கிராமத்திலிருந்த வீட்டை அழகாகக் கட்டியிருந்தாள், நிர்மலா. ஆடம்பரமான பொருட்கள் வீட்டில் நிறைந்திருந்தன. போதாக்குறைக்கு கார், ஆடம்பரப் பொருட்கள், வசதி வாய்ப்புகள் என்று குறுகிய காலத்திலேயே வளர்ந்து விட்டாள். ஊரில் இருப்பவர்கள் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு வயிற்றெரிச்சல் பட்டார்கள். சிலர் தூற்றினார்கள். சிலர் போற்றினார்கள். இப்படி இருந்தவள், இப்படி வந்து விட்டாளே? என்று சிலர் நிர்மலாவைப் பார்த்து பெருமைப்பட்டார்கள்.
இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? இப்படி வாழ்வதற்கு நாண்டுக்கிட்டு செத்துப் போகலாம் என்று சிலர் கொடுஞ் சொற்களால் அவளைக் கடிந்தார்கள். எப்படியோ அவளின் வாழ்க்கை நல்லா வந்துடுச்சு என்று சிலர் பேசினார்கள்.
ரெண்டு பொம்பள பிள்ளைகளை வச்சுக்கிட்டு இதெல்லாம் இவளுக்கு தேவையா? பப்ளிக்கா எல்லாரும் பாக்குறாங்க. இப்படி சம்பாரிச்சு என்ன ஆகப்போகுது ” என்றும் சிலர் பேசிக் கொண்டார்கள். இதையெல்லாம் சட்டை செய்யாமல் நிர்மலா முன்னேற்றிப் போய்க்கொண்டே இருந்தாள்.
இப்போதெல்லாம் திரைப்படங்களில் கூட நடிக்க ஆரம்பித்து விட்டாள். சில யூடியூப் நிறுவனங்கள் அவளைப் பேட்டி எடுக்கின்றன.
“உங்களுடைய வளர்ச்சிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க? “
என்று ஒரு யூடியூப் நிறுவனத்தில் கேட்ட போது, ” எல்லாம் என்னோட உழைப்புங்க. கடுமையான முயற்சி. அதுனால தான் இந்த இடத்துக்கு நான் வந்திருக்கேன்”
அவள் அப்படிப் பேசியதைக் கேட்டு சிலர் சிரித்தார்கள். சிலர் திட்டினார்கள்.
ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு இடத்தில் சில வாலிபர்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள். காவல்துறை அவர்களைக் கைது செய்தது.
” ஏன் இப்படி பண்ணீங்க. இது தவறில்லையா? படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா ? உங்களைத் தப்புப் பண்ண தூண்டுனது எது? போதைப் பொருள் ஏதும் உபயோகப்படுத்தினீங்களா ? இல்ல வேற ஏதாவது காரணமா? என்று கேட்டபோது
” இல்ல சார் இன்ஸ்டா, ஃபேஸ் புக், சோசியல் மீடியாவ பாத்தோம். அதில இருந்து தான் எங்களுக்கு இந்தச் சிந்தனை வந்தது ” என்று சொன்னார்கள் அந்த இளைஞர்கள் .
” என்ன இது ஆச்சரியமா இருக்கு? இதப் பாத்தா நீங்க தப்பு பண்ணுனீங்க? என்று போலீஸ்காரர்கள் கேட்க
” ஆமா சார். நிர்மலா மாதிரி நிறைய பொம்பளைங்க இன்ஸ்டாவிலயும் பேஸ்புக்லயும் ஆபாசமா நடனம் ஆடுறாங்க. ஆபாசமா போஸ்டர் போடுறாங்க. ஆபாசமா பேசுறாங்க. இப்ப எல்லாம் தப்பான படங்களைத் தேடி போய் பார்க்கணும்னு அவசியம் இல்ல சார். இந்த மாதிரி பொம்பளைங்க பேசுறதக் கேட்டாலே போதும். சாதாரணமா இருக்குற மனுஷன் கூட தப்பான இடத்துக்கு போயிடுவான். நாங்க இந்த மாதிரி மாறுறதுக்கு நிர்மலா மாதிரி பொம்பளைங்க தான் காரணம் ” என்று அடித்துச் சொன்னார்கள் அந்த இளைஞர்கள் .
