியாதையை வழங்கினோம். அந்த கட்சி தலைவர், அரசின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்க அழைப்பு விடுத்தோம். நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம். நாங்கள் விஷம அரசியலில் ஈடுபடவில்லை. நாட்டின் ஒற்றுமையை காக்க உறுதியேற்று செயல்படுகிறோம். காங்கிரஸ் மூத்த தலைவர் சர்தார் படேலுக்காக உலகின் மிகப்பெரிய சிலையை அமைத்து உள்ளோம். நாங்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தி செயல்படுகிறோம் என்று காட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *