சென்னை, செப்.19-
வடகிழக்கு பருவமழையின்போது கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் குறித்து செயலி மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை முதன்மைச்செயலாளர் அமுதா கூறினார்.
மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளின்போது அதிகனமழை பொழிவதால் பேரழிவு ஏற்படுகிறது. இயற்கை பேரிடரின்போது தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, மாநில போலீஸ் துறை, தீயணைப்பு துறை போன்றவற்றுடன் இணைந்து மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்வது தொடர்பான ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் சென்னை தீவுத்திடலில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கியது.
இந்த கூட்டத்தில் தென் பிராந்திய ராணுவ தளபதி தீரஜ் சேத், தென்மாநில ராணுவ தளபதி கரன்பீர்சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செய்யது அட்டா ஹஸ்னைன், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேரிடர் காலங்களில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொள்வது, பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு விரைந்து முன்கூட்டியே தெரிவிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற முதன்மைச் செயலாளர் அமுதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த மழையின்போது கிடைத்த அனுபவத்தை கொண்டு சென்னையில் வரும் மழைக்காலத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்கூட்டியே படகுகள் மற்றும் மீட்பு சாதனங்களை குறிப்பிட்ட பகுதிகளில் தயாராக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தரும் தரவுகளின் அடிப்படையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் குறித்து ‘டிஎன் அலர்ட்’ என்ற செயலி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.
செல்போனில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்பப்பட உள்ளது. அரசு தரும் முன்னெச்சரிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.