சிறுகதை

வல்லவனுக்கு வல்லவன் – ராஜா செல்லமுத்து

இப்போதெல்லாம் திருமண நிகழ்வுகள், விழாக்கள் என்று எந்த மாதிரியான பண்டிகைகள் வந்தாலும் அதை சிறப்பாக கொண்டாடுவது – சீரும் சிறப்பாக கொண்டாடும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பது தான் பெருமையாக கருதுகிறார்கள் மக்கள்.

பொது நிகழ்ச்சிகளை விட தனிநபர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் கலந்து கொண்டால் அது தன் குடும்பத்திற்கு பெருமை என்று நினைத்து அந்த வீட்டார்கள் பிரபலங்களை அழைத்து வருவது அவர்களுடன் விழா நடத்துவது அவர்களை கூட்டி வருவது என்று தங்கள் பெருமைகளை பறை சாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் அப்படி வரும் பிரபலங்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் விழாக்களுக்கு பணம் வாங்கிக் கொண்டுதான் விழாக்களில் கலந்து கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் விழாவில் கலந்துகொள்ள வரும் பிரபலங்களுக்கு விமானச் சீட்டு, தங்கும் விடுதி, இத்தியாதி இத்தியாதி என்று செலவு செய்யவேண்டும். இதுதான் இப்போது வாடிக்கையாகிவிட்டது.

சினிமா பிரபலமோ அரசியல்வாதிகளோ அல்லது சமூகத்தில் புகழ்பெற்ற ஒரு நபர்களையோ தங்கள் வீட்டு திருமணத்திற்கு அல்லது விழாக்களுக்கு அழைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இத்தனையும் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இதுதான் வழக்கம் என்று ஆகிவிட்டது.

கோவையில் இருக்கும் குமரன் தன் இல்லத் திருமணத்திற்கு ஒரு பிரபல திரைப்பட நடிகரை அழைத்து விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமே என்பது அவரது அடி மனதில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பர்களிடம் விசாரித்தார். யாரும் பணம் வாங்காமல் விழாவிற்கு வருவதில்லை என்று அடித்துச் சொன்னார் அந்த நண்பர்.

நிஜமாவா சொல்றீங்க? எல்லா நடிகர்களும் பணம் வாங்கிட்டு தான் வருவாங்களா? என்று குமரன் கேட்டபோது,

ஆமா இப்பவெல்லாம் யாரும் பணம் வாங்காம எந்த விழாக்களிலும் கலந்து கொள்றதில்லை என்று அடித்துச் சொன்னார் அந்த நண்பர்.

சரி இப்போ நான் சொல்ற அந்த பிரபல நடிகர் ஒரு இயக்குனரும் கூட இல்லையா என்று குமரன் சொல்ல,

ஆமாம் என்றார் நண்பர் .

அவரை என்னுடைய வீட்டு திருமணத்திற்கு வர வைக்கிறது என்னால முடியும். ஆனா நான் பத்து காசு கொடுக்க மாட்டேன்; அவர் என்னுடைய விழாவில் கலந்து கொள்வார் என்று பூடகம் போட்டார் குமரன்.

இது எப்படி முடியும்? என்று கேட்டார் நண்பர்.

திருமண விழாவிற்கு இன்னும் ஒரு வார காலம் இருந்ததால் அந்த நடிகரை இயக்குனரை எப்படியாவது தன் வீட்டிற்கு வர வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார் குமரன்

நண்பரிடம் செய்த சபதம், திடீரென்று குமரனுக்கு புத்தியில் உதித்த ஒரு யோசனை தோன்றுகிறது.

அந்த பிரபல நடிகருக்கு போன் செய்தார். அந்த பிரபல நடிகரும் கொஞ்சம் மார்க்கெட் சரிந்து இருந்ததால் உடனே போனை எடுத்து பேசினார்.

எதிரில் இருந்த குமரன், அந்தப் பிரபல நடிகரைப் பாராட்டியும் புகழ்ந்து பேசினார்.

சார் உங்கள வச்சு நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்கதான் நடிகர் . நீங்கதான் இயக்குனர் நான் அந்தப் படத்தை தயாரிக்கிறேன். என்னுடைய ஊருக்கு வாங்க அதை பற்றி பேசலாம் என்று சொன்னார் குமரன்.

எப்போ வரணும்? என்று கேட்டார் அந்த இயக்குனர் நடிகர்.

இன்னும் ஒரு வாரத்தில் வாங்க என்று குமரன் சொன்னார்.

அந்த நடிகர் இயக்குனர் இதுதான் சமயம் என்று காரை எடுத்துக் கொண்டு தன் ஆறு உதவி இயக்குனர்களையும் காரில் அமர்த்திக் கொண்டு குமரன் ஊருக்குப் புறப்பட்டார்.

அங்கே கல்யாண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நேராக கல்யாண வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார் அந்த பிரபல நடிகர்.

யாருக்குக் கல்யாணம் ? என்று கேட்டபோது

என் பொண்ணுக்குத் தான். நீங்க வந்த பிறகு சொல்லிக்கலாம்னு நினைச்சேன் என்று சொல்ல… பரவாயில்லை. இந்த கல்யாணத்தை முடிச்சுட்டு. நம்ம பேசலாம் என்றார் .

நடிகர் அந்த திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்று தகவல் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு காட்டுத் தீயாய் பரவ மக்கள் கூடினார்கள்.

குமரனிடம் சபதம் செய்த தன் நண்பர் வெட்கித் தலை குனிந்தார்.

பார்த்தீங்களா? யாரை எப்படி அடிச்சா எங்க வருவாங்கன்னு எனக்கு தெரியும். நீங்க சொன்னீங்க. வர மாட்டாங்கன்னு வந்துட்டாங்க இல்ல என்று குமரன் சொன்னபோது

தன் தவற்றை உணர்ந்தார் நண்பர்.

திருமணம் முடிந்தது. ஒரு நாள் அவருடைய வீட்டில் தங்கினார் நடிகர்.

மறுநாள் எப்போ பேச ஆரம்பிக்கலாம் என்று கேட்டபோது

திருமணத்திற்கு செலவாகிவிட்டது. கொஞ்ச நாள் கழித்து சொல்கிறேன் என்றார் குமரன்.

அப்புறம் எதுக்கு என்னை வரச் சொன்னிங்க என்று நடிகர் கேட்டபோது,

நிறைய மாெய் பணம் வரும்னு நினைச்சேன். நான் எதிர்பார்த்த அளவு பணம் வரல. நீங்க போயிட்டு வாங்க. நான் அப்புறமா சொல்றேன் என்று அனுப்பினார் குமரன் .

தன்னுடைய கைப் பணத்தையும் செலவழித்து ஒரு திருமண விழாவில் இதுவரை பணம் வாங்கிக் கொண்டுதான் கலந்து கொண்டிருந்த அந்த நடிகருக்கு இந்தத் திருமண விழாவில் ஒரு பைசா கூட வாங்காமல் கலந்துகொண்டது அவர் முதுகில் சவுக்கால் அடிப்பது போல் இருந்தது. ஆறு உதவி இயக்குனர்களையும் கூட்டிக் கொண்டு சென்னை திரும்பினார் அந்த நடிகர் இயக்குனர்.

அதிலிருந்து தினமும் போன் செய்வார்.

குமரன் இன்னும் பணம் வரவில்லை; பணம் வரவில்லை என்று சொல்வார். ஒரு கட்டத்தில் சலித்துப் போய் விட்டு விட்டார் அந்த நடிகர்.

அப்போது சொன்னார் குமரன்.

என்னமோ சொன்ன நடிகர்கள் எல்லாம் பணம் வாங்காம பங்சன் கலந்துக்கிற மாட்டாங்கன்னே. பாத்தியா எப்படி நான் அவங்கள பங்சன்ல கலந்துக்கிற வெச்சேன்னு என்று குமரன் சொன்னபோது,

அதைக் கேட்ட நண்பன் கிறுகிறுத்து போனார்.

இப்படிக் கூட நாமும் இந்த ஐடியாவை பின்பற்றலாமா? என்று யாேசித்தார்.

அந்த நண்பரின் வீட்டுக் காதுகுத்துக்கு, ஒரு பிரபல இயக்குனரை அழைப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டு அதன்படியே அந்த இயக்குனருக்கு போன் செய்தார் அந்த நண்பர். பலித்தாலும் பலிக்கலாம்.

‘‘ஆனால்….. நல்லவர்களை மட்டும் அல்ல; பேராசைக்காரர்களைக் கூட ஏமாற்றக் கூடாது என்று தன் முயற்சியைக் கைவிட்டு எல்லோருக்கும் நல்லவராக மாறிவிட்டார் அந்த நண்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *