சிறுகதை

வலையில் சிக்காத மான் | செருவை.நாகராசன்

Spread the love

அந்த மாவட்ட அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை நேரம்.

இருபத்தியேழு ஊழியர்கள் பணிபுரியும் விசாலமான கூடம் கொண்ட அப்பிரிவு வெறிச்சோடிக் கிடக்க ….

தலைமை எழுத்தர் சந்தானமும் தட்டச்சர் மாலதியும் கையில் சிற்றுண்டி டப்பாக்களோடு எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.

‘‘அவங்க.. இரண்டு பேரையும் நீங்க பார்த்தீங்களா? என்று தயிர் சாதத்தை பிசைந்தபடியே கேட்டாள் மாலதி .

பார்க்காமல் சொல்வேனா? நானும் என் பெண்ணோட முதல் ஆண்டு சேர்க்கைக்காக அந்தக்கல்லூரிக்குப் போயிருந்தேன். கல்லூரி முதல்வர் அறை முன்னால வரிசையில் காத்திருந்த அவரும் அந்தப் பெண்ணோட வந்து நின்றார் அதுக்கிட்டே சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். நீ சொல்ற மாதிரி அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு நெருக்கம் இருக்கும்னுதான் நினைக்கிறேன் என்ற சந்தானம் பூரியைப் பிய்த்து குருமாவில் தோய்க்க ஆரம்பித்தார்.

எதுக்கும் நான் கவலைப் படலே. இதெல்லாம் நான் எதிர்பார்த்துதான் தெரியுமா? என்றாள் மாலதி விரத்தியான குரலில்.

அவர் ஒரு முடிவு பண்ணிட்டாருங்க. உங்களை விரட்டியடிக்கிற திட்டமே அந்தப் பெண்ணோட பழக்கம் ஏற்பட்ட பிறகுதான் உருவாகியிருக்கும்னு நான் நம்புகிறேன் என்றான் சந்தானம் உறுதியான குரலில்

வீட்டில் தான் அந்தக் கூத்தை நான் பார்த்தேனே. கணக்கு சொல்லித் தருகிறேன்கிற போர்வையிலே இரண்டு பேரும் தனியறைக்குப் போயிடறதும் இவரு அவ தலையில குட்டறுதும் அவ போங்க மாமான்னு சிணுங்கறுதும் அந்தக் கண்ராவியெல்லாம் பார்க்கப் பொறுக்காமல் தானே நானே தனியா வெளியில் வந்தேன் என்றாள் மாலதி கண்களில் பொங்கி வந்த கண்ணீருடன்.

அவனை விடுங்க உங்களுக்கு துரோகம் நினைச்சிட்டான்கிறபோது அப்புறம் நீங்க மட்டும் ஏன் நினைக்கனும்? என்றான் சந்தானம் குரலில் வேகம் காட்டி.

அவர் அடுத்து என்ன செய்வார்?

மனமுறிவு வழக்கு கொடுக்கலாம்னு போவாரோ?

போகட்டுமேங்க அதனால என்ன பெருசா குடி முழுகிப்போயிடும் ஏன் பயப்படறீங்க. நீங்க சம்பளம் வாங்கலையா? தனித்து வாழ முடியாதா? என்றான் சந்தானம் தீவிரமான் குரலில்.

கணவன் மனைவி ஒரு ஆண்டு பிரிஞ்சிருந்தா மணமுறிவு கேட்டு நீதி மன்றம் போகலாமாமே.

ஆமா நீங்க விருப்பப்பட்டா சொல்லுங்க. எனக்குத்தெரிந்த பெரிய வழக்கறிஞர் ஒருத்தர் இருக்கார். நாம முந்திக்கிட்டு அந்த ஆள் மூஞ்சியிலே கரியைப்பூசுவோம்; என்ன சொல்றீங்க? என்று அவள் முகத்தையே ஆராய்ந்தான்.

பயமா இருக்குங்க சார். நான் தனியா ஒரு பொம்பளை என்ன செய்ய முடியும்? என்ற மாலதி கைக்குட்டை கொண்ட இடது கையால் கண்களை ஒற்றினாள்.

உங்களுக்கு நான் இருக்கேன்ங்க கடைசிவரை இருப்பேன். ஏன் ஏன் கவலைப்படறீங்க .வழக்கறிஞரைப் பார்க்க இன்றைக்கே என்னோட வண்டியிலே போகலாமா?

இன்னைக்கு வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்; அப்புறம் சொல்றேன்.

பேசிக்கொண்டே இருவரும் டப்பாக்களைக் காலி செய்யவும் ஊழியர்கள் ஒவ்வொருவராக தமது இருக்ககைகளுக்கு வர ஆரம்பித்தனர். அண்மைக் காலமாக மிக நெருக்கம் காட்டிப் பழகும் சந்தானம் மாலதி இருவரையும் வந்தவர்கள் கவனிக்கத் தவறவில்லை

இருவரும் எழுந்து கொண்டனர். சந்தானம் கைகழுவி வெளியில் செல்ல மாலதி மகளிர் ஓய்வறைக்கு நடந்தாள்.

சந்தானம் நாற்பது வயது வில்லன் குடிப்பழக்கம் , பல பெண்களுடன் தொடர்பு என்று இருப்பவன் . சிரிக்கச் சிரிக்கப் பேசி பெண்களை கவர்ந்திழுப்பான். திருமணமான பெண் சக ஊழியர் என்ற முறையில் தனது குடும்பம் குறித்தோ ஏதாவது குறை சொன்னால் வீட்டில் நடக்கும் குடும்பச் சண்டைகளை விவரித்தால் அதை ஊதி பெரிதாக்கி விடுவான். தம்பதியரின் நிரந்தரமான பிரிவுக்கு வழி வகுத்துவிடுவான். ஆதரவளிப்பதாகக் கூறி மனதில் இடம் பிடித்து விடுவான். அவனது தவறான யோசனைகளால் பாதை மாறி தனித்து வாழும் மணமான அலுவலகப் பெண்களை விரல் விட்டு எண்ணிவிட முடியாது. கடந்த பத்து ஆண்டுகளாக வேலை பார்த்த பல ஊர்களிலும் அவனின் இந்த அயோக்கியத்தனம் தொடர்ந்திருந்தது.

மாலதிக்கு வட்டமுகத்துடன் களையான தோற்றம்; எலுமிச்சை நிறம் ; நல்ல உயரம்; ஒல்லியான தேகம்; வெண்மை பளீச்சிடும் பற்கள். எதையும் நம்பிவிடுகிற அவசரப்பட்டு முடிவு எடுக்கிற ரகம். அவளுக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகளே ஆகியிருந்தன.

அவளது கணவன் மூர்த்திக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளர் பணி . அது ஒரு பெரிய நிறுவனம். அங்கு அவனே முழுப்பொறுப்பாளி . நல்ல சம்பளம். ஆள் சத்யராஜ் தோற்றத்தில் இருப்பான். பி.எஸ்.ஸி முடித்தவன். மூர்த்தி – மாலதி தம்பதியினரின் இல்லற வாழ்க்கை ஆறு ஆண்டுகள் வரை இனிமையாகத்தான் ஓடியது. குழந்தைச்செல்வம் இல்லை என்ற குறை கூட அவர்களிடம் பெரிதாக இருக்கவில்லை.

தனது விதவைச் சகோதரியின் ஒரே பெண்ணான தமிழரசியை கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்து மேல் நிலைப்பள்ளியில் சேர்த்து வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்க வைக்க மூர்த்தி உறுதியாக முடிவெடுத்தான். அது வரையிலும் தனது எதிர்ப்பையும் மீறி தமிழரசி வந்து தங்கிய உடனே கணவனுடன் ஏற்பட்ட சண்டைகளை கண்களில் நீருடன் மாலதி சந்தானத்திடம் புலம்ப ஆரம்பித்த வரையிலும் இருவரிடமும் பிரச்சனைகள் ஏதும் இல்லை.

சந்தானம் தனது திறமையான நச்சுக்கலந்த வாய்ப்பேச்சால் மாலதியின் மனதை மாற்றி அவனே தனியாக ஒரு வீடு பிடித்துக் கொடுக்க மாலதி கணவரிடமிருந்து பிரிந்து வந்துவிட்டாள்.

தனக்கு மணமான ஒரே ஆண்டிலேயே அந்நகரில் ஆசிரியைப் பயிற்சியின் பொருட்டு வந்த தனது இளைய தங்கையை இரு ஆண்டுகள் தங்கி படிக்க அனுமதித்ததையும் அப்போது முகம் சுளிக்காதவனாக மூர்த்தி நடந்து கொண்டதையும் வயது வந்த பெண்ணிடம் கண்ணியத்துடன் நடந்து கொண்டதையும் மாலதி சிறிது கூட நினைத்துப் பார்க்க வேயில்லை.

சந்தானம் மூட்டிய தீயால் கணவன் நடத்தையில் திடீரென சந்தேகம். அதில் அவன் தினம் தினம் எண்ணெய் ஊற்ற தற்போது அது கொழுந்துவிட்டு எரிய அத்தீயில் தனது வாழ்கையே கருகிச் சாம்பலாகி விடும் என்பதை உணருகிற மனப் பக்குவத்தில் மாலதி இல்லை.

நேரம் கிடைத்த பொழுதெல்லாம் பேசிக் கொண்டிருக்க சந்தானம் மேசைக் கருகில் போய் நிற்பது அவனது வண்டியிலேயே மாலையில் வீட்டிற்குப் போவது அக்கம்பக்கத்தார் சந்தேகிப்பார்களே என்ற அறிவில்லாமல் அவன் அவனது வீடு தேடி வரும் நேரங்களிலும் பேசுவது என்று தனது பெயரையே கெடுத்துக் கொண்டிருந்தாள் மாலதி. ஆனால் அவள் வீட்டுக்குள்ளும் இதயத்துக்குள்ளும் இடம் கொடுக்கவில்லை. இருந்த போதிலும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பெற்றிருந்த கடன் இருபதாயிரம் சந்தானம் கைக்குப் போய்விட்டது . அவளது நான்கு வளையல்களையும் ஐந்து சவரன் சங்கிலியையும் கூடத்தன் பெயரில் அடகு வைத்துப் பணம் பெற்றுவிட்டான். அவனது புதுமண புகுவிழாச் செலவுக்குக் கூடத் அவளது வங்கி சேமிப்பிலிருந்து பெரும் உதவியை வாங்கியிருந்தான் அவனது நோக்கமே அது தான்.

தனது கணவனுடன் சேர்ந்து சொந்த வீடு உருவாக்கத் திட்டமிட வேண்டியவள் யாருக்கோ வீட கட்ட தனது நகைகளையும் சேமிப்பையும் இழந்து நிற்கிறாளே என்று சக பெண் ஊழியர்கள் மாலதி குறித்த வேதனையை நெஞ்சில் சுமந்தனர். மூர்த்தி மாலதிக்குத் தெரிந்த குடும்ப நண்பர்கள் கூட இருவரிடமும் தனியே பேசிப் பார்த்தனர்.

அவளாகத்தான் இங்கேயிருந்து போனாள். அவ எப்பத்திரும்பி வந்தாலும் சேர்த்துக்கிறேன். தமிழரசிக்கு வயது பதினேழு முப்பத்தி ஏழு எங்க இரண்டு பேருக்கும் முடிச்சுப்போட்டு அவதான் பார்க்கிறா. எனக்குத் துளிகூட அந்த எண்ணமில்லை. அவளுக்கு நான் தகப்பன் மாதிரி என்ற உண்மை இருந்ததாகவே அவர்களுக்குப்பட்டது.

தகப்பன் மாதிரின்னு அவர் சொல்றதெல்லாம் நாடகம். எல்லாம் கண்ணால் பார்த்தவ நான். மனைவி வேண்டமாம் ; அக்கா பெண்தான் வேணும்னு நினைக்கிறவரை எந்த ஒழுக்கத்திலே சேர்க்க முடியும் . முதலில் தமிழரசியைத் தலை முழுகச் சொல்லுங்க . அப்புறம் நான் வர்றேன் என்று மாலதி பிடிவாதம் காட்டினாள். இருவரையும் சேர்த்து வைக்க முற்பட்டவர்கள் சோர்ந்து போனார்கள். சந்தானத்திற்கு இதில் உள்ளூர மகிழ்ச்சி.

அன்று மாலையே அவளுக்கு வீட்டில் தபால் வடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் சந்தானத்திடம் சந்தேகப்பட்டது உண்மையாகியிருந்தது. ஆம் அது மூர்த்தியிடமிருந்து மணமுறிவு வழக்கு குறித்துதான். தபால் விபரம் கண்டதுமே அவள் உடல் நடுங்கியது ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் அது அவள் தலையில் இடியாய் இறங்கியது. துடித்துப் போனவளின் கண்கள் குளமாக கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.

தனது கைப்பையை வீசியெறிந்தவள் ஆயாசம் தீர இரு குவளை நீர் பருகினாள். படபடப்பு குறையாத நிலையிலேயே வெளியே வந்து வீட்டைப் பூட்டிவிட்டு ஆட்டோ நிற்குமிடம் விரைந்தாள். மகளிர் கல்லூரி தாண்டி எழில் நகருக்குள் நுழைந்த அந்த ஆட்டோ ஓட்டுனர் மாலதி சொல்லியிருந்த எண்ணுள்ள வீட்டை எளிதில் கண்டுபிடித்துவிட தெருவாசலில் வண்டியை நிறுத்தினான் மாலதி இறங்கியதும் காத்திருந்தான்.

சந்தானத்தின் புதுவீடு தான் அது வண்ணப் பூச்சில் புதுப்பொலிவு மாறாமல் இருந்தது சுற்றிலுமே இதே மாதிரி புதுப்புது வீடுகள். சுவரின் இரும்புக்கதவு தொட்டுத்தாழ்ப்பாள் நீக்கித்திறந்தவள் சிமெண்ட் தரையிலான வாசலுக்கு வந்தாள்.

கதவு மூடியிருக்க அதன் இடுக்கு வழியே குழல் விளக்கின் வெளிச்சக் கீற்றுகள் அழைப்பு மணியின் பெத்தானைத் தேடியவளின் பார்வை திறந்திருந்த ஜன்னல் வழியே தற்செயலாக உள்ளே போக அவளே நம்ம முடியாத அருவருக்கத்தக்க காட்சி.

ஆம். சந்தானம் மடியில் பாவாடை தாவணியில் ஒரு இளம் பெண்படுத்திருந்த அவனது கைகள் அவளது இடுப்புப்பிரதேசத்தில் உள்ளேயிருந்தது. ஒரே சிரிப்பும் கும்மாளுமாக இருந்தது.

‘யார் இவள்.. ? சந்தானம் இவ்வளவு மோசமானவனா..? என் கணவர் தமிழரசியோடு ஒரு நாளும் இந்த மாதிரியெல்லாம் பழகியதில்லையே..’ என்று நினைத்துவிட்டு ஜன்னலிலிருந்து சட்டென்று விலகி அழைப்பு மணி பித்தானில் விரல் பதித்தாள் .அவளது முகமும் உடலும் குப்பென்று வியர்த்திருந்தது. கதவு திறந்தவன் வெளியே மாலதி நிற்பதைக்கண்டதும்

‘‘அடடே நீயா..? வா.. வா..’’ என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

‘‘நான் உள்ளே வருகிற மாதிரியான நிலைமையிலே நீங்க இல்லையே..!’’ என்று அவனை எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.

அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான் இவளுக்கு எப்படித் தெரிந்தது? சுற்று முற்றும் பார்த்தவன் சன்னல் தகவுகள் திறந்திருந்த விபரீதத்தை அப்போது தான் உணர்ந்தான்.

உள்ளே ஒரு பொண்ணு இருக்கே அது யாரு? என்று கேட்டாள் மாலதி சூடான குரலில். அவனுக்குப் புரிந்து போயிற்று. இவளுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. எதையும் மறைக்க முயற்சிப்பதில் பலனில்லை.

‘‘என்னோட தங்கச்சிப் பொண்ணு எங்க வீட்டில் தங்கி இங்கே மகளிர் கல்லூரியில் படிச்சுக்கிட்டிருக்கா..’’ அவன் சொன்னதும் மாலதி அதிர்ந்தாள் .

‘‘என்ன உங்க தங்கச்சி பெண்ணா? ஏன் இதை என்கிட்ட முன்னமேயே சொல்லவில்லை ..’’

‘‘சொல்லனும்னு தோணலே.. நமக்குள்ளே அந்தப்பேச்சு வரவில்லையே..’’ என்றான் சந்தானம் தடுமாறிய குரலில்.

இந்த ஆள் தன் தங்கை பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிற பொறுக்கிப் புத்தியோட இருப்பதால் தான் தன்னை தூண்டிவிட்டு கணவன் மீது வீண்பழி சுமத்துவதில் தீவிரம் காட்டினானா? தன்னிடம் தோன்றியிருந்த சிறு சந்தேகப் பொறியைப் பெரித்தாக்கவும் மனதைக் கலைப்பதற்கும் என்னவெல்லாம் சொன்னான்?

அவனுக்கு உறைக்கிற மாதிரி நீயெல்லாம் ஒரு மனிதானாடா..? என்று கேட்டுவிட அவள் மனம் துடித்தது. ஆனால் இந்த தப்புக்கு நாமும் தானே காரணம்? என்ற உணர்வு வந்தவளாய் விடுவிடுவென்று ஆட்டோ நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

***

குடும்ப விசயங்களை வெளியில் சொல்லக்கூடாது என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? இவன் மாதிரி ஒரு அயோக்கியனிடம் சொன்னால் திசை திருப்பாமல் என்ன செய்வான்? விரைந்து ஆட்டோவில் ஏறி

நிஜாம் காலனிக்கு போ தம்பி என்றாள் அந்த ஓட்டுனர் இளைஞனிடம்.

அது அவள் மூர்த்தியுடன் வசித்த பழைய வீடு.

அந்த வீட்டிலும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆனால் அது இன்ப அதிர்ச்சி .

ஆம் . அது அவள் கணவன் வாசலில் நின்று இன்முகம் காட்டி அவளை வரவேற்ற காட்சி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *