பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?
ஸ்டேக்கிங் குறித்து சென்ற பகுதியில் பார்த்தோம் அல்லவா? அதனை, பங்குச் சந்தையோடு ஒப்பிட்டு பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம்…உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் பங்குச்சந்தையில் பொதுமக்கள் ஈடுபடுவது மிகவும் அதிகம். அதனால்தான், அவர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளார்கள் என்று கூட சொல்லலாம். பெரு நிறுவனங்களின் லாபத்தை வளர்ச்சியை பொதுமக்களும் பங்கிட்டுக்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அமெரிக்காவில் 55 விழுக்காடு மக்கள் பங்குச்சந்தையில் ஈடுபடுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் 33 சதவீதம் பேர் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள். சீனா மக்கள் தொகையில் கூட 15 சதவீதத்தினர் பங்குச்சந்தையில் பங்குபெறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் வெறுமனே 3 சதவீதத்தினர்தான் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக, பங்குச்சந்தையில் பல்வேறு பெரு நிறுவனங்கள், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, தங்கள் பங்குகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் நிதி திரட்டுகிறது. உலக கோடீஸ்வரர்கள், இந்திய கோடீஸ்வரர்கள் என்று கூறப்படுவது எல்லாம், பங்குச்சந்தையில் உள்ள பங்குகளை வைத்துதானே. அதனால்தான் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் வீழ்ச்சி அடையும்போது, உலக கோடீஸ்வரர்களில் 20 வது இடத்துக்கும் 30 வது இடத்திற்கும் சென்று விட்டார் என்று கூறுகிறோம்தானே?
திட்டம் சரியானதா?
பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் சில நிறுவனங்கள், சில வேளைகளில் லாபம் ஈட்ட முடியாமல், மூடிவிடுவதை பார்த்திருக்கிறோம் அல்லவா? சிறிய தேநீர் கடை தொடங்கும் அனைவரும் வெற்றி பெற்றுவிடுகிறார்களா? இல்லைதானே. 10 பேர் தொடங்கினால் சிலர் சில மாதங்களில் முடிவிடுகிறார்கள் அல்லவா? அதுபோல், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கூட, சில புதிய தொழில்களை தொடங்க, பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டிவிட்டு, நடத்த முடியாமல் நிறுத்தியதை கேள்விப்பட்டிருக்கிறோம். வங்கிகளில் கூட, பெரும் வளர்ச்சி பெற்றுள்ள சில வங்கிகளையும் பார்க்கிறோம். சில வங்கிகள் நட்டமடைந்தையும் பார்த்திருக்கிறோம் அல்லவா?
அதுபோல் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், கிரிப்டோ சந்தைகளில் தங்கள் கிரிப்டோ கரன்சிகளை வெளியிடுகிறார்கள். சிலசமயம் சரியான திட்டமிடல் இல்லாததால், இடையில் நிறுத்திவிடும் நிகழ்வுகளும் நடக்கிறது. ஆனால் சிறந்த நோக்கத்துக்காக, சிறப்பான திட்டங்களுடன் தொடங்கும் பிளாக்செயின் நிறுவனங்களின் கிரிப்டோ நாணயங்கள் சந்தையில் பெரும் வரவேற்பை பெறுகிறது. எனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஈடுபடும் நிறுவனத்தின் திட்டமிடல்கள் சரியாக உள்ளதா? என்பதை அறிந்தே அதில் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.
(தொடரும்…)