செய்திகள்

வரைகோடுகளை எல்லாம் கடந்து கைக் குலுக்கி இருக்கிறேன்: தேசத்தை பாதுகாக்கவே காங்கிரசுக்கு ஆதரவு

கமல்ஹாசன் பேச்சு

ஈரோடு, பிப்.20-

லாபத்துக்காக கூட்டணி வைக்கவில்லை; தேசத்தை

பாதுகாக்கவே காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பிரசாரத்தை தொடங்கிய அவர் சூரம்பட்டி நால்ரோடு, சம்பத்நகர், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் அவர் பேசியதாவது:-

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் ஓட்டு வாங்குவதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். என்ன வேற சின்னத்தில் வாக்கு கேட்கிறீங்க என்று கேட்டால், நாட்டுக்கு ஆபத்து என்று வரும்போது இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. சின்னம், கட்சி, கொடி இதையெல்லாம் தாண்டியதுதான் தேசம். அதைப் பாதுகாப்பதற்காகவே, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்.

உணர்வு பூர்வமாக எனக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் உறவு இருக்கிறது. இவர் பெரியாரின் பேரன். பெரியாரே ஒத்துக்கொள்ளாவிட்டாலும் நான் அவருடைய பேரன். அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். எனது அப்பா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தந்தையின் ரசிகர். இந்த தொடர்பு எல்லாம் எனக்கு இருக்கிறது. நான் இங்கே வருவதற்கு அதுமட்டும் காரணம் இல்லை.

நானும் பெரியாரின் பேரன்

இந்த கூட்டணி இப்போது எதற்கு வைக்கிறீர்கள். என்ன லாபத்துக்காக என்று கேட்டால், நான் லாபத்தை எண்ணி அரசியலுக்கு வரவில்லை. எனக்கு தேவையான லாபத்தை நீங்கள் என் தொழிலில் ஈட்டித்தந்து இருக்கிறீர்கள். ஆக, நான் வந்தது என் கடமையை செய்வதற்காக. இந்த நாட்டிற்கான கடமையை செய்வதற்காக. தவிர, இது தமிழர்கள் தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய தேர்தல். அதில் நிரூபிக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக போராடுகிறோம்.

நாங்கள் முன்னணி போராளிகள். அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முக்கியமானவர். உங்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் உணர வேண்டும். எங்களை அடக்கி ஆள முடியாது என்று தமிழகம் இப்போது இருக்கும் மையத்துக்கு (மத்திய அரசுக்கு) சொல்ல வேண்டும். மையம் என்றால் இந்த மய்யத்தை சொல்லவில்லை. நாட்டின் மையம் அங்கேதான் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள்தான் மய்யம் என்று நம்புபவன் நான்.

ஆபத்துகாலம்

பல முறை என் கருத்தை சொல்லி இருக்கிறேன். திடீர் என்று கருத்து மாற்றம் செய்யவில்லை. அதே கருத்து உடையவர்களுடன் இணைந்திருக்கிறேன். ஆபத்து காலத்தில் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இப்போது ஆபத்துகாலம். அதனால்தான் என்னுடைய வரைகோடுகளை எல்லாம் கடந்து வந்து இங்கே கை குலுக்கி இருக்கிறேன்.

இது லாபத்துக்காக வைத்திருக்கும் கூட்டணி அல்ல. அப்படி வந்திருந்தால் எனக்கு விஸ்வரூபம் படம் பிரச்சினை வந்தபோதே நான் வந்திருக்கலாம். அது எனது தனிப்பட்ட பிரச்சினை. இப்போது நான் வந்திருப்பது நாட்டுக்கான பிரச்சினை. அதனால் இங்கே வந்திருக்கிறேன்.

இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்குப் பெருமை. கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் நலன்என்று வரும்போது, எது நியாயமோ, அதைச் செய்வதுதான் எங்கள் லட்சியம். ஒத்திகை பார்க்காமல், நான் யோசித்து விட்டுத்தான் இங்கு பேசுகிறேன். பலவிமர்சனங்களைக் கேட்டுவிட்டுத்தான், இது சரியான பாதை என்று தேர்ந்து எடுத்துள்ளேன். என் பயணத்தைப் பார்த்தால், பாதை புரியும்.

என்னைப்போல் நீங்களும் முன்வந்து கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு தனி சிந்தனை உள்ள நாடு என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கான அரிய வாய்ப்பினை காலமும் கழகமும் வழங்கி இருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *