2024 ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை, வினேஷ் போகத்தின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என்று நினைத்திருந்தார். அரியானாவின் பாலாலி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த வினேஷ், தனது கனவை நனவாக்க சில மணி நேரங்கள் மட்டுமே இருந்தது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே அவர் வாழ்நாளின் இலக்கு. அது வெறும் தனிப்பட்ட வெற்றியல்ல; கோடிக்கணக்கான இந்திய மகளிரின் வாழ்விலும் ஒரு விளக்காக இருந்திருக்கும்.
ஆனால் விதி கொடூரமாக மாறியது. வெறும் 100 கிராம், சிறிய நாணயத்தின் எடை, வினேஷின் கனவுக்கும் இடையே நின்றது. தகுதி நீக்கம் என்ற அந்த வார்த்தை, ஒலிம்பிக் அரங்கில் படிந்த குரூரக் குரலாய் வெளியான நொடியில், தன் கனவுகள் கலைந்து போவதாக உணர்ந்தார் வினேஷ்.
சாதித்த வினேஷ் போகத்
3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வினேஷ், மூன்று வெவ்வேறு எடை பிரிவுகளில் போட்டியிட்டார். 2016 இல் 48 கிலோ எடைப்பிரிவிலும் 2020 ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப்பிரிவிலும், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவிலும் என போட்டியிட்டார். 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வினேஷ் போகத், உலகின் நெம்பர் ஒன் ஒலிம்பிக் சாம்பியனான 4 முறை ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாக்கியை தோற்கடித்து சர்வதேச அளவில் முதன்முறையாக வெற்றிபெற்றார். இந்த அபார சாதனையால், ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியி,ல் முதல்முறையாக இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை, தன்னை கொண்டு சென்று நிலைநிறுத்திய வரலாற்று சாதனை நடைபெற்றது.
கடந்த ஒராண்டுக்கு முன்பு, வினேஷ் போகத் ஒரு “அதிக முக்கியமான வேலையை” எடுத்துக் கொண்டு செயலாற்றி இருந்தார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அப்போதைய தலைவரும் பாரதீய ஜனதா கட்சியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிராக குரல் கொடுத்தார். சக வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியாவுடன் இணைந்து அவர் மீது பாலியல் புகார்கள் கூறி தெருவில் இறங்கி பல வாரங்கள் போராட்டங்களை தலைமை தாங்கினார்.
இடைவிடா போராடும் திறம்
வினேஷ் போகத் டெல்லியின் தெருக்களில் பல மாதங்கள் போராடி, தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு விருதுகளான ‘கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ ஆகியவற்றை டெல்லியில் நடைபாதையில் விட்டுச் சென்றனர். மேலும் தனது பதக்கங்களை கங்கையில் தூக்கி எறிய தயாரானார். எவ்வளவு கஷ்டமானது என்றாலும், பாரிஸ் ஒலிம்பிக் பதக்கத்தை வாங்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார். தனது எடையை குறைத்து, தனது தற்போதைய இயல்பான எடையைவிட ஆறு கிலோ குறைவாக போட்டியிட்டு, நுணுக்கமான புத்திசாலித்தனத்துடன் 4 முறை ஒலிம்பிக் சாம்பியனான சுசாக்கியை தோற்கடித்து ஒலிம்பிக்கில் மிகப் பெரிய ஆச்சரியங்களை உருவாக்கினார்.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலை யாராலும் மறக்கமுடியாது. இருப்பினும் வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் சாதனையை மறந்துவிடவோ மறைத்து விடவோ முடியாது. அவரது சாதனைகளானது, பல தடைகளை கடந்து தன்னம்பிக்கை கொண்ட ஒரு வீராங்கனையின், இடைவிடாத எதிர்வினையானது, இந்திய பெண்களின் வாழ்க்கை வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய மல்யுத்த வரலாற்றிலும், ஒலிம்பிக்கிலும் முக்கியமாக எழுதப்படும் என்பதை மறுக்க முடியாது.