செய்திகள் நாடும் நடப்பும்

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்; 70,000 புள்ளிகளைத் தொடத் தயாராகும் பங்குச் சந்தை


ஆர்.முத்துக்குமார்


இந்தியப் பங்குச் சந்தை 6 மாதங்களுக்கு முன்பு சில நிமிடங்களுக்கு 63,000 புள்ளிகளை தொட்டது. ஆனால் மீண்டும் சரிந்து விட்டது. இவ்வாண்டின் துவக்கத்தில் அதானி குழுமம் சந்தித்த சிக்கலில் மொத்த பங்குச் சந்தையும் 60,000 புள்ளிகளையும் விட குறைந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஸ்திரமாகவே இருக்கிறது. பல துறைகளின் பங்குகள் வர்த்தகம் உயர்ந்தும் உள்ளது.

இதனால் சமீபமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு 62,000 புள்ளிகளை தொட்ட பிறகு மீண்டும் புதிய உச்சமாக 64,000 புள்ளிகளை எட்டுமா? என்ற ஆர்வக் கேள்வி பங்கு வர்த்தகர்கள் மனதில் எழுந்து வருகிறது. அப்படி ஒரு உயர்வு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதற்கு நமது பொருளாதாரக் குறியீடுகள் சிறப்பாகவே இருப்பதே ஒரு காரணம்.

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 6.5% முதல் 6.7% வளர்ச்சியை எட்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் தெரிவித்துள்ளார்.

2022-–23-ம் நிதி ஆண்டின் 4-ம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவரங்களை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, 4-ம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.1% வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-–23 முழு நிதி ஆண்டுக்கான ஜிடிபி 7.2% ஆக உள்ளது.

ரிசர்வ் வங்கி, 2022-–23 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.1% ஆகவும் ஒட்டுமொத்த நிதி ஆண்டு ஜிடிபி 7% ஆகவும் இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்ததைவிடவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.உள்நாட்டின் தொழில் செயல்பாடுகளின் வளர்ச்சி, மத்திய அரசு மூலதன செலவினம் ஆகியவற்றின் காரணமாக 2023–-24 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல் பணவீக்கமும் கட்டுக்குள் வரும்” என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அது மட்டுமா? ரிசர்வ் வங்கியின் நிதி குழுமம் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற முக்கியமான முடிவையும் எடுத்திருக்கும் இந்நேரத்தில் பங்குச் சந்தை வரவேற்குமா? பங்குச் சந்தை குறியீடு உயருமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கும் இத்தருவாயில் வங்கி வட்டிகள் மாற்றம் இல்லை என்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகும்.

குறுகிய கால கண்ணோட்டத்தில் பங்குச் சந்தை பெரிய வளர்ச்சியைக் காணவில்லை என்றாலும் அடுத்த அரையாண்டிற்குள் பங்கு குறியீடு 70,000 இலக்கை நோக்கி புயலாய் புறப்பட்டுச் செல்லும்.

பங்கு வர்த்தகர்கள் இச்சூழ்நிலையில் ரிஸ்க் எடுக்கத் தயாராகி விட்டனர். உங்களது மியூட்சுவல் பண்டுகள் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது? மேலும் புதிய முதலீடுகள் செய்யலாமா? என்றும் ஆலோசனை பெற்று நல்ல முடிவை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *