செய்திகள்

குறைந்த கட்டணத்தில் 806 ஏசி மூன்றடுக்கு ரெயில் பெட்டிகள்

சென்னை, ஜூலை 22–

பொதுமக்கள் மலிவான கட்டணத்தில் ஏசி வகுப்பில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, 806 ஏசி மூன்றடுக்கு எகானமி ரயில் பெட்டிகள் நடப்பாண்டில் ரயில்வேயில் இணைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது 25 ஏசி மூன்றடுக்கு எகானமி ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மேற்கு ரயில்வேயில் 10, வடக்கு மத்திய ரயில்வேயில் 7, வடமேற்கு ரயில்வேயில் 5 மற்றும் வடக்கு ரயில்வேயில் 3 பெட்டிகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் மேலும் 806 ஏசி மூன்றடுக்கு எகானமி ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் குறைவு

இந்த பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணமும், மிக குறைவாகவே இருக்கும். தற்போதுள்ள ஏசி வகுப்பு மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்புக்கு கட்டணத்துக்கு இடைப்பட்டதாக இதன் கட்டணம் இருக்கும்.

பஞ்சாப்பின் கபூர்தலா, சென்னை மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் இருக்கும் ரயில்வே தொழிற்சாலைகளில் இந்த மூன்றடுக்கு ஏசி எகானமி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். அக்டோபரில் இருந்து போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கப்படும்.

2021-2022 இறுதிக்குள் 806 பெட்டிகளும் தயாரித்து முடித்து பயன்பாட்டுக்கு வழங்கப்படும். புதிய ரயில் பெட்டியில் 72 இருக்கைகளுக்கு மாறாக 83 இருக்கைகள் இடம்பெறும். ஏற்கனவே இருக்கும் ஏசி பெட்டிகளை விட இவற்றில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என்று ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *