அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

வரவேற்பறை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அறைகள் சொல்லும் கதைகள் – 2


அறைகள் சொல்லும் கதைகள் உங்கள் பார்வைக்கு …! அறைகள் அழகழகாய் நம் வாழ்வில் அங்கமாய் இருக்க அவைகள் நம் வாழ்வின் காட்சிகள். காலச் சக்கர ஓட்டத்தில் காட்சிகள் மாறும். மாற்றம் தான் நிரந்தரம் என்பதை உணர்ந்து அந்த மாற்றங்களைச் சாட்சியாக நிலைத்து நிற்கும் ஒரு கண்காணிப்புக் கட்டமைப்பும் இந்த அறைகள் தானே? அதை உறுதிப்படுத்த சிறுகதை ஜாம்பவான் திரைப்பட இயக்குநர் ராஜா செல்லமுத்து, முத்து முத்தானக் கதைக்களங்களைத் தேடும் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார் .அவை யாவும் சிறுகதைகளாக மக்கள் குரல் பிரசுரிக்க விரைவில் அவரது பெருமைமிகு காவியப் படைப்பாக மிளிர, அவரது கலைப்பயணத்தில் புதிய உச்சத்தைத் தொட வைக்கும். மக்கள் குரல் வாசகர்கள் இவரது பூக்களை விரைவில் கோர்க்கப்பட்ட முழுமாலையாய் ரசிக்கத் தான் போகிறார்கள் என்பது மக்கள் குரல் ஆசிரியர் குழுவின் உத்திரவாதம். ஆர்.முத்துக்குமார் -மக்கள்குரல் ஆசிரியர்

நகரின் பிரதான சாலையில் வானை முட்டும் அளவிற்கு வளர்ந்து நின்றது அந்த தனியார் ஓட்டல். தரை முதல் உச்சி வரை முழுவதும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்ட அந்தத் தனியார் ஓட்டலுக்கு நகரில் தனி மரியாதை உண்டு. தங்கும் கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றாலும் அந்த விடுதியில் தங்குவதே பெருமை என்று நினைத்து பெரிய பெரிய பணக்காரர்களும் தொழில் அதிபர்களும் அங்கு வந்து தங்குவார்கள். விரிந்து பரந்த அந்த விடுதியில் ஓட்டல் வரவேற்புரை பக்காவாக இருந்தது. இரண்டு பக்கமும் அழகு பெண்கள் நல்ல நளினம். பெண்களுக்கான அத்தனை லட்சணங்கள் அடங்கிய மங்கைகள் .அந்த ஓட்டலுக்கு வருபவர்களைச் சிரித்து பேசி வரவேற்று உள்ளே அனுப்ப வேண்டும். அதுதான் அந்த மங்கையர்களுக்குஇட்ட வேலை. புன்னகை வருகிறதோ இல்லையோ இதழ்களில் புன்னகை வர வைத்துக்கொண்டு வருகிறவன் நல்லவனோ கெட்டவனோ அவர்களுக்கு வெல்கம் சொல்லி வரவேற்பது தான் அந்தப் பெண்களின் வேலையாக இருந்தது. அதில் அந்த ஓட்டலுக்கு வரும் ஆண்களில் பாதிப்பேர் அந்த வரவேற்பு பெண்களைப் பார்த்து வாய் பிளந்து போவார்கள். அந்தப் பெண்களின் முகத்தை பார்ப்பதை விட அங்க அவயங்களைப் பார்த்து தங்களுக்கு தாங்களே புன் சிரிப்பை வரவழைத்துக் கொள்வார்கள் .

இது அத்தனையும் அங்கு வரவேற்புப் பெண்களாக வேலை செய்து கொண்டிருந்த நிகிதாவுக்கும் சரிகாவுக்கும் தெரியாமல் இல்லை.

சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாலும் கழுகுக் கண்களால் அதைப் பார்த்து கவ்விக் கொண்டு போகும் கள்ளப் பார்வை உள்ள எத்தனையோ பேரின் காமப் பார்வையில் இருந்து தப்பித்தான் நிகிதாவும் சரிதாவும் வரவேற்பு அறையில் நின்று கொண்டிருப்பார்கள். காரணம் சம்பளம் .

ஏழை குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பெண்களின் வனப்பிலென்னவோ வசதியாக தான் இருந்தார்கள். அதனால் இரண்டு பெண்களையும் வரவேற்பு வளையத்துக்குள் அந்தப் பிரதான ஓட்டல் அமர்த்தி இருந்தது. காலையிலிருந்து இரவு வரை புன்னகை பூத்துப் பூத்தே அந்த இரண்டு பெண்களின் இதழ்கள் செக்கச் சிவந்த கோவைப் பழமாகச் சிவந்து நின்றன .சிரிக்காமல் வரவேற்றால் அந்த ஓட்டலின் மேலாளர்

ஏன் சிரிக்கல? என்று கடிந்து கொள்வான்.இடுப்புப் பகுதி கொஞ்சம் தெரிய வேண்டும் .மார்பு பகுதி கொஞ்சம் விலகி இருக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்று நிகிதாவிற்கும் சரிகாவிற்கும் சொல்லிக் கொடுத்திருந்தான் அந்த மேலாளர்

என்ன இது? என்ன வாழ்க்கை இது? பெண்மையை இழிவு படுத்தித் தான் பிழைப்பு நடத்த வேண்டுமா?

மற்ற தாய்தகப்பன் போல என் தாய் தகப்பனும் இருந்திருந்தால் இந்த மானங்கெட்ட வாழ்க்கை நமக்கு வாய்த்து இருக்காது. வருகிறவன் போகிறவனை எல்லாம் பார்த்து சிரிப்பது அவர்கள் கண்களுக்கு காட்சி பொருளாக விருந்தளிப்பது இதுதான் வரவேற்பு பெண்களின் வரலாறா ? என்று தினமும் வருந்தி கொள்வார்கள் .

“என்ன செய்ய நிகிதா? சிரிக்கிறதுனால நாம நமக்கு எதுவும் குறைந்து போறதில்ல. அவர்கள பார்க்கிறதுனால நம் அங்கங்கள் குறைகிறது இல்ல. நாம ஏதும் தப்பா போறதும் இல்ல. வேற வழியில்ல நாம ஏழ குடும்பத்தில் பிறந்துட்டோம். இதெல்லாம் பட்டுத்தான் ஆகணும்னு இருக்கு. போறது வரைக்கும் போகட்டும் இந்த வாழ்க்கை. நாளைக்கு நமக்கும் ஒரு நல்ல வாழ்க்கை வந்தால் இந்த வரவேற்பு பெண்களே இல்லாத ஒரு உலகத்தை நாம் உருவாக்கலாம். ஆம்பளைங்க போதைக்கு பொம்பளைங்கள காட்சிப்பொருளா வைக்கிற அடிமைத்தனத்தை அடியோட அழிக்கணும். ஏன்னா நம்மைச் சுத்தி சுத்தி பார்க்கிற எத்தனையோ ஆம்பளைகளை நாம புத்தியில் ஏத்தி வச்சோம்னா பொழப்பு நடத்த முடியாது. போய் தொலையட்டும் ” என்று ஆட்கள் வராத நேரம் நிகிதாவும் சரிகாவும் பேசிக்கொண்டார்கள்.

“இல்ல எனக்கு என்னவோ கஷ்டமா இருக்கு .எனக்கு இந்த வேலை புதுசு .ஏதோ வரவேற்பு பெண்கள்னா சும்மா நிக்கிற வேலைன்னு நினைச்சுட்டு வந்தேன். ஆனா இது தப்பா போற வேலையை விட ரொம்ப தப்பான வேலையா இருக்கு. வர்ற ஆளுக எல்லாம் பாக்குற பார்வையிலேயே உடம்பெல்லாம் கூனிக் குறுகுது. என்னால இந்த வேலையத் தொடர முடியாதுன்னு நினைக்கிறேன். நீ வேணும்னா இங்க இரு ” என்று நிகிதாவிடம் சொன்னாள் சரிகா.

” இல்ல நீ சொல்றது தப்பு. எனக்கும்தான் அந்தப் பிரச்சினை இருக்கு. ஆனா நான் எதையும் மனசுக்குள்ள வைக்கிறது இல்ல. இங்க உடம்ப விக்கிறத விட , மனசு விக்கிறதுல தான் வலி அதிகமா இருக்கு. நாம மனச விக்கிறோம். வலி கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். பொறுத்துக்கிடலாம்” என்று அந்த வரவேற்பு பெண்கள் வரவேற்பு அறையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆட்கள் புடை சூழ ஒரு அரசியல்வாதி வந்தார். அவரை வரவேற்று வரவேற்கும் வாசகங்கள் அதிகமாகி அந்த ஓட்டலையே நிறைத்தது. தொண்டர்களின் குரல், அத்தனை மனிதர்கள் குரல் அந்த வரவேற்பு அறையை நிறைத்தன.

சரிகாவும் நிகிதாவும் இதைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாலும் அந்த அரசியல்வாதியின் கடுகு கண்கள் மட்டும் நிகிதாவையும் சரி காவையும் வட்டமிட்டுப் பார்த்தன அவன் உதடு திறக்காத சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து இருப்பதை அறிந்து கொண்டார்கள் இருவரும். வாழ்த்துச் சொல்லிய தலைவனை லிப்ட்டில் ஏற்றிவிட்டு வெளியே நடந்தார்கள், தொண்டர்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அரசியல்வாதி தங்கி இருந்த அறையில் இருந்து தொலைபேசி மணி அடித்தது.

” ஹலோ வணக்கம் என்று கொஞ்சும் குரலில் நிகிதா’’ பேசினாள்

” வணக்கம் நான் நிலக்கோட்டை நீலகண்டன் பேசுறேன். . வர்ற தேர்தல்ல நான் எம்எல்ஏ ஆயிடுவேன் “என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதற்கு முன்னே சிரித்துக் கொண்டான்.

* என்ன சார் வேணும் தண்ணீரா? கூல்ட்ரிங்ஸா? சாப்பிடுவதற்கு வேற என்ன வேணும் ?என்று கேட்டாள் , நிகிதா

” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் நம்ம ரூமுக்கு வந்து போக முடியுமா?’’ என்று நேராகவே கேட்டான் அந்த நிலக்கோட்டை நீலகண்டன்.

” இல்ல சார் ஓட்டல்ல வேலை இருக்கு. நாங்க வரவேற்பு பெண்கள் .வரவங்கள எல்லாம் வரவேற்கிறது தான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதுக்கு தான் சம்பளம் கொடுக்குறாங்க. நாங்க மேல எல்லாம் வர மாட்டோம். அதுக்கு நீங்க வேற ஆளப் பார்க்கலாம் “என்று சொல்லி போனை துண்டித்தாள் நிகிதா

எதிர் திசையில் என்ன நடந்திருக்கும் என்று யோசித்த சரிகா

” நான் சொன்னேன்ல இப்படித்தான் எல்லா மனுசங்களும் இருப்பாங்க. இந்த வேலையை விட்டு விடலாமே?” என்று சரிகா சொன்னபோது அடுத்த தொலைபேசி மணி அடித்தது.

இப்போது அந்த ஓட்டலில் மேலாளர் தொலைபேசி எடுத்தார்.

” வணக்கம் சார் நீங்க சொன்னா செய்யாம இருக்க முடியுமா? இந்த ஓட்டல் உங்களுடையது. நான் உடனே பண்றேன் சார் .இந்தா இப்ப உடனே சொல்லிடுறேன்” என்று ஏதோ பாதிப் பாதியாக பேசிக் கொண்டிருந்தார் அந்த மேலாளர்.

பேசி முடித்ததும் நிகிதாவையும் சரிகாவையும் பார்த்து

“கங்கிராஜுலேஷன்ஸ்… உங்கள இந்த ஓட்டல்ல மேனேஜரா அப்பாயின்மென்ட் பண்ணி இருக்கிறார் இந்த ஓட்டல் ஓனர் என்று அந்த மேலாளர் சொன்னார்.அதைக் கேட்டதும் சந்தோசத்தின் உச்சிக்கு போனார்கள் நிகிதாவும் சரிகாவும்.

” ரொம்ப நன்றி சார் .நாங்க இந்த வரவேற்பு வேலை வேணாம்னு சொல்லி வேலைய ரிசைன் பண்ணலாம்னு இருந்தோம். ஆனா நீங்க அதுக்குள்ள ஒரு இன்ப அதிர்ச்சியை தந்துட்டீங்க ரொம்ப சந்தோஷம் ” என்று சொல்லி வாய் மூடுவதற்குள் மறுபடியும் அந்த தொலைபேசி அலறியது .

“எஸ் சார் உடனே அனுப்பி வைக்கிறேன் சார். ஓகே சார்” என்று துண்டு துண்டாகப் பேசிய மேலாளர்

சரிகாவை, நிகிதா உங்க ரெண்டு பேரையும் ஓட்டல் முதலாளி வரச் சொல்றாரு போய் பாத்துட்டு வாங்க “

என்று மேலாளர் சொல்ல சந்தோசத்தில் திளைத்து லிப்ட்டில் ஏறாமல் மாடிப்படி வழியாக இருவரும் ஏறினார்கள்.

முதலாளி தங்கியிருந்த அறையைத் திறந்து பார்த்த போது, அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன்னால் நிகிதாவையும் சரிகாவையும் அங்கமங்கமாக ரசித்த அதே நிலக்கோட்டை நீலகண்டன் தான் அந்த அறையில் அமர்த்திருந்தார்

“வாங்க வணக்கம். நான் தான் இந்த ஓட்டல் முதலாளி என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.

இருவரும் விக்கித்து நின்றார்கள்.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *