ஆர். முத்துக்குமார்
கடந்த மாதம் இந்தியா ஜி20 மாநாடுகளில் ஆற்ற வேண்டிய பங்களிப்புக்கு ஒத்திகை போல் ‘தெற்கு புவியின் குரல்’ அதாவது ‘Voice of Global south summit – in Human Centric Development” என்ற விசேஷ கூட்டத்தை ஆன்லைன் முறையில் நடத்தியது.
உலக பணக்கார பொருளாதாரங்களை தவிர்த்து இதர சிறு மற்றும் வளரும் நாடுகளின் எண்ணங்களை தெரிந்து கொள்ளப் பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த அந்த கலந்துரையாடலில் மோடியுடன் கயானா, வியாட்நாம், மொசம்பிக், செனகல், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, தாய்லாந்து, மங்கோலியா, நியூ கினியா ஆகிய நாடுகளின் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களும் அதிபர்களும் பங்கேற்றனர்.
இது நமது தலைவர்களுக்கு ஜி20 அமைப்பில் குரல் கொடுக்க வேண்டிய சிக்கல்கள் பற்றிய உலக பார்வை பெற நல்ல சந்தர்ப்பம் என்று தெரிகிறது.
ஆனால் சீனா தரப்பில் இது இந்தியா தனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தவே ஏற்பாடு செய்து இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறது.
சீனா ஏன் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை? இப்படி ஒரு மாநாடு நடப்பது பற்றி விரிவாகவே நாம் சீனாவிடம் தெரிவித்து விட்டதுடன் ஜி20 நாடுகளை இதற்கு அழைக்கப் போவதும் இல்லை என விளக்கமும் தரப்பட்டு இருக்கிறது.
சீனாவும் இதர நாடுகளும் எழுப்பும் ஓரு எதிர்ப்பு விவாதம் ஜி20 நாடுகளை அழைக்கவில்லை .சரி, ஆனால் ஏன் பாகிஸ்தானுக்கும் அழைப்பில்லை?
இந்த கேள்வி நியானமானது. ஆனால் நமது உள்நாட்டு அமைதியும் அதிமுக்கியமானது தானே!
பசுபிக் பெருங்கடலில் சீனா அனுப்பி இருக்கும் ராட்சத பலூனில் வேவு பார்க்கும் கருவிகள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதை பார்க்கும்போது, இப்படி எதையேனும் நம் நாட்டில் நிறுவி வேவு பார்க்க நாமே நம்மீது மண்வாரி தூற்றிக்கொள்வது போல், ஏன் எதிரி நாடுகளையும் எல்லைப் பதட்டத்தை ஏற்படுத்தும் நாடுகளையும் அழைக்க வேண்டும்? என யோசித்து இருக்கலாம்.
பாகிஸ்தான், சீனா உடனான இந்திய சிக்கல்களை கிளறாத நாடு ரஷ்யா மட்டும் தான். பிரதமர் மோடி ரஷ்யாவை கூட அழைக்காதது சிறு நாடுகளை மட்டுமே அழைத்து கலந்துரையாடி இருக்கும் நிலையில் பாகிஸ்தானும் சீனாவும் எதையேனும் பேசி குழப்ப அரசியலில் மீன் பிடிக்க நினைத்தால் நமக்கு குரல் கொடுக்க யாரும் கிடையாது அல்லவா?
மேலும் நாமும் கட்டுக் கோப்பாகவே முள்மெத்தையில் நடப்பது போல் வெளியுறவு அரசியலில் மிக நிதானமாக நடைபோடுகையில் சீனாவின் உசுப்பல், உரசல்களில் வீழ்ந்து தேவையற்ற வார்த்தைகளை வெளியிட்டு இன்றைய உலக யுத்த மேகங்கள் சூழ்ந்து இருக்க புயல் மழையாய் மாறக்கூடிய நிலைமையை உருவாக்கி விடக்கூடாது அல்லவா?
இதையெல்லாம் பற்றி இந்தியா யோசித்து எடுத்த முடிவினால் சீனாவிற்கு சிறிது வருத்தம் என்றாலும் உலக அரசியல் விவகாரத்தில் இந்தியா அனுபவசாலி நிபுணத்துவத்துடன் நடந்து கொண்டிருப்பது பாராட்டுக்கு உரியது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற பெரிய பொருளாதார நாடுகள் இதுபோன்ற எல்லைச் சிக்கல்களைத் தாண்டி அதே நாடுகளுடன் சச்சரவை ஒதுக்கி வைத்து விட்டுத் தான் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது.
அப்படி ஒரு மனநிலை இந்தியாவிடமும் வந்தால் அதை ஏதோ கோழைகளின் அடிபணிதலாக கருதி நம்மை வீழ்த்த நினைத்து விடக்கூடாது. அதற்கு நமது வல்லமையையும் பொறுமையையும் கடமை உணர்வோடு வெளிகாட்டி கண்ணியத்தை பின்பற்றுவோம்.
அதிகாரம் அதிகரிக்க பொறுப்புகளும் கூடுகிறது என்று கூறுவது உண்டு! இன்று நாம் ஜி20 என்ற உலக பணக்கார நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையில் பல நல்ல முடிவுகளை எடுக்க ஆயுத்தமாகி வரும் கட்டத்தில் பல்வேறு சிறு மற்றும் வளரும் பொருளாதாரங்களின் குரலாய் நாம் ஒலிப்பது நமது கடமையாகும். அதையே குறிக்கோளாய் கொண்டு தொடர்வோம்.