நாடும் நடப்பும்

வளர்ச்சிப் பாதையில் தமிழகம் !

ஆலோசனைகள் தர பொருளாதார மேதைகள் குழுமம்

ஸ்டாலின் முடிவு பாராட்டுக்குரியது


-:ஆர். முத்துக்குமார்:-


தமிழக பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் விரைவில் சமர்ப்பிக்க இருக்கிறார். அதன் சாராம்சம் எப்படி இருக்கும்? என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் கவர்னரின் உரையில் இருந்தாக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை தான்.

என்றாலும் புதிய ஆட்சியாளர்களின் முதல் பட்ஜெட் எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டதால் கவர்னரின் உரை முழு திருப்தியை பொதுமக்களுக்கு தந்திருக்காது.

ஆனால் தொலைநோக்கு பார்வையில் நிபுணத்துவத்தோடு பொருளாதார நிலைமையை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு சில பிரமாதமான அறிவிப்புகள் இருப்பது அவர்கள் மட்டத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதில் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் ஓர் முக்கிய அறிவிப்பாகும். மேலும் தமிழகத்தின் அடுத்த தலைமுறை பொருளாதார வளர்ச்சிகளை உறுதிபடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை தர நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் உட்பட பல வல்லுநர்கள் கொண்டு குழுவையும் அறிவித்துள்ளார்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர்ப்படுத்தி இடைவெளிகளை அகற்றி அனைவருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தோடு பொருளாதார வளர்ச்சிகளை உருவாக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதி செயலாளர் டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று கவர்னர் தனது உரையில் கூறியுள்ளார்.

எந்த துறைகளுக்கு ஊக்கம் தரப்படும்? வளர்ச்சி அளவு நிர்ணயம் முதலிய திட்ட வரையீடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லாதது இது வர இருக்கும் ஓவியத்திற்கான முதல் புள்ளி என்பது புரிகிறது.

சமானியனின் சந்தேகம் சில எழுந்துள்ளதையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி முன்னணி பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெற தர இருக்கும் சம்பளம் எவ்வளவு?

அப்படி அவர்கள் தரும் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளும் முதல்வரால் உரிய வகையில் நடைமுறைப்படுத்த மத்திய அரசின் கொள்கைகள் இடம் தருமா?

பிரதமரின் நோக்கம் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிப்பு, சீனாவின் தயாரிப்பு ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது என்றெல்லாம் இருக்கையில் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் மாற்று முறை வழிகாட்டல் தந்தால் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா?

இதுபோன்ற விவாதங்கள் எந்த ஒரு புது அறிவிப்பு வந்தாலும் எழத்தான் செய்யும். அதுவே அப்புதிய முயற்சிக்கான உறுதியான அடித்தளமாக மாறும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜெயலலிதா வடிவமைத்த பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிகள் தமிழகத்தில் அமைந்தது.

அதை அரசியல் ரீதியாக பார்த்து வந்த ஸ்டாலின் இனி அதில் உள்ள பல்வேறு நல்ல அம்சங்களையும் மதித்து அவற்றையெல்லாம் செயல்பட வைத்தால் வளர்ச்சிகள் தடைபடாது என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கொரோனா பெரும் தொற்றை லாவகமாக சமாளித்து வரும் முதல்வர் ஸ்டாலின் தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் நேரத்தை ஒதுக்கி புதுப்புது கோணத்தில் சந்தித்து செயல்படுத்த முனைந்து வருவது அனைத்துத் தரப்பினரின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்து வைத்து வருகிறது.

ஸ்டாலின் முடிவு பாராட்டுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *