வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சேர்த்ததாக வழக்கு
திருவாரூர், ஜூலை 11–
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்திருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆர்.காமராஜ் மற்றும் டாக்டர்களான அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். இவர் கடந்த 2015 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் முறைகேடாக அவர் பெயரிலும், அவரது மகன்களான டாக்டர் இனியன், இன்பன் மற்றும் நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சுமார் 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக திருவாரூர் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வருவாய்க்கு அதிகமாக ரூ.127 கோடி
இதையடுத்து மன்னார்குடியில் உள்ள ஆர்.காமராஜ் வீடு, தஞ்சாவூர் பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி டாக்டர் மோகன், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை என தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 127 கோடியே 49 லட்சம் சொத்து சேர்த்திருப்பதாக கூறி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் திருவாரூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கூறும்போது, ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரது நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு, நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற பினாமி பெயரில் இடத்தை வாங்கி, அதில் அவரது மகன்களான இனியன், இன்பன் பெயரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்கிற பன்னோக்கு மருத்துவமனை கட்டியுள்ளார். இதன் மூலமும் இதர வகையிலும் 127 கோடி 49 லட்சம் 9 ஆயிரத்து 85 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்திருப்பதாக கூறியுள்ளனர்.