டெல்லி, பிப். 17–
வருமானவரி துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் எப்போதும்போல், நேர்மையுடனும் அச்சமின்றியும் செயல்படுவோம் என்று பிபிசி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது அங்கு நடைபெற்ற கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது. அதனை பாரதீய ஜனதா அரசு தடை செய்தது. அதற்கு பிறகு பிபிசியில் இந்த வருமானவரி ஆய்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய் கிழமை தொடங்கி, கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த வருமான வரி சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த மூன்று நாள் வருமான வரி ஆய்வின் முடிவில், பல்வேறு ஆவணங்களை வருமான வரி துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகங்களில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.
அச்சமின்றி செயல்படுவோம்
இந்நிலையில், இதுகுறித்து பிபிசி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:–
வருமான வரிதுறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறிவிட்டனர். நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை அளிப்போம். விரைவில் இந்த விவகரங்கள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.
தற்போது நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிபிசி ஒரு நம்பகமான, சுதந்திரமான ஊடக அமைப்பு. நாங்கள் எங்கள் சக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கிறோம். அவர்கள் எப்போதும் அச்சம் அல்லது தயவு இல்லாமல் தொடர்ந்து நேர்மையுடன் செய்திகளை தயார் செய்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.