பிளாக்செயின் ஏற்படுத்தி வரும் புரட்சி
பிளாக்செயின் உருவாக்கம், சந்தைகள்!
மா. செழியன்
பிளாக்செயினின் ஒவ்வொரு பிளாக்கை உருவாக்குபவருக்கு குறிப்பிட்ட கிரிப்டோ கரன்சிகள் வெகுமதிகளாக அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முதன் முதலில் உருவாக்கப்பட்ட கிரிப்டோ கரன்சியான “பிட் காயின்”–ஐ எடுத்துக் கொள்வோம். அதனை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கியவர் சதோஷி நெகமட்டோ என்று முன்பே குறிப்பிட்டோம். அவர் பணத்துக்கு மாற்றாக, “குறியாக்க டிஜிட்டல் நாணயத்தை” பிளாக்குகளில் உருவாக்குகிறார். முதன் முதலாக 2009 ஜனவரி 3 ந்தேதி 50 பிட் காயின்கள் கொண்ட முதல் பிளாக்கை உருவாக்குகிறார். அதனை மூலத் தொகுதி (Genesis block) என்று அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு பிளாக்கில் உள்ள ஒவ்வொரு ‘பிட் காயினும்’ தனித்த குறியீட்டுகளை கொண்டிருக்கும். அவர், வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, குறிப்பிட்ட அளவுக்கான “பிட் காயின்களை” உருவாக்குகிறார். அதற்கான தொழில் நுட்பத்தையும் அந்த வெள்ளை அறிக்கையில் வெளியிட்டு, மற்றவர்கள் உருவாக்கவும் வழி செய்கிறார். அப்படி “பிட் காயின் பிளாக்குகளை உருவாக்குபவர்களை சுரங்குநர் (MINOR) என்று அழைக்கப்படுகிறார்கள்.
கிரிப்டோ கரன்சி மார்க்கெட்
அதற்காக மிகப்பெரிய சூப்பர் கணினிகள் பயன்படுத்தப்படுகிறது. ‘பிட் காயின்’கள் கொண்ட பிளாக்குகள் உருவாக்கும் ஒவ்வொருவருக்கும் தொடக்க காலத்தில் 50 பிட் காயின்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 1/2 பிட்காயின்கள் வழங்கப்படுகிறது. மொத்த காயின்களின் அளவு 2 கோடியே 10 லட்சம் என்று வரையறுக்கப்பட்டுள்ளதால், அதற்கு மேல் அதனை உருவாக்க முடியாது.
வெளியிட்ட போது ரூ.2.40 மதிப்பில் இருந்த ஒரு பிட் காயின் மதிப்பு தற்போது ரூ.50 லட்சம் முதல் 60 லட்சம் வரையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை வாங்கவும் விற்கவும் உலகம் முழுவதும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்க பங்குச்சந்தை (SHARE MARKET) இருப்பதைப் போல, கிரிப்டோ கரன்சிகளை வாங்கி விற்க, நூற்றுக்கணக்கில், கிரிப்டோ சந்தைகள் (COIN MARKET) 24 மணி நேரமும் உலகம் முழுவதும் இயங்குகிறது. பைனான்ஸ் (BINANCE), கூகாயின் (KUCOIN), காயின் ஜெக்கோ, பிட்ஸ்டாம்ப், காயின்பேஸ் (Coinbase) ஜெமினி, கிராக்கென் (Kraken) என நூற்றுக்கணக்கான கிரிப்டோ கரன்சி சந்தைகள் உள்ளன. இந்திய ரூபாயில் பரிமாற்றம் செய்யும் பிட்கொய்வா, வாசிர்எக்ஸ், காயின் டிசிஎக்ஸ், ஜியோட்டஸ், பிட் ஜிஎன்எஸ் என 20 க்கும் மேற்பட்ட சந்தைகளும் உள்ளது. இவை அனைத்தும் தனித்தனி கிரிப்டோ கரன்சிகளையும் வெளியிட்டுள்ளது.
(தொடரும்…)