புதுடெல்லி, ஏப்.1–
வருமான வரி செலுத்தும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டு இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வருமானவரி செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய வரி விதிப்பு முறை தொடர்பான தவறான தகவல்கள் சில சமூக ஊடக தளங்களில் பரப்பப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. எனவே இது தெளிவுபடுத்தப்படுகிறது. 1.1.2024 முதல் வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரி செலுத்தும் புதிய முறை நிறுவனங்களுக்காக இல்லாமல் தனிநபர்கள் பயனடையும் வகையில் மாற்றப்பட்டது.
கடந்த 2023–24நிதியாண்டில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இது அடுத்த நிதியாண்டான 2024–25 காலகட்டத்திலும் தொடரும். வருமான வரி செலுத்தும் பழைய முறையில் விலக்கு தொகையான ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய், குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் எல்ஐசி, வீட்டுக்கடன், வாடகை உள்ளிட்டவை கட்டியது போக மீதத் தொகை வரிக்கு உட்படுத்தப்படும்.
வருமான வரி செலுத்துவது புதிய முறையா பழைய முறையா என்பதை வரி செலுத்துவோரே வழக்கம் போல தேர்வு செய்து கொள்லாம். தேர்வு செய்துகொள்வதில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பழைய முறையில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை. அதே நேரம் இரண்டரை லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை 5 விழுக்காடு வரி செலுத்த வேண்டும். 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர் 20 விழுக்காடும், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் வருமானம் இருந்தால் அவர்களின் வருவாயில் 30 விழுக்காடும் வரியாக செலுத்த வேண்டும்.