செய்திகள் நாடும் நடப்பும்

வரி சுமையே!


ஆர்.முத்துக்குமார்


நிதியாண்டு முடிவடையும் போது, அதாவது மார்ச் மாத இறுதி வந்து விட்டால், சாமானியனின் மனதில் வரியோ வரி என மன வலியுடன் வரி சுமையை குறைக்க வழிகளை தேடுவது வாடிக்கை!

நேரடியாகச் செலுத்தும் நேர்முக வரியிலிருந்து தப்பித்தாலும், அவர்கள் வாங்கும் பொருள்கள் மீதான மறைமுக வரியை அவர்கள் செலுத்தவே செய்கிறார்கள். அரசு என்ற அமைப்பு உருவானபோதே வரியும் தோன்றிவிட்டது!

வரிச் சேமிப்புக் கடமைகளை நிறைவேற்ற கடைசி நிமிட அவசரம் தேவையற்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் நிதி விவகாரங்களை சீராக வைத்து இருப்பதே புத்திசாலித்தனம்!

பெரிய நிறுவனங்கள் தங்கள் பெருநிறுவன வருமான வரிச்சுமைகளை குறைக்க வரிச் சலுகைகள் மற்றும் விலக்குகளின் அம்சங்களை பயன்படுத்துகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.16,297 கோடி வரி செலுத்துகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புருனே, குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் அவற்றின் ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களால் வலுவான பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்பதால் அவர்கள் தனிநபர் வருமான வரிகளை வசூலிப்பதில்லை. மாலத்தீவுகள், மொனாக்கோ, நவுரு மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளும் பல்வேறு காரணங்களுக்காக வரிவிலக்கு பெற்றுள்ளன.

ஏப்ரல் மாதம் முதல் 2023-–24 பட்ஜெட் நடைமுறைக்கு வந்துவிடும், கூடவே புதிய வரி விதிகள் மற்றும் புதிய வரி ஆட்சியின் கீழ் நிவாரணம் தரும். ஆனால் கவலைகள் நிதியாண்டின் இறுதியில் உங்கள் வரி பில்களைப் பற்றியது!

இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு வரியிலிருந்து தப்பிக்க வழியே கிடையாது, காரணம் இந்தியா வரி சொர்க்க பூமியில்லை! அதை அரசாங்கம் மிக தெளிவாக சுட்டிக்காட்டி வருகிறது.

ஆனால் நம் நாட்டில், முன்பை விட இன்று காகிதப்பணிகள் குறைவாகவே உள்ளன. வரியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு வரி விதிகளில் முறையான வழிகளைக் கண்டறிய உங்களை அனுமதிக்கிறது. சம்பளம் பெறுபவர்களுக்கு, விலக்குகள் தெளிவாக உள்ளன. முறையான வருமானம் மற்றும் செலவு மேலாண்மை மூலம் தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி தவிர்ப்பு சாத்தியமாகும்.

இ.பி.எப், பி.பி.எப். போன்ற வரிச் சேமிப்புக் கருவிகளில் முதலீடு செய்வது, ஒரே நேரத்தில் நிதி இலக்குகள் மற்றும் வரிச் சேமிப்புகளை (ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டு வரம்பு வரை) அடையும் இரட்டை நோக்கத்திற்கு உதவும். நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்தால், இந்த முதலீடுகள் வரியைச் சேமிக்க உதவும்.

வரிவிதிப்பு கடுமையானபோது மக்கள் அல்லல்பட்டனர். இவர்களுக்கு ஆதரவான குரல் ‘செவியறிவுறுஉ’ என்ற துறையில் பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுச் செய்யுளில் (184) இடம் பெற்றுள்ளது. பல்லவர், பாண்டியர், இடைக்காலச் சோழர் கல்வெட்டுகளில் பல்வேறு வரி இனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இடைக்காலச் சோழர் ஆட்சியில் நானூற்றுக்கும் மேற்பட்ட வரிகள் நடைமுறையில் இருந்ததாக வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை குறிப்பிடுகிறார். குடிஊழியக்கார் மீதும் வரி விதிக்கப்பட்டு உள்ளது. வண்ணார்கள் துணி துவைக்கப் பயன்படுத்தும் கல் மீது ‘வண்ணாரப்பாறை’ ‘வண்ணாற் கற்காசு’ என்கிற வரிகள் விதிக்கப்பட்டன. குயவர்கள் ‘குசக்காணம்’ என்ற வரிவிதிப்புக்கு ஆளாகினர். நாவிதர்களும் வரிவிதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

உழுகுடிகள் ஒருதானியத்தைப் பயிரிடும் போது ஊடுபயிராக வேறொரு தானியத்தைதப் பயிர் செய்தால் அதற்கும் வரி விதிக்கப்பட்டது. கள் இறக்குவோர் ‘ஈழப்பூச்சி’ என்ற வரியையும், ஆயர்கள் ‘இடைப்பாட்டம்’ என்ற வரியையும் செலுத்த நேரிட்டது. திருணம் செய்து கொள்வோர் ‘கண்ணாலக்காணம்’ என்ற வரியைச் செலுத்த வேண்டி இருந்தது. காவிரி ஆற்றுக்குக் கரை எடுத்த போது ‘காவிரிக்கரை விநியோகம்’ என்ற வரி விதிக்கப்பட்டது.

வரி என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கான வருவாயின் ஆதாரமாகும், இதன் மூலம் அதன் குடிமக்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு, வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பை வழங்க முயற்சிக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *