மாஸ்டர் நோட்ஸ்–காயின், டோக்கன்!
மா. செழியன்
பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது மையப்படுத்தப்படாத, பரவலாக்கப்பட்ட தொடர் பதிவேட்டு தொழில்நுட்பம் என்று பார்த்தோம் அல்லவா? அப்படியானால், அதனை பராமரிப்பது யார்? சங்கிலித் தொடராக பிளாக்குகளை உருவாக்கி, வளர்ச்சியடைய செய்ய யார் முன்வருவார்கள். அதற்கான பல்வேறு தொழில்நுட்பப் பணிகளை, பிளாக்செயின் அடிப்படையில் யார் செய்ய முன்வருகிறார்களோ, அவர்களுக்கான பரிவர்த்தனை வெகுமதிகள்தான், பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான கிரிப்டோ கரன்சி மற்றும் டோக்கன்கள் என்பது. அதனை ஒருங்கிணைக்கும் தலைமை கட்டுப்பாட்டு முனையமே மாஸ்டர் நோட்கள் (Master Node) என்று அழைக்கப்படுகிறது.
பிளாக்செயின் நெட்வொர்க்கில் முதன்மையான கட்டுப்பாட்டு முனையான ‘மாஸ்டர் நோட்’, பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்கிறது. பிளாக்செயினில் நடைபெறும் அனைத்து புதிய பரிவர்த்தனைகளையும் சரிபார்த்து, அவை செல்லுபடியானவை மற்றும் இரட்டை செலவு, இரட்டை பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. மேலும் புதிய தகவல்களை உள்ளடக்கிய புதிய பிளாக்குகளை உருவாக்குகிறது. நெட்வொர்க்கின் ஒத்திசைவை பராமரித்து, பிளாக்செயின் தொடர்பான பணிகள் நடைபெறும் பிற முனைகளுடன் தகவல் தொடர்புகளை நிர்வகிக்கிறது. அத்துடன் பிளாக்செயின் தரவுகளையும் சேமிக்கிறது.
காயின், டோக்கன் வேறுபாடு
பிளாக்செயினுக்கான புதிய பிளாக்குகள் உருவாக்கம் உள்ளிட்ட இந்த பணிகள் அனைத்தையும் செய்யும் தொழில்நுட்பங்களை செய்வோருக்கு, பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான குறியீட்டு நாணயங்களான கிரிப்டோ கரன்சிகள், டோக்கன் ஆகியவை வெகுமதிகளாக தரப்படுகிறது. வங்கியில் வைப்பு நிதியாக (FIXED DEPOSIT) வைக்கும் போது, அந்த நிதியை பயன்படுத்தி வங்கி லாபம் ஈட்டுவதால் வங்கிகள் நமக்கு வட்டி தருகிறது அல்லவா? அதுபோல், பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கு பங்களிக்க முதலீடு செய்வோருக்கு, கிரிப்டோ கரன்சிகள் வெகுமதி என்ற பெயரில் ‘STAKING’ செய்வோருக்கு தரப்படுகிறது.
‘ஸ்டேக்கிங்’ முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் தரப்படும் கிரிப்டோ வெகுமதிகளை, கிரிப்டோ சந்தைகளில் விற்பனை செய்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு, கிரிப்டோ கரன்சிகள் உதவுவதைப் போலவே, NFT எனப்படும் டோக்கன்கள் (NON FUNGIBLE TOKEN) உதவுகிறது. இந்த டோக்கன்களும் கிரிப்டோ கரன்சி எனும் குறியீட்டு நாணயங்கள்தான் என்றாலும், டோக்கன்கள் எனப்படும் கிரிப்டோ கரன்சிகளுக்கு என்று சொந்தமான பிளாக்செயின் இல்லை. மாறாக, வேறு பிளாக்செயின்களில் இணைந்து பிளாக் செயின் தொழில்நுட்ப பங்காற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்பது மட்டுமே டோக்கன்களுக்கான வேறுபாடு. (தொடரும்…)