பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?
மா. செழியன்
பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றி பேசும்போது, அதற்கு முதலில் வித்திட்ட பிட் காயின் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சதோஷி நகமட்டோ நிறுவனராக இருந்து, முதன் முதலாக உலகம் முழுவதும் உள்ள காகித கரன்சிகளுக்கு மாற்றாக டிஜிட்டல் குறியீட்டு நாணயமாக ‘பிட் காயின்’–ஐ வெளியிட்டார் அல்லவா? அதனை பின்பற்றி, பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேறு பல நிறுவனங்களும் அதற்கான கிரிப்டோ கரன்சிகளையும் வெளியிட்டார்கள். சில பிரபலமான ஆல்ட் காயின்கள் என்றால் ஈத்திரியம், ரிப்பிள், லைட்காயின், (Ethereum, Ripple, Litecoin) உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிரிப்டோ காயின்கள் அடங்கும்.
இந்த நாணயங்கள் பிட் காயின் அமலாக்கத்தில் உள்ள சில குறைபாடுகளை போக்க உருவாக்கப்பட்டது. சில ஆல்ட்காயின்கள் அதிக பரிவர்த்தனை வேகத்தில் கவனம் செலுத்துகின்றன, மற்றவை புதிய செயல்பாட்டை வழங்குகின்றன. அப்படியாக வெளியிடப்பட்ட வேறு கரன்சிகள் அனைத்தும், பிட்காயினுக்கு மாற்று என்பதால் அவற்றை மாற்று காயின் (Alternate coin) எனும் பொருளில் ‘ஆல்ட் காயின்’ என்று அழைக்கப்படுகிறது.
டிஜிட்டல் சொத்துக்கள்
ஆல்ட் காயின் என்பதும் கிரிப்டோ கரன்சிதான். பிட் காயின் போன்று உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட கிரிப்டோ கரன்சிகள் பல ஆயிரக்கணக்கில் என்று முன்பே பார்த்தோம். இவை அனைத்துமே ஆல்ட் காயின்கள் என்ற பெயரில்தான் அழைக்கப்படுகிறது. ஏனெனில் முதல் முதலாக பணத்திற்கு மாற்றாக வந்தது பிட் காயின் தானே. பணத்திற்கு மாற்றாக, வேறு கிரிப்டோ கரன்சிகள் அதன் பிறகு வந்தாலும்கூட அவை அனைத்தும் அப்படியே அழைக்கப்படுகிறது.
அதேபோல் என்எப்டி–(Non Fungible Token) என்பது ‘ஒரு டிஜிட்டல் சொத்து’. பஞ்சிபிள் என்றால் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக்கூடியது. அதனையே டோக்கன்கள் என்று கூறுகிறோம். டோக்கன்கள் என்பது கிரிப்டோ கரன்சியின் மற்றொரு வடிவம். அவைகளுக்கு சொந்தமாக பிளாக்செயின் இல்லை என்பதுதான் வேறுபாடு என முன்பே சொன்னோம். இந்த டோக்கன்கள், பிளாக்செயின் வளர்ச்சிகாக பயன்படுத்தப்படுகிறது. இதில் சில டோக்கன்கள் கிரிப்டோ கரன்சிகள் போல், நீண்டகாலம் நிலைத்து நிற்பது. சில டோக்கன்கள் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறிய பிறகு, இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (தொடரும்…)
––––––––––––––––––––