இவர்கள் சொல்வது உண்மையா? என்று சமூக வலைதளங்களைத் தேடினார்கள் காவல்துறையினர்.
நிர்மலா மாதிரியான பெண்கள் ஆபாசமாக அமர்ந்து கொண்டும் ஆபாசமாகப் பேசிக்கொண்டும் ஆபாசமாக சைகைகளைச் செய்து கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்கு லைக், கமெண்ட் நிறைய வந்து குவிந்திருந்தன.
இப்படிப் பட்டவர்களுக்கு யூடியூப் நிறுவனம் நல்ல சம்பளம் கொடுக்கிறது. இது என்ன கொடுமை? ஆபாசமாகப் பேசி இந்த சமூகத்தைச் கெடுக்கும் பெண்களுக்கு லைக்ஸ் கமெண்ட்டா? இதனால் சம்பாதிக்கிறார்களா ? இப்படித் தவறாகப் பேசி சமூகத்தைச் சீரழிக்கும் இவர்களைக் கைது தானே செய்ய வேண்டும்? இவர்களுக்கு சட்டப்படி தண்டனை தானே கொடுக்க வேண்டும்? இவர்களால் இந்தச் சமூகம் கெட்டுத் தானே போகிறது ? இது தவறு இல்லையா?” என்று நினைத்தது காவல்துறை.
ஒரு யூடியூப் நிறுவனம் நிர்மலாவை அப்போது பேட்டி கண்டிருந்தது.
“சாதாரணமா குடிசை வீட்டில வாழ்ந்துட்டு இருந்த நீங்க இன்னைக்கு பெரிய வீடு, காரு பங்களான்னு வச்சிருக்கீங்களே? இது எப்படி ? என்று கேட்க
“கடவுள் என்னோட இருக்கான் சார். நான் நினைச்சத இறைவன் இட்டு நிரப்புறாரு. எல்லாம் அவன் சித்தம்
என்று அவள் பேசிக் கொண்டிருக்கும்போது, அவளின் போன் சிணுங்கியது .
“சார் ஒரு நிமிஷம் ” என்று சொன்ன நிர்மலா
“ஹலோ யார் பேசுறது? என்று கேட்க, எதிர்திசையில்
” மேடம், உங்கள ஒரு சினிமா பட பூஜைக்கு கூப்பிடுறாங்க. நீங்க தான் குத்து விளக்கு ஏத்தித் தொடங்கி வைக்கணும். அது மட்டுமில்ல. இந்தப் படத்துல ஒரு நல்ல ரோல் பண்றீங்க. உங்கள இந்த உலகத்துக்கே தெரியுது. உங்கள மாதிரி ஆளுக எங்க சினிமாவுல இருந்தா படம் பெருசாகும்னு நினைக்கிறோம்”
என்று எதிர் திசையில் சொல்ல
” இந்தா உடனே வந்துடறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் , நிர்மலா.
“நீங்க பேட்டிய ஆரம்பிங்க ” என்று சொல்ல
” இந்த சமூகத்திற்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க? “
என்று அந்த பேட்டியாளர் மறுபடியும் கேட்க
“இந்தச் சமூகம் எக்கேடு கெட்டுப்போனா எனக்கு என்னங்க நான் சம்பாதிக்கணும். நான் சாப்பிடணும். என்னோட புள்ள குட்டிகள நல்லா பாக்கணும். நான் காரு, பங்களா , வீடுன்னு வாங்கணும். அதுதான் என்னோட நோக்கம் ” என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தாள் நிர்மலா.
எங்கோ இருந்து கொண்டு ஆபாசமாகப் பேசிக்கொண்டும், பாடி ,ஆடிக் கொண்டும் யாரென்றே தெரியாதவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டு வீடு, வாசல் கட்டுகிறார்கள். இதைப் பார்த்து இளைஞர்கள் தான் கெட்டுப் போகிறார்கள். சமூகம் சீரழிகிறது என்று தலையில் அடித்துக் கொண்டே, யூடியூப்பில் ஒருவர் நிர்மலாவின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
யூடியூப் நிறுவனம் அவள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்திருந்தது.