பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?
மா. செழியன்
பிளாக்செயினில் இயங்கும் ‘கிரிப்டோ கரன்சி’யில் ‘ஸ்டேக்கிங்’ (Staking) என்பதை பற்றி சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா? அதனைப் பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்வோம். பிளாக்செயின் வளர்ச்சிக்கு முதலீடு செய்வது ‘ஸ்டேக்கிங்’ (Proof-of-Stake–POS) என்று அழைக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு கால முதலீட்டாளர்களுக்கு, வெகுமதிகளாக கிரிப்டோ கரன்சிகள், டோக்கன்கள் வழங்கப்படுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்ப பணிகளை செய்வோருக்கு வழங்கும் கிரிப்டோ வெகுமதிகள் Proof-of-work (PoW) என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்டேக்கிங் பற்றி எளிய முறையில் புரிந்துகொள்ள வேண்டுமானால், பங்குச் சந்தையோடு ஒப்பிட்டால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பெருநிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை பற்றி அறிவோம். பங்குச்சந்தையில் தங்கள் நிறுவனங்களை பட்டியல் இடுவதன் மூலம், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பொதுமக்களிடம் நிதி திரட்ட முடியும். தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொதுமக்களிடம் நிதியை பெற்றுக்கொண்டு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை ஐபிஓ என்ற பெயரில் (IP0-Initial public offer) புதிய பங்கு விநியோகம் செய்கிறார்கள். அதேபோல், எப்பிஓ (FPO-Follow-up Public Offer) என்பது, பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்கள் கூட, மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நிதி திரட்டுவார்கள்.
SHARE VS STAKE
ஆக, பங்குச்சந்தையில் (Share Market) தங்கள் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை (SHARE) பிரித்து விநியோகம் செய்கிறார்கள். அந்த பங்குகளை நீண்ட காலத்துக்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்தை (DIVIDEND) பிரித்துக்கொடுக்கிறார்கள் அல்லவா? அதேபோல் அந்த நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று விட்டால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குளின் விலை ஏறி, சில ஆண்டுகளில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் அல்லவா? அதுபோல் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுவதுதான் ‘ஸ்டேக்கிங்’ (STAKING).
‘ஸ்டேக்கிங்’ என்பது கிரிப்டோகரன்சியின் பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான டோக்கன்களை அல்லது கிரிப்டோ கரன்சிகளை வாங்கி ஒதுக்குவதாகும். அப்படியான பங்கேற்பாளர் குறிப்பிட்ட நெட்வொர்க்கின் டெவலப்பர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறையின்படி டோக்கன்களை வைத்திருந்தால் ஒரு பிளாக் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன்களை வைத்திருப்பதன் மூலம் பங்கேற்பாளர் பிளாக்செயின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் சரிபார்ப்பாளராக மாறுகிறார். அதற்காகவே அந்த கிரிப்டோ வெகுமதிகள் வழங்கப்படுகிறது.
(தொடரும்…)