டெல்லி, மே 17–
வரிகள் குறித்த பங்குச்சந்தை வாடிக்கையாளரின் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பதிலால், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மும்பையில் `இந்திய நிதிச்சந்தையின் பார்வை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதில் முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை புரோக்கர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட உரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினர்.
அந்த வகையில் ஒரு பங்குச்சந்தை புரோக்கர், “முதலீட்டாளர்கள் அபாயங்களை எதிர்கொண்டு, பணத்தை முதலீடு செய்கின்றனர். ஆனால் அரசு கடுமையான வரிகளை விதிக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அரசு சி.எஸ்.டி, ஐ.சி.எஸ்.டி, முத்திரை தீர்வை, எஸ்.டி.டி, நீண்டகால கேபிடள் கெய்ன் வரி போன்ற வரிகளை விதிக்கிறது. இதனால், புரோக்கர்களை விட ஒன்றிய அரசு அதிகமாக சம்பாதிக்கிறது. முதலீட்டாளர்களும், புரோக்கர்களும் அபாயங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அரசுக்கு அது போன்ற பிரச்னை இல்லை.
மத்திய அரசு ஸ்லீப்பிங் பார்ட்னரா?
அனைத்து வகையான நிதி முதலீட்டு அபாயங்களையும் நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆனால் அனைத்து விதமான லாபங்களையும் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. நாங்கள் வேலை செய்யும் பார்ட்னர், நீங்கள் எங்களுடைய சிலீப்பிங் பார்ட்னரா? என்றார். ஒரு வீட்டை வாங்குவதற்கு செலுத்த வேண்டிய வரிகள் என்னென்ன? ஸ்டாம்ப் டியூட்டி, ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் ஒரு வீடு வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும். மும்பையில் ஒரு வாங்கினால் 11 சதவிகிதம் வரி கட்ட வேண்டி உள்ளது. குறைந்த வளங்களே கொண்டுள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது. அரசு போடும் வரிகளை கடந்த ஒரு முதலீட்டாளர் எப்படி செயல்பட முடியும்’ என்றார்.
புரோக்கர் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு தன்னிடம் பதில் இல்லை என முதலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, ஸ்லீப்பிங் பார்ட்னர், இங்கு அமர்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கமாட்டார்’ என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். பொதுமக்கள் வரிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் அமைச்சர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. நிர்மலா சீதாராமனின் பதிலுக்கு சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர்